வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்!

திருக்குறளின் பெருமைகள்!

காலம் தோறும் மதிப்பு மாறாமல் உயர்ந்து கொண்டே இருப்பது திருக்குறள்.தினந்தோறும் கணந்தோறும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது அதன் பெருமை.

ஓடுகிற நதியில் கால் வைக்கும் போது முதலடிக்கும் இரண்டாவது அடிக்குமான நீர் கூட வேறுபடுகிறது என்பார்கள்.
திருக்குறள்  ஓடுகிற நதி.அதுவும் ஜீவநதி . அதைப் பார்க்கும் பார்வையும், புரிந்து கொள்ளும் பொருளும் கால நேரம், மனிதர்கள், மனப்போக்கு, சூழ்நிலை வாழ்வு சார்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு காலத்திலும் திருக்குறளைப் படிக்கும் போது வெவ்வேறு வகையான அகத்திறப்பை அளிக்கும்.திருக்குறளின் பெருமைகள் ஏராளம்.

“வள்ளுவரின் குறளை அவரது தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்பதற்காகவே நான் தமிழ் பயில விரும்புகிறேன் . அற வாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான். வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவை.” என்கிறார்— மகாத்மா காந்தி.

சீர்திருத்தத் திருச்சபை போதகரான எட்வார்டு ஜெவிட் ராபின்சன் “குறளில் அனைத்தும் உள்ளன; அதில் இல்லாதது எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க கிறித்தவ மதபோதகர் இம்மான்ஸ் இ. வயிட் “உலகின் அனைத்து தலைச் சிறந்த அறச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே திருக்குறள்” என்கிறார்.

“குறள் அன்பின் நெறியாகவும் ஆத்மார்த்த வாழ்வின் வரையறையாகவும் திகழ்கிறது” என்றும் “அனைத்து காலத்திற்கும் பொருந்தும் அழிவற்ற இந்நூலானது மனிதகுலத்தின் அனைத்துச் சிந்தனைகளையும் தன்னுள் நீக்கமறக் கொண்டுள்ளது” என்கிறார் மூதறிஞர் இராஜாஜி.

“வாழ்வியலைப் போதிக்கும் அறநூல்களில் குறள் நிகரற்றது” என்று கே. எம். முன்ஷி கூறுகிறார்.

” திட்டமிட்ட சிந்தனைகளிலும் அவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்திலும் இதுவரை வந்த நூல்களனைத்திலும் சிறந்தது” என்று தேசியவாதியும் யோகியுமான அரவிந்தர் கருதுகிறார்.

“தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்” என்று குறளை 1848-ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த இ. எஸ். ஏரியல் கூறுகிறார்.

“உலகின் ஒட்டுமொத்த சிந்தனைகளின் உறைவிடமாகவும் அறங்களின் வழிகாட்டியாகவும் திகழும் நூல் திருக்குறள்” என்கிறார் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் .

இப்படி அரசியல், ஆன்மிகம், சமூகவியல் என அனைத்துத் தரப்பினராலும் திருக்குறள் போற்றப்பட்டு வந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் குறளுக்கு இசையமைத்துப்பாடி அரங்கேற்றம் செய்யப்பட்ட வரலாறு கொண்டது.

திருக்குறள் இசையின் வாகனம் ஏறி உலகை வலம் வரச் செய்துள்ளவர்களில் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி, ரமணி பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர். அது மட்டுமா ?

குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியுள்ளவர்களுள் எம். எம். தண்டபாணி தேசிகர், சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன் முதன்மையானவர்கள் .மதுரை சோமசுந்தரம், சஞ்சய் சுப்பிரமணியன் ஆகியோரும் குறளை இசையாகப் பாடியுள்ளனர்.

1818-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த எல்லீசன் வள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார் என்றொரு செய்தி கூறுகிறது.

