பொறுப்பா இருங்கப்பா : இயக்குநர்களுக்கு வசந்தபாலன் அறிவுரை!

merlin-audio-lunch-21-1பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் வ.கீரா, சற்று இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’.

ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியன் நடித்திருக்கிறார். கதாநாயகியாக  சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள அஸ்வினி நடித்துள்ளனர்.

இவர்களுடன் தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி ‘தினேஷ்’ கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் மற்றும் விளம்பரப் பாடல் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்தபாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா, நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், “என் நண்பன் நா.முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன். ஆனால் சிங்கம் புலியின் பேச்சு இன்று  என்னை சிரிக்க வைத்துவிட்டது.

மிக மோசமான காலக்கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக் காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குநர்கள் பொறுப்பாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்…” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப் போடும். ‘பராசக்தி’யில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும், ‘காக்கா முட்டை’, ‘ஜோக்கர்’ மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.

இந்த ‘மெர்லின்’ படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடலை பார்த்தேன். பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய் படங்களை காட்டிலும் ‘மெர்லின்’ வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர்கள் தங்கர்பச்சான், தாமிரா, மகிழ் திருமேனி உட்பட அனைவரும் “மெர்லின்’ படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு  இப்படத்தின் டீஸரும், ப்ரோமோ சாங்கும் சான்றாக அமைந்துள்ளது..” என்று பாராட்டு தெரிவித்தனர்.