கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட் , ஆஷ்னா சவேரி , ராகவ் விஜய் , சேத்தன், தேவதர்ஷினி, மதுமிதா ,சுதா நடித்துள்ளனர்.எம் ஜானகிராமன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சி .. குமார் தயாரித்துள்ளார்.
விடிந்தால் தனது கல்யாணம் என்கிற வகையில் சென்னையிலிருந்து ரயிலில் பெங்களூர் வருகிறார் ராகுல் விஜய் .அவருடன் சக பயணிகளாக வரும் காளி வெங்கட், கலையரசன் மூன்று பேரும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்.காளி வெங்கட் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப்போன தன் மனைவியை அழைக்கவும் கலையரசன் பிரிந்து போன தன் காதலியைப் பார்க்கவும் என்று பெங்களூர் வருகிறார்கள்.
மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் கடந்த காலக் கதையை பற்றிப்பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் உண்டு, பிரிந்து போன காதலி உண்டு.பள்ளிக்காலம் கல்லூரிக் காலம் அலுவலகக் காலம் என்று காலம் வேறுபட்டிருந்தாலும் மொத்தத்தில் மூன்று பேரின் காதல்களும் கவுந்து போன அனுபவத்தோடு உள்ளன. இந்த நிலையில் பேசிக் கொண்டிருக்கும்போது பெங்களூர் வந்து விடுகிறது.ரயில் சினேகம் நெருங்கியதால் அவர்களைத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் ராகவ் விஜய். மணமகனாக ராகுல் மணமகளாக கயல் ஆனந்தி. இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.அவர்களது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் தொடர்புச் சங்கிலி உண்டாகிறது. அது பெரிய திருப்பத்தை உண்டாக்குகிறது. அது என்ன என்பதுதான் 104.48 நிமிடங்கள் கொண்ட’டைட்டானிக் ’படத்தின் மீதிக் கதை.
கலையரசன், காளி வெங்கட் மற்றும் ராகவ் விஜய் மூன்று பேரும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் மூன்று பேருமே எடையைப் பகிர்ந்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
ரயிலில் நண்பர்களான பிறகு தங்களது காதல் கதைகளைப் பற்றி உரையாடிப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் அவர்களின் இயல்பான நடிப்பு கவனிக்க வைக்கிறது.கலகலப்பு நகைச்சுவையும் கூடிய அந்த காட்சிகளில் அவர்களது நடிப்பு, காட்சிகளை ரசிக்க வைக்கும்படி உள்ளது.
காளி வெங்கட் தனது பள்ளிக்கால காதலி பற்றிக் கூறும்போது அவரது நடிப்பு வெகு எதார்த்தம்.கலையரசன் கல்லூரியில் கயல் ஆனந்தியைக் காதலித்து குடும்ப சூழ்நிலையால் பிரிவதைக் கூறும் போது அனுதாபத்தை அள்ளுகிறார்.
ஆஷ்னா சாவேரியை அலுவலகத்தில் கண்டதும் பற்றிக் கொண்டு காதலிக்கும் ராகவ் விஜய்,பிறகு ஒரு மோதலில் பிரிகிறார்.பிறகு திருமண தருணத்தில் காதலியைப் பார்த்து பதற்றம் ஆகிறார்.அந்தக் காட்சிகளில் எல்லாம் ரசிக்கும்படி நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தை தனது இயல்பான துறுதுறு உடல்மொழியால், நடிப்பால் கொண்டு வந்துள்ளார்.காதல், குழப்பம், குற்ற உணர்ச்சி அனைத்தையும் தனது கண்களில் காட்டி உள்ளார்.
இன்னொரு நாயகியாக வரும் ஆஷ்னா சவேரி,திருப்பங்கள் கொண்ட காட்சிகளில் தனது நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படத்தில் துணைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமாரன், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்ட அனைவரும் குறைந்த நேரம் வந்தாலும் மனதில் நிறைகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பல்லு காட்சிகளை வண்ணமயமாகப் படமாக்கிக் காட்சிகளில் ரங்கோலி வரைந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் காதல் மெல்லுணர்வுகளை இசையில் கொண்டு வந்து மனதில் ரீங்காரமிடும் ரகம்.
மூன்று பேரின் காதல் கதைகளின் மையம்தான் பிரதான கதை என்றாலும், அதைச் சுவாரஸ்யமாகக் கூறி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் எம் ஜானகிராமன்.
காதல் வரை செல்கிற படக் கதைகளில் காதலுக்குப் பின் என்ன என்று வாழ்க்கையைப் பற்றிப் புரிய வைத்துள்ளார் இயக்குநர் எம்.ஜானகிராமன்.காதலிக்கும்போது கவர்ச்சியாகத் தோன்றும் எண்ணங்கள் காதலித்த பிறகு பொறுப்பாக மாறுவதையும் கூறி இருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் சினிமா சூத்திரம் பயன்பட்டுள்ளது ஒரு பலவீனம்.அவனவனுக்கு ஒரு நியாயம். சந்தர்ப்பங்கள் தான் அந்த நியாயத்தை முடிவு செய்கின்றன என்கிற வாழ்க்கையின் எதார்த்தத்தை இந்தப் படம் கூறியுள்ளது.சில நாடகத்தனங்கள் இருந்தாலும் அதையும் மீறிப் படத்தை அதன் கலகலப்புக்காகவும் காதல் கதையின் சுவாரஸ்ய ஆட்டத்திற்காகவும் ரசிக்கலாம்.
மொத்தத்தில், ‘டைட்டானிக்’ கவுந்தாலும், காதலைத்தான் பேசும்.