வள்ளலார் இராமலிங்க அடிகளார் குறள் கூறும் அறங்களைப் பரப்பும் பொருட்டு பொதுமக்களுக்கு தினந்தோறும் திருக்குறள் வகுப்புகளை நடத்தியுள்ளார்.வள்ளுவர் வசப்பட்டவர்களால் 64 ஆவது நாயன்மாராகவும் அவர் கொண்டாடப்படுகிறார்

1968-ஆம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் மக்கள் பார்வைக்காகக் குறட்பா வைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

குறளின் நினைவாகக் கன்னியாகுமரியிலிருந்து புதுதில்லி வரை 2,921கிலோமீட்டர் தொலைவு இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே “திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து” என்று பெயரிட்டுள்ளது.

வள்ளுவருக்கான கோயில்களும் நினைவிடங்களும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன.சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் 1,330 குறட்பாக்களும் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

இப்படித் தொடரும் பெருமை,கன்னியாகுமரியின் வானளாவிய வள்ளுவர் சிலை வரை நீடிக்கிறது.இவ்வாறாகக் குறளையும் திருவள்ளுவரையும் மக்கள் வழிவழியாகப் போற்றி வருகின்றனர்.

காலம் தோறும் தன்னை உயிர்ப்பித்தும் கால மாற்றத்துக்கு ஏற்ப புதுப்பித்தும் தோற்ற மாற்றம் கொண்டு பேருருவாகவும், ஆழச் சிந்தித்துப் பார்க்கும்போது வேறுருவாகவும் மாறிப் புதிய அவதாரம் எடுத்து வருகிறது திருக்குறள்.

படிக்கும்போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகையான நிறமாலைகள் ஏற்படுத்தித் தோற்றத்தைக் கொடுத்து கலைடாஸ்கோப் அனுபவத்தைத் தருகிறது திருக்குறள்.
அதனால் தான் வள்ளுவரின் மறை,பனை ஓலைக் காலம் தொடங்கி ,காகிதக் காலம் கடந்து கணினிக் காலத்திலும் ஏன் ’ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் புத்துயிர்ப்புடன் நிமிர்ந்து நிற்கிறது.

அப்படிப்பட்ட திருக்குறளுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஓர் உரை எழுதி இருக்கிறார்.

பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி. கவிஞர் வைரமுத்து எப்போதும் பெரிதாகச் சிந்திப்பவர். பழகிய வழி கடந்து புதுப்பாதை அமைத்துப் பயணிப்பவர்.அப்படிப்பட்ட கவிஞர் ஓர் உரை எழுதி இருக்கிறார். அவரது கூற்றுப்படியே இதுவரைக்கும் 850 பேர் உரை எழுதியிருக்கும்போது ஏன் இன்னொரு உரை அதற்குத் தேவை?

திருக்குறளுக்கான பெரும்பாலான உரைகள் முன்னவர்கள் முன்மொழிந்ததை வழிமொழிந்ததாகவே இருக்கும்.சில சொற்களை மாற்றி விட்டு புதிய உரை என்று பாவனை செய்பவை பல. ஆயினும் சிலவற்றில் உரையாசிரியர் என்கிற தனி மனிதர் சார்ந்து உரைகளில் சில மாற்றங்கள் வைக்கப்பட்டே வந்துள்ளன.
காலம் கடந்து நிற்கும் குறளுக்கு உரை வகுத்தவர்கள் பட்டியல் வைரமுத்து வரை கூட நின்று விடக்கூடாது .மேலும் தொடர வேண்டும் .ஏனென்றால் கால மாற்றத்தின் தாக்கம் இதிலும் வெளிப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

மாற்றங்கள் மாறாதவை!

