‘மதிமாறன்’ விமர்சனம்

நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் உருவக் கேலியை எதிர்கொண்டு அவமானப்பட்டு மனம் புண்பட்டிருப்போம்.இப்படம் உருவக் கேலி மனநிலையைக் கண்டனம் செய்கிறது.

படத்தின் கதை எப்படி?

ஒரு பெண்பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை என்று இரட்டையரில் ஒருவராகப் பிறந்தவர் நாயகன் வெங்கட் செங்குட்டுவன் .உடன் பிறந்த அக்கா இயல்பாக இருக்க, இவர் ஒரு Dwarf ஆக உள்ளார்.அதாவது உடல் வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்.அதனால் கேலி கிண்டல்கள் அவமானங்களைச் சந்திக்கிறார்.இது வாழ்வின் அனைத்து தருணங்களிலும் நிகழ்கிறது. ஆனாலும் மனமுதிர்ச்சியோடு அவற்றைப் புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு முன்னே செல்கிறார்.தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றத்தின் பின்னணியை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

சென்னை அபார்ட்மெண்ட் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்படுகிறார்கள். இவ்வகையில் பெண்கள் காணாமல் போவது தொடர்கிறது. இந்தத் தொடர் கொலைகளைச் செய்வது ஒரே நபர் தான் என்பது புரிகிறது. போலீஸ் மோப்பம் பிடிக்கிறது. ஆனால் விவரங்களை வெளியிடாமல், ரகசியம் காக்கிறது. கொலையாளியைத் தேடி வருகிறது.

இன்னொரு புறம் நாயகன் வெங்கட் வீட்டைவிட்டு வெளியேறிய தனது அக்காவைத் தேடி திருநெல்வேலியில் இருந்து சென்னை வருகிறார். நாயகன் வெங்கட் செங்குட்டுவன், மகள் காணாமல் போன ஒரு பெற்றோரைச் சந்திக்கிறார். அவர்களது கவலையை அறிந்து காணாமல் போன அவர்களின் பெண்ணைக் கண்டுபிடிக்க, தனது கல்லூரி தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதியைச் சந்திக்கிறார். அவரது உதவியோடு களத்தில் இறங்குகிறார். பிறகு என்ன நடந்தது?, மர்மக் கொலைகளின் பின்னணி என்ன?, சகோதரி
என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், முதல் படம் போல் அல்லாமல் தயக்கமில்லா நடிப்பில் கவனம் பெறுகிறார்.

தன்னைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு பலரும் தனது வளர்ச்சிக் குறைபாட்டை மறைமுகமாகக் காட்டும் போதும், தன் தாய், தந்தை இறக்கும் போதும் உணர்ச்சிகரமாக நடித்துள்ளார். உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டுமே பளிச்.

வளரும் நாயகி இவானா, இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்தது வியப்புதான்.அவர் தோற்றம் படத்திற்குப் பலம் தான் இருப்பினும் பெரிதாக நடிப்பு வாய்ப்பு இல்லை.

வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரித் தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா தோற்றம், நடிப்பு எனக் கவனம் ஈர்க்கிறார். வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் என மற்ற பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் வருகிறார்கள்.

பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் தரத்தைக் கூட்ட உதவியிருக்கின்றன..

எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் தாழ்வுணர்ச்சியையும் மனப்போராட்டத்தையும் சொல்ல முயன்று அத்துடன் ஒரு குற்றம் சார்ந்த மர்மக் கதையையும் சேர்த்துக் கூறியவிதம் நன்று. உருவக்ே லிக்கு எதிரான கருத்தை முன் வைத்ததற்கு சபாஷ் போடலாம்.

முழுக்க முழுக்க கதை வெங்கட் செங்குட்டுவனின் வாழ்க்கை சுற்றியே கதை நகர்வதால், படத்தின் மையக்கதையான மர்மக் கொலைகளும், அதன் பின்னணியும் ரசிகர்களிடம் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

”சாதித்தவர்களைச் சாதனையாளர்களாக பார்க்கும் இந்த உலகம், மாற்றுத்திறனாளிகள் சாதித்தால் தான் அவர்களை சக மனிதர்களாகவே பார்க்கிறது” போன்ற பளிச் வசனங்கள் கைதட்டல் பெறும்.

செங்குட்டுவனின் உணர்வுகளைப் புரிய வைக்க நாடகத்தனமான காட்சிகளும் உள்ளன. அவருடைய புலன் விசாரணை முறை சற்று சுவாரசியம் தருகிறது.

நெடுமாறனுக்காகவும், அவருடைய மதி கூர்மையான வேலைகளுக்காகவும் இந்த ‘மதிமாறன்’ படத்தைப் பார்க்கலாம்.