‘ரத்தம் ‘ விமர்சனம்

விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கிறார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரித்துள்ளது.

ஒரு பிரபல ஊடகத்தின் பத்திரிகையாளர் கொலை செய்யப்படுவதில் இருந்து படம் தொடங்குகிறது. தன் அபிமான நடிகர் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக அப்படிக் கொன்று விடுகிறான் ஒரு மூட ரசிக வெறியன்.அந்தக் கொலைகாரன் தன் புத்தியுடன் செய்தானா அவனை மற்றவர்கள் இயக்கினார்களா? என்பதே கதை செல்லும் பாதை . குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வழிதேடி பயணப்படுகிறார் விஜய் ஆண்டனி .அவரது பயணமும் பரபரப்பும் தான் ரத்தம் படத்தின் மீதிக்கதை.

படத்தில் ரஞ்சித் ஆக வரும் விஜய் ஆண்டனி பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர்.தன் வாழ்வில் நடந்த ஒரு துயரத்தை மறந்து அதிலிருந்து வெளியேறுவதற்காக புலனாய்வு வேலையெல்லாம் விட்டுவிட்டு கொல்கத்தா சென்று தன் மகளுடன் தனித்து வாழ்கிறார்.

கொலை செய்யப்பட்ட ஊடகர் செழியன் ,ரஞ்சித்தின் அதாவது விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பர். அது மட்டுமல்ல தனது தந்தைக்கு நிகரான நிழல்கள் ரவியின் மகன்.இந்தக் கொலையின் காரணம் கண்டறிய விஜய் ஆண்டனி களத்தில் இறங்குகிறார். அதன் பின்னே இருப்பது தனிநபர் அல்ல ஒரு வலைப்பின்னல் என்று தெரிகிறது. கொலைகாரன் பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கிறான்.அவனைக் கண்டறிவது சிரமமாக உள்ளது .நிறைய அறிவைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது .

விஜய் ஆண்டனி வழக்கமான தன் பாணியிலான அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பெரும்பாலும் படங்களில் பத்திரிகையாளர்களைப் புரட்சிக்காரன் போல் மிகை நடிப்பை வெளிப்படுத்த விடுவார்கள். இதில் அது இல்லாதது ஆறுதல்.

கிரைம் எடிட்டர் ஆக வருகிறார் நந்திதா ஸ்வேதா .பத்திரிகை அலுவலகச் சூழலில் அவரது பாத்திரம் வெளிப்படுகிறது, குறை இல்லாத நடிப்பும்.சாதாரண தாய் போல வரும் மஹிமா நம்பியார் பாத்திரத்தில் இயக்குநர் ஒரு மர்மத்தை புதைத்து
வைத்துள்ளார் .குறைவான காட்சிகள் என்றாலும் பளீரென மனதில் பதிகிற பாத்திரம்.ரம்யா நம்பீசனுக்கு அவ்வளவாக வேலையில்லை, சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்..அனுபவம் மிக்க நடிகரான நிழல்கள் ரவியை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.

தீவிரமான ஒரு சமூக பிரச்சினையை எடுத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு ‘ரத்தம்’ மூலம்  சுவையான ஒரு வணிகப் படமாக, இதுவரை பார்த்திராத கிரைம் த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

சாதியின் பெயரில் மதத்தின் பெயரில் மொழியின் பெயரில் வர்க்கத்தின் பெயரில் இன்னும் பல பெயர்களில் கொலைகள் நடக்கின்றன.இப்படி கொலை செய்யும் மனிதர்கள் சுய விருப்பத்தின் பேரில் செய்கிறார்களா அல்லது அவர்களை மற்ற தீய சக்திகள் ஆட்டுவிக்கின்றனவா என்பதை இப்படத்தில் கூற முயன்றிருக்கிறார் இயக்குநர்.

இயக்குநரின் பாதையில் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தும் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனும் இணைந்து பயணப்பட்டுள்ளனர்.

நல்ல ஒரு கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது.சில காட்சிகளில் நாடகத்தனம். காட்சியாக வர வேண்டியவற்றை பேசி ,வசனம் மூலம் காட்ட முயன்று உள்ளார்.சினிமா என்பது காட்சி ஊடகம் அல்லவா?  

காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. ஆனால் படத்தில் வரும் அந்தக் கொலைகளின் நோக்கம் பற்றி அழுத்தமாகச் சொல்லாமல் கடந்து விடுகிறார்.
பல காட்சிகளில் முன் பார்த்த சாயல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வன்முறை பீறிடும் தலைப்பை வைத்தாலும் வன்முறை இல்லாமல் படத்தை முடித்துள்ளார்கள்.பிறரது படைப்புகளைக் குறை சொல்வதும் கேலிசெய்வதும் எளிது .அது இல்லாமல் படம் எடுப்பது சிரமம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார் இயக்குநர் அமுதன்.