திருக்குறளில் முதல் அதிகாரத்தில் வரும் பொருள் வைக்கும் முறையை ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதை அனைவரும் முதல் குறளாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ‘இருள்சேர் இருவினையும்’ என்ற குறளை மணக்குடவர், பரிப் பெருமாள் 7 ஆம் இடத்திலும்,பரிதி, காலிங்கர் 6 ஆம் இடத்திலும் பரிமேலழகர் 5 ஆம் இடத்திலும் வைத்துள்ளனர்.அதேபோல் அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் குறளை மணக்குடவர் 5 ஆம் இடத்திலும், பரிதி 10 ஆம் இடத்திலும் , பரிமேலழகர் 8 ஆம் இடத்திலும் பரிதி 10 ஆம் இடத்திலும் என்று வைத்துள்ளனர்.மணக்குடவரிடமிருந்து பரிமேலழகர் 120 இடங்களில் பாட பேதம் காண முடிகிறது.

பால்களைக் கூட வ.உ.சி. காமத்துப்பாலை இன்பப்பால் என்றார்.மு.வ. முதலில் காமத்துப்பால் என்றவர் பிறகு இன்பத்துப்பால் என்கிறார். உரைகளை எடுத்துக் கொண்டால் புலவர் அ.மு.குழந்தை உரைதான் திராவிட இயக்கப் பின்னணியில் வந்த முதல் உரை எனலாம்.

திருக்குறள் எழுதிய காலத்திலிருந்து நாட்டு நடப்பு, மக்கள் வாழ்க்கை, சமூகவியல் சிந்தனைகள் போன்றவை பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு பல்வேறு கற்பிதங்களைப் புறந்தள்ளி தற்காலத்தில் சீர்திருத்த சமுதாயமாக வளர்ந்து இருக்கிறது.

இவற்றையெல்லாம் உணர்ந்துதான் கவிஞர் வைரமுத்து புது உரை எழுதி இருக்கிறார்.
இது பற்றி தனது முன்னுரையில், பேசுகிறார்.

“திருக்குறள் ஒரு கலகக்குரல்” என்று தொடங்குகிற அந்த முன்னுரை,
“உரையைப் புரிந்து கொள்ளும் போது காலம் அறிதல், மொழி அறிதல், யாப்பறிதல், வரலாறு அறிதல், தொன்மப் பொருள் அறிதல், இலக்கணத்தின் வழி நின்று இலக்கியத்தின் சிக்கல் அறுத்தல், உரையாசிரியர்களின் உரை வேறுபாடுகளில் ஒப்புமை காணல், உரை எழுதப்படும் காலத்தோடு பொருள் பொருத்துதல், இவையும் இன்ன பிறவும் ஒரு உரையாசிரியர் தான் கொள்ள வேண்டிய தகுதிகள் ஆகும்” என்கிறார்.

அதன்படி கால மாற்றம், மக்கள் வாழ்க்கை ,சமூகவியல் சீர்திருத்தங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிகழ்காலத்திற்கான உரையாக அமைந்துள்ளது.
அந்த மாற்றங்களோடு நிகழ்காலத்தின் நிதர்சனங்களையும் கணக்கில் கொண்டு தான் அவர் எழுதி இருக்கிறார்.எனவே தான் இந்த உரை கவனிக்க வைக்கிறது.

.சில குறள்களில் வள்ளுவரின் சிந்தனை உரத்த குரலில் ஒலிக்கும். கருத்தும் உரத்த தன்மையுடனுடன் இருக்கும்.அறம் ,பொருள் பால்களில் அறத்தைப் பற்றி கூறிய திருவள்ளுவர் இன்பத்துப்பாலிலோ காட்சிச் சித்தரிப்புகளைக் கண்முன் நிறுத்துகிறார். அறத்துப்பால் பொருட்பாலில் ஒரு ஞானி போல் ஞானக்கருத்துக்களை வழங்கிய திருவள்ளுவர், முதியவராக வெளிப்படுவார்.சிலவற்றில் கனிவும் சிலவற்றில் கண்டிப்பும் காட்டி இருப்பார்.அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் அவர் மெய்யியல் கருத்துக்களைப் பிரகடனப்படுத்துவார்.அது ஆணி அடித்தது போல் அவ்வளவு உறுதியாக இருக்கும்.
ஆனால் ?

