‘ரன் பேபி ரன்’ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்ம்ருதி வெங்கட்,ராதிகா, ஜார்ஜ் மரியான், ஜோ மல்லூரி, ஹரிஷ் பெராடி, நாகிநீடு, விவேக் பிரசன்னா, தமிழரசன், கபாலி விஸ்வநாத், ராஜ் ஐயப்பா , பகவதி பெருமாள், பிரியதர்ஷினி என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர்.

கேலி கிண்டல் நக்கல் நையாண்டி என்ற நகைச்சுவைப் பாதையில் போய்க் கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி தனது பாதையில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் இது.

படத்தின் கதை என்ன?

ஸ்ம்ருதி வெங்கட் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்வதில் இருந்து படம் தொடங்குகிறது.

வங்கியில் வேலை பார்க்கும் ஆர்.ஜே.பாலாஜி தனது வருங்கால மனைவி இஷா தல்வாருடன் காரில் வெளியே செல்லும் போது, ​​​​ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காரில் மறைந்திருப்பதைப் பார்க்கிறார்.அவர் யாரிடம் இருந்தோ தப்பித்து வந்துள்ளார்.ஐஸ்வர்யா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாலாஜியிடம் அடைக்கலம் கோருகிறார். ஆரம்பத்தில், தயக்கமாக இருந்தாலும், பாலாஜி அவரைத் தனது வீட்டில் தங்க அனுமதிக்கிறார்.தூங்கி எழுந்து பார்த்தால் அவருக்கு அதிர்ச்சியாக,ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து கிடக்கிறார்.பயந்து போய் பதற்றமும் பரபரப்புமாக ஒரு போலீஸ் நண்பனின் ஆலோசனைப்படி அவர் உடலை அப்புறப்படுத்துகிறார்.அப்படிக் காரில் கொண்டு போகும்போது சில சம்பவங்கள் நடக்கின்றன.அவை என்ன? ஐஸ்வர்யாவை கொல்ல முயன்றவர்கள் யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார்.படத்தின் முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் களை கட்டுகிறது.இரண்டாம் பாதியில் சில சுவாரசியமான திருப்பங்கள் உள்ளன.

ஆர்.ஜே.பாலாஜி முழுக்க முழுக்க சீரியஸ் ரோலில் வருவது ஒரு பெரிய மாற்றம்.முடிந்தவரை முயற்சி செய்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பாத்திரத்தை எளிமையாக ஏற்று நடித்துள்ளார்.இஷா தல்வார்,ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட மற்றவர்கள் தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள்.மேலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆரம்பத்தில் அஞ்சி நடுங்கும் ஆர் ஜே பாலாஜி பிறகு சூப்பர் ஹீரோ போலச் செயல்படுவது உறுத்துகிறது. யுவாவின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற பயணம்.சாம் சிஎஸ் தனது பின்னணி இசையில் காட்சிகளை அர்த்தப்படுத்தியுள்ளார்.