விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 இல் வெளியாகிறது. 
பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடர் இது.
ஒரு போக்குவரத்து வசதிகளற்ற நவீனம் எட்டிப் பார்க்காத மலைக்கிராமப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முத்துக்குமார் சிங்கம்புலி உள்ளிட்ட காவலர்கள் பணியாற்றுகிறார்கள். அங்கே வம்பு வழக்குகள் ஏதும் இல்லாததால் மூடிவிடும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அங்குள்ள பொட்டல் வெளியில் பாறைகள் நடுவே ஒரு தலை வெட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஆடு மேய்க்கும் ஒருவன் தகவல் சொல்லவே, காவல் நிலையத்தில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அதற்குப் பிறகு அதற்கான விசாரணையில் இறங்குகிறது காவலர் குழு. போகப்போக முன்கதைக் காட்சிகள் விரிகின்றன.
அந்தத் தலை விஜய் சேதுபதியின் தலை. உடல் பகுதியோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் தேடுதல் வேட்டையில் இறங்குபவர்கள் மதுரை, கேரளா என்று பயணப்படுகிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் பிளாஷ் பேக் கதைகள் சுவாரசியமாக இருக்கின்றன.
முதலில் காவல் நிலையத்தில் பாம்பு புகுந்துள்ளதாகத் தொடரின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அது சார்ந்த காட்சிகள் வேடிக்கையாகவும் கலகலப்பாகவும் உள்ளன.ஆட்டுப்பட்டி வைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வரும் அந்த ஊரில், வேலை பார்க்கும் காவலருக்கும் ஏராளமான ஆடுகள் உள்ளன அது சார்ந்த காட்சிகள் தனியான அனுபவம்.
காவல் நிலையத்தைப் பொதுவாகப் பரபரப்பு பதற்றம் என்று காட்டுவார்கள் ஆனால் அது குற்றவாளி இல்லாத காவல் நிலையம் என்பதால்,அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கிறது. அதன் பிறகு பரபரப்பாகத் திரைக்கதை திசை மாறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் சொல்லும் சம்பவங்களை வைத்து கதை பின்னோக்கிச் செல்கிறது ,காட்சிகள் சுவாரசிய தோரணம் கட்டுகின்றன.
ஒரே தொடரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும் பல்வேறு பின்புலக் காட்சிகள் நல்ல காட்சி அனுபவம். அங்கே நடக்கும் சம்பவங்கள் சுவாரசியத்தையும் பரபரப்பையும் தூண்டுகின்றன. இப்படி ஒரு கலகலப்பான பரபரப்பான சுவாரசியமான காட்சிகளின் தொகுப்பாக இந்த இணைய தொடர் உருவாகி இருக்கிறது.
முத்து பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத ஒரு பாத்திரம்.அதற்கேற்ற மாதிரியான காட்சிகள் உள்ளன.
மதுரையில் கண்மணிநடனக் குழுவில் ஆடும் பெண் அவமானப்படுத்தும் போது திடீரென்று உள்ளே நுழைந்து தனது முரட்டுத்தனத்தைக் காண்பிக்கும் போது ஆச்சரியப்பட வைத்தவர்,ஒரு ஓட்டல் காரரிடம் தான் ஏழு கொலை செய்தவர் என்று கூறும் போது நம்மை அதிர வைக்கிறார்.
விஜய் சேதுபதியைப் போலவே இதில் நடித்திருக்கும் பிற நடிப்பு கலைஞர்கள்
மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ஆகியோரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்தில் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கி உள்ளனர்.
இந்தத் தொடரின் கதை மதுரை, ஒட்டன்சத்திரம், கேரளா என்று பயணம் செய்கிறது . சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே சுவாரஸ்ய நிகழ்ச்சிகளைக் கொண்டு இந்தத் தொடர் உருவாகி இருக்கிறது. சற்றும் சலிப்பும் அலுப்பும் இல்லாதபடியான காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். அவருக்கு ஒத்துழைப்பாக இருந்து இயங்கி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.அஜித்குமார்.
படத்தில் விஜய் சேதுபதி யானை மீது அமர்ந்து வரும் காட்சிகள் பிரமாண்ட உணர்வை அளிக்கின்றன.
மணிகண்டனுக்கு சமுதாயப் பகடி செய்வது கைவந்த கலை. இதில் விஜய் சேதுபதி செய்யும் ஆட்டுப்புழுக்கை வியாபாரம் அதற்கு ஓர் உதாரணம்.
கதாபாத்திரங்களே சுவாரசியமாக இருக்கும் போது அதன் பின்புலக் காட்சிகளும் வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள் மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் .
படத்தின் போக்கை அறிந்து அதன் தன்மையை மேலும் உயர்த்தும் வகையில் இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் .
பொதுவாக தொலைக்காட்சித் தொடரிலிருந்து சற்று மாறுபட்டு இணையத் தொடருக்கான ஒரு டெம்ப்ளேட் உருவாகியுள்ளது. ஆனால் அந்த டெம்ப்ளேட்டில் அமையாமல் அதிலிருந்து விலகி வேறொரு வகையில் இந்த இணையத் தொடர் உருவாகியுள்ளது எனலாம்.தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் எப்போதும் தனக்கான ஒரு தனியான திரை மொழி கொண்டவர்.அந்தத் தனித்துவத்தை இந்தத் தொடரிலும் வெளிப்படுத்தி உள்ளார்.தனது முத்திரையைப் பதித்து ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் மூலம் ஒரு சுவாரசியமான திரை அனுபவத்தை வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும்.