இன்பத்துப்பாலில் அந்தஉறுதிப்பாடு இருக்காது. உறுதியாக அறுதியிட்டுக் கூறாமல் மயங்கி இருப்பார்.அந்தக் கறார் தொனி இருக்காது. ஏனென்றால் அவரது வயது குறைந்து விடும். அதில் ஒரு மயக்கம் இருக்கும் .அதுவோ இதுவோ ? அப்படியோ இப்படியோ ?என்று கேள்விகளை எழுப்புவார்.அவர் மூத்துக் கனிந்த திருவள்ளுவராக இருக்க மாட்டார். . அவர் இளைஞன் திருவள்ளுவனாக இருப்பார்.

இன்பத்துப்பாலில் அதாவது காமத்துப்பாலில் அரும்பு மீசை கொண்ட இளைஞனாகவே வெளிப்படுவார். அதாவது கூறுமுறையிலும் குரல் ஒலிக்கும் விதத்திலும் வேறுபாடு தெரியும்.

அதே போல் தான் கவிஞரும்  வயது குறைந்து வெளிப்படுகிறார்.

வேதங்கள் நம்பிக்கையை முன்வைக்கின்றன அனைத்தையும் கைவிட்டு நம்புவதன் மூலம் விடிவு கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் வெறுமனே தெய்வ நம்பிக்கை போதுமா? பயன் தருமா? என்ன உரைக்கிறது திருக்குறள்? தெய்வத்தால் ஆகாதெனினும் என்ற குறள் ,தெய்வமே உதவாவிட்டாலும் மெய் வருத்தி உழைத்த முயற்சி கைவிடாது , பலன் தரும் என்கிறது.

திருக்குறள் ஒரு மெய்யியல் நூல் என்றாலும் ஒரு அறிவியக்க நூலாகும். திருக்குறளில் தான் பல வகையான அறிவு பற்றிப் பேசப்படுகிறது.உலக அறிவு, நினைவறிவு,பொது அறிவு, இயற்கை அறிவு, உண்மை அறிவு, ஆயும் அறிவு, மெய்யறிவு, மெய்ப்பொருளறிவு,நுண்ணறிவு ,நூலறிவு , புலனறிவு, புல்லறிவு,வாலறிவு, காரறிவு, பேரறிவு, கல்வியறிவு, கேள்வியறிவு,பகுத்தறிவு, பட்டறிவு போன்று பல வகையான அறிவு பற்றி திருக்குறளில் தான் பேசப்படுகிறது.

அந்த அறிவின் பாதையில் வள்ளுவன் வழி நின்று,அதாவது ‘எப்பொருள் எத்தன்மை ஆயினும்’ பொருளின் மெய்யான பொருளினை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து ஒவ்வொரு குறளையும் கூர் நோக்கி சீர்தூக்கிப் பார்த்து இந்த உரையை கவிஞர் எழுதி உள்ளார்.

பிறரது உரையில் சில குறள்களுக்கான உரை விளக்கங்கள் அகல் விளக்காக இருப்பதைப் கவிஞர் உரை பகல் விளக்காக மாற்றுகின்றன. அப்போதெல்லாம் அவை சூரியச் சுடர் கொண்டு ஒளிர்கின்றன.

அதனால் இவரது பார்வையில் சில குறள்கள் கை விளக்காக இருப்பவை .சில இடங்களில் கலங்கரை விளக்கமாகத் தோன்றுகின்றன.

கவிஞரின் உரையில் புதுப்பொருள் கொண்டு புதுக் குரல் ஒலிப்பது பற்றி ஆங்காங்கே புகார்க் குரல்கள் எழும்பக் கூடும்.அதற்கு முன்பாகச் சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டும்.

