“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி – ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் த விதமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.
செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில்..

எடிட்டர் சத்ய நாராயணன் பேசியதாவது…

பத்திரிகையாளர்களுக்கு நன்றி. முதலில் விஜய் சாருக்கு நன்றி. முதலில் திரைக்கு வந்து அவருடன் தான் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வாலி மோகன் தாஸ் என் நண்பர், அவர் தந்த வாய்ப்புக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ரசித்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசியதாவது…

இது என் 15 வது படம். வாலி மோகன் தாஸ் என் ஃபிரண்ட், இந்த சூழ்நிலை வாய்ப்பிற்காக அவருக்கு நன்றி. எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த மேடைக்காக ஏங்கியிருக்கிறோம். இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி பேசியதாவது

எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் வாலிக்கும் நன்றி. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதும் அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு உந்துதலாக இருந்தன. படம் ஒரு மன நிறைவை அளிக்கும். இப்படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இயக்குநரின் உதவியாளர்கள் அனைவரும் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .

பாடலாசிரியர் வேல்முருகன் பேசியதாவது,

இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் வாலி அவர்களுக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும். விளையாட்டாக இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை இந்தப் படம் கூறும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது,

இந்த மேடையைப் பாடலாசிரியர் வேல்முருகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாகக் கதாநாயகன் ஹமரேஷ் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் சாய் ஶ்ரீ பேசியதாவது…

எனக்கு இது முதல் படம். திரையுலகத்தில் அறிமுகம் இல்லாத எங்களுக்கு, இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் வாலி சாருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் எங்களை அழகாகக் காட்டியுள்ளார், காட்சியை அழகாக வடிவமைத்துள்ளார். சினிமா என்பது பலரது உழைப்பில் உருவாவது, இப்படத்திற்காகத் தங்கள் உழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. முருகதாஸ் சார் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குத் தமிழ் தெரியாது, ஆனால் எனக்குப் பொறுமையாகச் சொல்லித்தந்து கதாபாத்திரத்தை எனக்குள் கொண்டு வந்த இயக்குநர் வாலி சாருக்கு நன்றி. ஹமரேஷ் தனது வேலையைத் திறம்பட செய்துள்ளார். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது நன்றி.

நடிகை அக்ஷயா பேசியதாவது,

நான் முதலில் வேறு ஒரு படத்திற்காகத்தான் ஆடிசன் செய்திருந்தேன். ஆனால் இப்பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளார், அதிக உழைப்பைத் தந்துள்ளார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்ததற்கு இயக்குநர் வாலி சாருக்கு நன்றி.   

ஆடுகளம் முருகதாஸ் பேசியதாவது…

இந்த ரங்கோலியில் வாய்ப்பு கிடைத்ததே மிக சந்தோஷம். ஹமரேஷ் இவ்வளவு படம் பண்ணியிருக்கிறான் என்பதே இப்போது தான் தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் அவர். அவருக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளது

நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது…

இதுவரை நல்ல மருமகன், போலீஸ் இப்படித்தான் கேரக்டர் செய்துள்ளேன், தமிழ் வாத்தியாராக இப்போது தான் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த வாலி மோகன் தாஸுக்கு நன்றி. ஹமரேஷ் செட்டில் ரொம்ப சின்சியராக மிக அமைதியாக இருப்பார். கண்டிப்பாகப் பெரிய இடத்திற்குச் செல்வார். இயக்குநர் வாலி கடினமான உழைப்பாளி. அவர் வைக்கும் ஃபிரேமே அவ்வளவு அழகாக இருக்கும். அந்த உலகத்திற்குள் போகும் ஆசையைத் தருவார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

கதை நாயகி பிரார்த்தனா பேசியதாவது…

எனக்கு அவ்வளவாகத் தமிழ் தெரியாது. வாலி சார் என் குரு மாதிரி அவர் தான் எல்லாம் சொல்லித்தந்தார். ஹமரேஷ் நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படத்தை எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் நன்றி.

இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…

இந்தப்படம் பார்த்துவிட்டேன், மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் முதல் டீம் மொத்தமும் அட்டகாசமாக உழைத்துள்ளனர். ஹமரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார், புதுமுகம் மாதிரி தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவரும் படத்தைத் தாங்கியுள்ளனர். ஹமரேஷ் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். ஸ்கூல் பசங்களாக நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..

கேலக்ஸி என்றால் நட்சத்திர கூட்டம் என அர்த்தம். தமிழ் சினிமாவில் சிவகுமார் ஃபேமிலி, எடிட்டர் மோகன் ஃபேமிலி என கேலக்ஸி இருக்கிறது. அது போல் அழகப்பன் விஜய் ஃபேமிலி ஒரு கேலக்ஸி, அவர்களோடு நானும் இணைந்து இருக்கிறேன். இந்தப்படம் எனக்கு முக்கியமான படம். இந்தப்படம் இன்றைய மிக முக்கியமான பிரச்சினையைப் பேசுகிறது. கல்வியில் இருக்கும் பெரிய பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசுகிறது. ஹமரேஷ் மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது..

