‘ரணம்’ அறம் தவறேல்  விமர்சனம்

 வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  ஷெரிஃப் இயக்கியுள்ளார்.
அரோல் கொரோலி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார்.

‘ரணம் அறம் தவறேல்’ என்கிற
இந்தப் படம் ஒரு குற்றம் புலனாய்வு விசாரணை சார்ந்த கதை.
நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 25 வது திரைப்படம்.

வைபவ் சற்று புதிய தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். அவர்  முகச் சீரமைப்பு சிகிச்சையில் தோற்றங்களை வரையும்  ஓவியர். அதாவது ஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்சன் ஆர்ட்டிஸ்ட் . இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நெக்ரோபிலியாக் எனும் வினோத , சட்ட விரோத உளவியல் பாதிப்பிற்குள்ளான எதிர் நாயகனைப் பற்றிய கதையாகவும் உருவாகி இருக்கும் படம்தான் இந்த ‘ரணம் அறம் தவறேல்’ .

நாயகனின் கோணத்தில் படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. நாயகன் காவல்துறைக்குச் சவாலாக இருக்கும் கொலைச் சம்பவம் ஒன்றைப் பற்றி படம் வரைந்து, துப்பு துலக்கி, தொடங்குகிறார். இந்த விசாரணை பார்வையாளர்கள் எதிர்பாராத வகையில் பயணித்து,  இறுதியில் ‘ஒரு உண்மை தனக்கான நியாயத்தை தானே தேடிக் கொள்கிறது’ என்ற முத்திரை மொழியுடன் நிறைவடைகிறது.

கொலைக்கான விசாரணை காட்சிகள் தொடங்கி இடைவேளை வரை படம் பார்ப்பவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகிறது.

நந்திதா, தான் நர்சாகப்  பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் மகளைச் சேர்க்கிறார்.அங்கே மகள் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிடுகிறது. சடலம்
மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கிறது.  நந்திதா தன் மகள் இறந்ததை  நினைத்து அதிர்ச்சியானாலும் மகள் உயிருடன் சுவாசத்துடன் இருப்பதைப் பார்க்கிறார்.இந்தக் கொடுமை குறித்து மருத்துவமனையின் உரிமையாளரிடம் புகார் கூறுகிறார். அவர்களை நம்பவில்லை .எனவே காவல்துறை  உதவியை நாடுகிறார் ஸ்வேதா.

ஆனால் அந்த  மருத்துவமனையின் பிணவறையோ தீயில் எரிந்து கருகுகிறது. இதனால் தன் மகளை உயிருடன் பலி வாங்கிய அந்த மருத்துவமனையின் நிறுவனர், அவரது மனைவி, அவரது மகன் மற்றும்  மருத்துவமனை உதவியாளர், காவல்துறை அதிகாரி ஆகியோரைப் பழிவாங்க திட்டமிடுகிறார். இதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ரணம் படத்தின் கதை.

இதில் நாயகன் வைபவ் சினிமா இணை இயக்குநர்  ஓவியக் கலைஞர் , எழுத்தாளர் என வருகிறார்.

காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது எதிர்பாராத  விபத்தில் சிக்குகிறார்கள்.

அதன் பிறகு அவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது அவருக்கு பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைகளுடன் அவர் குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள இந்த கதாபாத்திரத்தில் நடிகர் வைபவ் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரைம் திரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள  இப்படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் யூகிக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கின்றன.

நந்திதாவின் கதாபாத்திரம் திரையில் தோன்றியவுடன் கதை இதை நோக்கித்தான் பயணிக்கிறது என, எளிதாகக் கணிக்க முடிகிறது. ஆனால் நந்திதாவிற்கும் வைபவ்விற்கும் உள்ள தொடர்பு.. எளிதில் அவதானிக்க இயலாத வகையில் அமைந்திருப்பதால் அதனை உருவாக்கிய இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

சரஸ்வதி மேனன், நந்திதா ஸ்வேதா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கவர்ச்சி நாயகியான தான்யா ஹோப்.. காவல்துறை அதிகாரி வேடத்திற்குப் பொருந்தவில்லை. அவருடைய உச்சரிப்பு தடைக்கல்.

பின்னணியிசையில்  அரோல் கரோலி அசத்தியிருக்கிறார். பாலாஜி கே. ராஜாவின் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

சலிப்பூட்டாத கிரைம் த்ரில்லர் அனுபவம்.