சிலவற்றை மாற்றிப் பொருள் கொள்வது நமக்குப் பழகிவிட்டது.’வெகுளி ’என்றால் சினம் அதாவது கோபம் என்று பொருள். ஆனால் ஒன்றும் அறியாதவனை வெகுளி என்று கூறி வருகிறோம். அலட்சியமாக நடந்து கொள்வதை ’அசால்டாக’ என்று பேசுகிறோம் ஆனால் அசால்ட்(assaault) என்பது தாக்குவதைக் குறிக்கும் அதை அலட்சியம் , அசிரத்தை என்ற பொருளில் பயன்படுத்தி வருகிறோம் அல்லவா?.

பகுத்தறிவுப் பார்வை கொண்டு நோக்குதல்!

சொன்ன சொல், சொல்லப்பட்ட காலம் இவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த சொல்லுக்கு உரிய பொருள் கிடைக்கும்.இப்படித்தான் கவிஞர் நேர் நோக்கிப் பார்த்திருக்கிறார்.

ஒரு காலத்தில் உலகைத் தட்டை என்றார்கள்.கலிலியோவின் கண்டுபிடிப்புக்குப் பிறகு இது மாறியது. பூமியை மையப்படுத்தியே கோள்கள் சுற்றுகின்றன என்றார்கள். கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளுக்குப் பிறகு இது மாறியது.ஒரு காலத்தில் 9 கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்றார்கள். பிறகு புளூட்டோவைத் தவிர்த்து விட்டு எட்டாக்கி விட்டார்கள்.
ஒரு காலத்தில் பூமியில் மூன்று பாகமும் நீர்ப்பரப்பு என்றும் ஒரு பகுதியே நிலப்பரப்பு என்றும் பாடங்கள் வந்தன .ஆனால் பிறகுதான் மூன்று பாகம் நீர் இருப்பது பூமியின் மேற்பரப்பில் என்று மாற்றப்பட்டது.இவையாவும் காலமாற்றம்.

அதே பிரபஞ்சம் தான் அதே கண்கள் தான் ஆனால் பார்க்கிற பார்வைகள் மாறுபடுவது போல் ,ஆய்வுகளில் அருகில் நெருங்க நெருங்கத் துலங்கத் தொடங்குவது போல் இந்தத் திருக்குறளுக்கும் உற்றுப் பார்க்கிற பார்வையால் சிலவற்றுக்கு வேற்றுப் பொருள் கொள்ளுமாறு கவிஞர் வினையாற்றி இருக்கிறார் என்றே கூற வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து கருதுகோள்களும் கொள்கைகளும் பரிசீலனைக்குரியவை ,மறு பார்வை செய்யப்பட வேண்டியவையே. அந்த வகையில் மறுபரிசீலனைகள் செய்து ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளதே இந்த உரை எனலாம். இதை அப்படியே நம்ப வேண்டுமா? ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ அல்லவா? சிந்தித்து அதன் பொருத்தப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம் அல்லது விலகி நிற்கலாம்.

“இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டிய வரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்” என்கிறார் கவிஞர்.

இறை நம்பிக்கை நம்பிக்கை குறித்து பொருள் கொள்ளலின் முரண்பாடுகள் முன்பே தொடங்கி விட்டன. கவிஞர் அதனைத் துலக்கிக் காட்டுகிறார்.

மொழியில் உள்ள பொருளை மெய்யான பொருள் என்று மயக்கம் கொள்கிறோம்
ஒவ்வொரு முறையும் இலக்கியம் அதுவரைக்கும் நாம் அறிந்த மொழி பொருளை சட்டென்று இடம் மாற்றி வைத்து பிறிதொன்றாகக் காட்டிவிடுகிறது .அந்த பிறிதொரு தன்மையது புத்தம் புதியதாகத் தோன்றுகிறது.