வருகை புரிந்த மூத்த இயக்குநர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி. என்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்னுடன் இணைந்து உழைத்த உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். எல்லோரும் தங்கள் படம் போல் நினைத்து உழைத்தார்கள். ஹமரேஷை வஸந்த் சார் படத்திலிருந்து பார்த்து வருகிறேன் மிக அற்புதமான கலைஞன். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு அதிகம். முருகதாஸ் அண்ணனிடம் கதை சொன்ன போது அவருக்கு ஆச்சரியம், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். எப்போது டேட் கேட்டாலும் ஓடி வந்துவிடுவார். மேலும் என்னை நம்பிய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. உங்களுக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஹமரேஷ் பேசியதாவது..
உங்கள் ஆதரவு எங்கள் எல்லோருக்கும் வேண்டும், இது ஒரு சர்ரியலான மொமண்ட். இந்த மேடையை நினைத்துப் பார்த்ததில்லை. படத்தில் எல்லோரும் எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். நண்பர்களாக நடித்த அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஆடுகளம் முருகதாஸ் உடன் நடிக்க வேண்டுமே என முதலில் பயமாக இருந்தது ஆனால் அவர் நிறையச் சொல்லித்தந்தார். வாலி அண்ணா அவருக்குப் படம் தான் முக்கியம், கட் சொல்லும் வரை எதையும் கண்டுகொள்ள மாட்டார். படம் நன்றாக வர மிகக் கடினமாக உழைத்துள்ளார். பிரார்த்தனாவிற்கு நன்றி. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உதய் மாமா, விஜய் மாமா, அய்யா மூவரும் தான் நான் நடிக்கக் காரணம் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் பேசியதாவது..,
இன்று என் வாழ்நாளில் எனக்கு முக்கியமான நாள். என் பேரன் இன்று கதை நாயகனாக நடித்துள்ளான். நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் திரைத்துறையில் பல பணிகளைச் செய்த பிறகு தயாரிப்பாளராக அறிமுகமானேன். நான் என் குடும்பத்தில் அனைவரையும், படித்த பிறகுதான் சினிமாத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறுவேன், ஆனால் ஹமரேஷ் படிக்கும் போதே நடிகராகிவிட்டார். இந்தப் படத்தில் தமிழ் வாத்தியாராக நடித்தவர் அழகாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் அம்மா கதாபாத்திரம் நடித்த பெண்மணி சிறு பெண் தான் ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் அருமையாகப் பொருந்தியுள்ளார். ஹமரேஷ் அருமையாக நடித்துள்ளார். கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நீங்கள்தான் இந்த படத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் நன்றி.

இயக்குநர் விஜய் பேசியதாவது..

என் மருமகன் முழுக்க தமிழ் பேசியது அழகாக இருந்தது. 2005 மார்ச் மாசம் ஹமரேஷ் பிறந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. உண்மையான உழைப்பாளி, சினிமாவில் ஜெயிக்க எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. வாலி மோகன் தாஸ் நன்றாக இயக்கியுள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

நடிகர் உதயா பேசியதாவது..,

இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் ஒரு கௌரவமான நிகழ்வு. ஹமரேஷ் சிறு வயதிலேயே எனக்குப் போட்டியாக வந்து விட்டான். ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளான், இயக்குநர் சிறப்பான ஒரு படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர், அதுவே இந்தப் படத்திற்கு பலம். தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை முதலிலிருந்து இறுதி வரை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ஹமரேஷ்க்கு நான் ஒரு அறிவுரை மட்டும் கூறுகிறேன். எந்த சமயத்திலும் நடிப்பைக் கைவிடாமல் உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் இதுவே நான் கூறும் ஒரு அறிவுரை. பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
தயாரிப்பாளர் சதீஷ் குமார் சாருக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் இணை தயாரிப்பாளராக இருந்த பாபு ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் இயக்குநர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதாநாயகன் ஹமரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் கதாநாயகனாக வலம் வருவார். நான் படம் பார்க்க வேண்டிய வாய்ப்பு இருந்தது ஆனால் தவற விட்டுவிட்டேன். படத்தின் டிரெய்லரைப் பார்தேன் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் அழகாகப் படத்தை இயக்கியுள்ளார், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு அழகான காவியத்தைக் கொடுத்துள்ளனர். கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர்  பாக்யராஜ் பேசியதாவது..

இந்த படத்தைப் பலரும் பார்த்து விட்டனர் என்று கேட்டதும் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் பலரது பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்த போகிறது. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்து, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். எனக்கும் என் பள்ளிப் பருவம் ஞாபகம் வந்தது. கதாநாயகன் ஹமரேஷ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அதுவே முக்கியம். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை அழகாக உருவாக்கியுள்ளீர்கள். ஏ எல் அழகப்பன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.