‘போர் தொழில்’ விமர்சனம்

சரத்குமார், அசோக் செல்வன்,நிகிலா விமல் , சரத் பாபு,நிழல்கள் ரவி, ஓஏ கே.சுந்தர் ,சந்தோஷ் கீழாட்டூர் , பி. எல். தேனப்பன்,சுனில் சுகடா, ஹரிஷ் குமார் நடித்துள்ளனர்.

விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார் .கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார்.அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், F4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன.சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.

’போர் தொழில்’ படத்தின் கதை என்ன?

திருச்சிப் பகுதியில் தொடர் கொலைகள் நடக்கின்றன.ஆனால் அந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ள விதம் வழக்கமாகப் பழிவாங்கும் நிலையிலோ வெறிகொண்டு தாக்குதல் போலவோ இல்லாமல் புத்திசாலித்தனமும் குரூரமும் நிதானமும் கலந்த ஒரு மனநிலையோடு செய்யப்பட்டதாக இருக்கின்றன. குற்றவாளி காவல்துறை நெருங்க நெருங்க பிடிப்படாமல் போய் ஒரு கட்டத்தில் காவல்துறைக்குள்ளேயே நுழைந்து விடுகிறான்.அதன் பிறகு காவல்துறை புது உயிர்ப்பு பெற்று குற்றவாளியைத் தேடித் துரத்துகிறது.குற்றவாளியை நாம் நெருங்காவிட்டால் அவன் நமக்கு எதிர் நின்று சீண்டி, சவால் விட்டுக் கொண்டே இருப்பான் என்று புரிந்து கொண்ட காவல்துறை அவனை நெருங்குகிறது. போக்கு காட்டிக்கொண்டே செல்லும் அவன் நெருங்கி நிற்கும் போது அவனது முன்கதை யாரும் எதிர்பார்ப்பு விதமாக இருக்கிறது. முடிவு என்ன என்பதுதான் ’போர் தொழில்’ படத்தின் கதை.

எத்தனையோ படங்களில் குற்றவாளிகளைத் தேடி போலீஸ் விசாரணை செய்யும் காட்சிகளையும் துப்பறிவதையும்,பார்த்திருப்போம்.ஆனால் காவல்துறையில் புறவய வெளிப்பாடுகளே பெரும்பாலும் படங்களில் காட்டப்பட்டிருக்கும். காவல்துறையினர் அக வெளிப்பாட்டையும் இதில் காணலாம்.

இப்படத்தில் விசாரணை அதிகாரிகளாக சரத்குமாரும் அவருக்கு உதவும் ஜூனியர் அதிகாரியாக அசோக் செல்வனும் நடித்துள்ளார்கள்.சரத்குமார் அனுபவமுள்ள வைரம் பாய்ந்த கட்டையாக இருக்கிறார் .அவர் யாரையும் எளிதில் அங்கீகரிக்க மறுப்பவர். இந்த நிலையில் அவருக்கு இளநிலை அதிகாரியாகச் செல்லும் அசோக் செல்வனுடன் ஈகோ யுத்தம் நடத்துகிறார். இது சார்ந்த காட்சிகள் மிகவும் நுணுக்கமாகவும் ஒவ்வொரு பாத்திரத்தின் மன அசைவுகளைப் பேசும் வகையிலும் உள்ளன.உலக இயக்கமே மனிதர்களின் மன உணர்வுகளைச் சார்ந்ததுதான்.மனிதர்களின் குணச்சித்தரிப்புகள் அவர்களது  அனுபவங்களால்தான் வார்க்கப்படுகின்றன  என்பதை சரத்குமார், அசோக்செல்வன் ஏற்றிருக்கும் பாத்திரங்கள் மூலம் அவர்களின் பின்னணியைக்காட்டி, வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர்.

விசாரணையின் போது மேல் கீழ் அதிகாரிகளின் ஈகோ யுத்தமும் ஆணவச் சிக்கலும் வழக்குகளை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.காவல்துறையினர் குற்றங்களை அணுகும் போக்கும், பணி அழுத்தத்தால் நிகழும் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

காவல்துறை பணி என்பது ஒரு போர் போன்றது, நித்தம் யுத்தம் என்று அதைப் பணியாக,தொழிலாகக் கொண்ட காவல் துறையினரின் கதை என்றும் இந்தப் ‘போர் தொழில்’ படத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். அதாவது  தினம் தினம் கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகளுடன், எதிரிகளுடன் போரிடுவது தான் தங்கள் தொழில் என்று காவல்துறை இருக்கிறது என்றும் உணரலாம்.

படத்தில் சரத்குமாரும் அசோக்செல்வனும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர் என்று சொல்ல வேண்டும். சரத்குமார் ஆர்ப்பாட்டம் இல்லாமலே மிகை இல்லாத உடல் மொழி, அளவான வசனங்கள் என்று தனது பாத்திரத்தை அணு அணுவாக நம்மிடம் கடத்துகிறார் .அசோக் செல்வன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அமைதி காக்கிறார்.அசோக்கின் அமைதி முகம் வெப்பத்தைத் தேக்கி வைத்திருக்கும் பெட்ரோலை நினைவூட்டுகிறது.

