‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

நயன்தாரா ,கவின் ,ராதிகா சரத்குமார் ,கே பாக்யராஜ், பிரபு, அமிர்தா சீனிவாசன், விடிவி கணேஷ், பெப்சி விஜயன் , ரெஞ்சி பணிக்கர், சத்யன் ,ஆதித்யா கதிர், குரேஷி ,காவியா , மைதிலி நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கிறார் விஷ்ணு எடவன்.ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா , இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின் , எடிட்டர்: பிலோமின் ராஜ், கலை இயக்குநர்: கண்ணன்.எஸ் நடன இயக்குநர்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஆடை வடிவமைப்பாளர்: காவ்யா ஸ்ரீராம், அனு வர்தன்.

தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால் ,தயாரிப்பு நிறுவனங்கள் : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ் ,கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: குபேந்திரன் .தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால்,தயாரிப்பு நிறுவனங்கள் : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ்.

கவின் அம்மா பிள்ளையாக வளர்கிறார் .அம்மா மீது பாசம் வைத்துள்ளவர்,ஓர் ஆண் பிள்ளையாக துணிச்சலாக எதிலும் ஈடுபடாமல் இருக்கிறார். அவருக்கு காதலிப்பதற்கு ஆசை. ஆனால் அவர் உள்ளே புதைந்திருக்கும் தாழ்வுணர்ச்சி அவரை வெளிப்படையாகவும் தயக்கமில்லாமலும் பெண்களிடம் அணுகத் தடையாக இருக்கிறது.உறவினர் பெண்ணிடம் தனது காதலைத் தயங்கித் தயங்கி கூற அவர் மறுக்க, இவர் உடைந்து போகிறார்.அதனால் அவருக்கு காதல் கை கூடாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா மீது அவருக்கு காதலும் விருப்பமும் உண்டு.ஆனால் சொல்வதற்கு மனத்தடையாக இருக்கிறது. தனது காதலை நிறைவேற்ற நயன்தாராவுடன் தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாக பொய் கூறுகிறார் .ஒரு சந்தர்ப்பவசத்தால் நயன்தாரா தனது காதலி என்றும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கவின் சொல்லிவிட இரு குடும்பங்களிலும் புயல் அடிக்கிறது .காதலிக்காத பெண்ணை கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லும்போது ஏற்படும் நெருக்கடிகள் சுவாரசியங்கள் பரபரப்புகள் தான் 144.38  நிமிடங்கள் கொண்ட ’ஹாய்’ படத்தின் மீதிக்கதை.

இதில் மயில்சாமி கதாபாத்திரத்தில் கவின் வருகிறார். எல்லாம் இருந்தும் தனக்குள் ஏதோ ஒன்று இல்லை என்று தயங்கித் தாழ்வு மனம் கொண்ட அந்தப் பாத்திரத்தில் அவர் சரியாகப் பொருந்தி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் வாய் நுனி நாக்கு வரை வரும் சொற்கள் உள்ளேயே புதைந்து கொண்டு அதைச் சொல்ல முடியாமல் விழுங்குவதும் என அவர் அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாகவே வெளிபட்டுள்ளார் .கோவை பின்னணி வட்டார மொழி கவினுக்கு மட்டுமல்ல பிற பாத்திரங்களுக்கும் தனி நிறம் கூட்டுகிறது.

நயன்தாரா தேவயானி பாத்திரத்தில் நடித்துள்ளார்.வீட்டை விட்டு வெளியே ஓடிப்போகும் அவர் கையில் வீச்சருவாளுடன் செல்வது, எதையும் துணிச்சலாக அணுகுவது என்று அவர் அந்தப் பாத்திரத்தில் தனித்து தெரிகிறார்.நயன்தாராவின் நட்சத்திர பிம்பம் அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.
அவர் கர்ப்பிணி பெண் வேடம் போடுவது சரியான கலகலப்பாக இருக்கிறது. கவின் தாயாராக வரும் ராதிகா சரத்குமார் முதிர்ந்த தோற்றத்திலும் நடிப்பிலும் என்று அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.
கவின் தந்தையாக வரும் கே பாக்யராஜ் அதிரடி வசனங்கள் அடிதடி என்று அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.பெயர் வரும்போது தெய்வத்திரு கே. பாக்யராஜ் என்று பார்க்கிறபோது அவரது இழப்பை உணர்ந்து ’வி மிஸ் யூ சார்’ என்று சொல்லத் தோன்றுகிறது. நயன்தாராவின் தந்தையாக வருகிற பிரபு ,அந்தக் குடிகாரர் பாத்திரத்தில் நினைவில் நிற்கிறார். பிரபுவை விட்டுப் பிரிந்து போன மனைவி உஷா பாத்திரத்தில் எதிர்பாராத வகையில் தலைகாட்டும் சுகாசினி ரசிகர்களுக்கு எதிர்பாராத இனிய அதிர்ச்சி ருகிறார்.

கவினின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், ஆட்டம் பாட்டம் என்று அந்த நட்புப் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். மேலும் அமிர்தா சீனிவாசன், விடிவி கணேஷ், பெப்சி விஜயன் , ரெஞ்சி பணிக்கர், சத்யன் , குரேஷி ,காவியா , மைதிலி ஆகியோரும் நடித்துள்ளனர்.

மொத்தத்தில் எளிமையாக ஆரம்பிக்கும் கதை பிற்பாதியில் ஒரு திடுக்கிடும் சவாலை எதிர்கொள்கிறது. அந்த முடிச்சை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி எப்படி இயக்குநர் அவிழ்க்கிறார் என்பதே திரைக்கதை சுவாரசியம்.அதை பார்ப்பவர் மனம் ஏற்றுக் கொள்ளும்படி முடித்துள்ளார் இயக்குநர் .

ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவும் , இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டினின் இசையும் இந்த எளிமையான கதைக்கு இரு கை கொடுத்து உதவியுள்ளன.
மொத்தத்தில் இந்த ’ஹாய்’ திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு பார்வையாளர்களுக்கு திருப்தி வரும் வகையில் அமைந்துள்ளது.