இருவரிடமும் அனுபவசாலி யார் புத்திசாலி யார் என்கிற  போட்டியில் விலகல் இருப்பதும் பின்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் என இரு வேறு வகை நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புகள். இறுதியில் இருவரும் புரிதலுடன் இணையும் போது தனி ஒரு புது கெமிஸ்ட்ரி உருவாகிறது.

நிகிலா விமல் அழகாக இருந்தாலும் தேவைக்கேற்ப அளவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார். சரத்பாபுவின் கடைசிப் படம் இதுவாகத்தான் இருக்கலாம் என்றாலும் தனது எதிர் மறை நிழல் விழுந்த பாத்திரத்தில் இறுதி முத்திரை பதித்துள்ளார்.நிழல்கள் ரவி ,தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், ஓஏ கே.சுந்தர் போன்ற தெரிந்த முகங்களும் ,படத்தில்  தோன்றியுள்ள பெயர் தெரியாத முகங்களும் கூட மனதில் பதிகின்றன.

ஏக்கமும் அவமானமும் மன அழுத்தமே மனப்பிறழ்வாகி, மனநோயாளராகி, குற்றவாளியாக முடியும் கதை இது. குற்றவாளிகள் எதனால் உருவாகிறார்கள் என்பதைப் பார்க்காமலேயே பல வழக்குகள் முடிவடைகின்றன. அவர்கள் உருவாகும் பின்னணி ஆராய்ந்து களைந்தால் சமூகக் குற்றவாளிகள் பெருகுவது தடுக்கப்படும். பெரும்பாலும் மன அழுத்தம் கொண்டவர்களும் அன்புக்கு ஏங்குபவர்களும் அவமானப்படுத்துபவர்களுமே இப்படிக் கொடூரமான குற்றச் செயல்களை ஈடுபடுகிறார்கள், இந்த வகைமைக் குற்றவாளிகள் காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை தனது இரண்டு பிரதான பாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.காட்சிகள் நிகழ்விடங்களை இயல்பு ஒளியோடு பதிவு செய்துள்ள விதமும் கேமராக் கோணங்களும் படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.ஒரு திகில் படத்துக்கான பழகிப்போன இசையைத் தராமல் புதுமை காட்டியுள்ளார் .

சினிமா பல்தொழில் கூட்டு முயற்சி . வெவ்வேறு திறமை கொண்டவர்கள் பளிச்சிடுவதற்கு வாய்ப்பு தருபவரே நல்ல இயக்குநர் அப்படி இதில் இயக்குநர் தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாமல் பிற தொழில்நுட்பக்கலைஞர்களையும் ,நடிப்புக் கலைஞர்களையும் தங்களது முத்திரைகளை பதிக்க அனுமதித்து வெற்றி பெற்றுள்ளார்.அதற்காக அவரைப் பாராட்டலாம்.

ஒரு சீரியல் கில்லர் கதையை எடுத்துக் கொண்டு,சஸ்பென்ஸ் குறையாத விறுவிறுப்பான திரைக்கதையால் நம்மை இறுதி வரை இருக்கை நுனியில் அமர வைத்துள்ளார். சினிமாத்தனம் எட்டிப் பார்க்காத பாத்திரச் சித்தரிப்புகள், கதையைச் சொல்வதில் உள்ள நிதானம், விசாரணை காட்சியில் உள்ள விஸ்தாரம்,துறை சார்ந்த விவரணைகள், வழக்கம்போலல்லாத போலீஸ் நடவடிக்கைகள், இயல்பு மீறாத அதேவேளை கூர்மையான வசனங்கள் என்று இயக்குநர் தனித்துவம் கொண்டவராக வெளிப்படுகிறார். பல காட்சிகளில் நம்பகத்தன்மைக்காக ஆய்வு நோக்கில் தேடி இருப்பது புரிகிறது. அதிகம் பேசாமலேயே சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிந்திக்க வைக்கும் படியும் பாத்திரங்களின் உள் மனதை அறியும் படியும் செய்துள்ளார் இயக்குநர்.

உலகத்திலே பெரிய ஆயுதம் அன்பு தான் அதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்கலாம்.ஒரு நூலகம் திறக்கப்படும் போது பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்பது போல் குடும்பத்தில் அன்பு நிலவும் போது காவல்துறைக்கு வேலை இல்லை என்கிற கருத்தை விதைக்கிறது இந்தப் படம். இந்த அவசர காலகட்டத்தில் சக மனிதரை நேசிக்க வேண்டும் என்று வன்முறை கலந்து கூறியுள்ளார் இயக்குநர்.கடைசியாக ’ஆதலினால் அன்பு செய்வீர்’ என்கிறார்.

க்ரைம் ,போலீஸ் விசாரணை, துப்பறிதல் சார்ந்த திரில்லர் படங்களில் ‘போர் தொழில் ‘நிச்சயமாக குறிப்பிடத்தக்க கவனிக்கத்தக்க ஒரு படம்.ரசிகர்களுக்குச்  சிறந்த திரில்லர் அனுபவம்.