திருக்குறளில் உள்ள பால்கள், அதிகாரங்கள், குறள்கள் வரிசை வைப்பு முறைகள் நபருக்கு நபர் வேறுபட்டு இறுதியில்தான் ஒரு வடிவத்திற்கு வந்துள்ளன.ஆகவே திருக்குறள் அமைப்பு சார்ந்த சில மாற்றங்கள் கால மாற்றங்களின் விளைவாகவே கருதப்படுகிறது.

இவ்வகையில் கவிஞர் உரையில் செய்திருக்கும் மாற்றங்களில் சமகாலத் தன்மையோடு இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.

திருக்குறளை திருவள்ளுவர் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பது உண்மைதான் இருந்தாலும் இப்படி சொல்லிக் கொண்டே தற்குறிப்பேற்றி விளக்கம் சொல்கிறார்கள்.இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக பல உரைகளை ஆய்ந்து மேய்ந்தோம். அதன்படி தோன்றியவற்றை இங்கே முன்வைக்கிறோம்.

உரைகளில் கடவுள் எனும் கருத்தாக்கம்!

கவிஞர் ‘அறிவு வணக்கம் ‘என்று அதிகாரத்தின் தலைப்பு வைத்த போது பலரும் அதிர்ச்சி காட்டினார்கள்.தெய்வம் என்பது என்ன? உண்மை.
‘உண்மையின் பேர் தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்’ என்று மகாகவி பாரதியார் சொன்ன போது யாரும் அதிரவில்லை.அறிவு தான் உயர்ந்தது ,அதுவே தெய்வத்தன்மை கொண்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
இறையை இயற்கையோடு இணைத்து, கலைஞர் தனது உரையில் ’ஊக்கம் ஆக்கம் தரும் என்பதும் சோம்பல் அழிவு தரும் என்பதும் இயற்கையின் உண்மையே. நல்லவை தீயவையாதலும் தீயவை நல்லவாதலும் இயற்கையே’ என்கிறார்.

இறை நம்பிக்கை குறித்து பலவாறு கருத்துகள் உள்ளன. கடவுள் வாழ்த்தை பாவேந்தர் பாரதிதாசன்’உலகின் தோற்றம் ’என்று கூறுகிறார்.சில குறட்பாகளுக்கு உரை எழுதிய பாவேந்தர் , அந்த உரைகள் சார்ந்து ஆத்திக , நாத்திகப் பார்வையிலான ஐயமும் உரையாசிரியர் விளக்கமும் என்று குயில் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

அப்போது, திருக்குறளை நாத்திகத்தை நோக்கி இழுத்துக் கொண்டு செல்கின்றீர்களா?
என்ற போது பாவேந்தர் கூறியது ‘வள்ளுவர் உள்ளம் நாத்திகமும் இல்லை ஆத்திகமும் இல்லை அவர் நெறி உண்மை நெறி. வையத்தில் வாழ்வாழ் வாங்கு வாழும் நெறி.
மெய்யுணர்வை ஆத்திகன் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். நாத்திகன் கடவுளின்மை தான் மெய்யுணர்வு என்கிறான். இதுதான் நன்று இதுதான் நன்றன்று என்று கருதி நான் மேற்கொள்வது தான் மெய்யுணர்வு” என்கிறார். பாரதி உண்மையின் பெயர் தெய்வம் என்றார். அதன் நீட்சியே இது எனலாம்.

குறளின் முதல் நான்கு அதிகாரங்களைப் பெருஞ்சித்திரனார் ‘அறவியல்’ என்றே குறிப்பிடுகின்றார். அதேபோன்று ‘கடவுள் வாழ்த்து’ என்ற முறையிலிருந்து வேறுபட்டு, முதல் அதிகாரத்தை ‘அறமுதல் உணர்தல்’ என்று தலைப்பிட்டு உரை செய்துள்ளார். கடவுள் வாழ்த்து என்ற ஒன்று உரையாசிரியர்கள் குறிப்பாக, பரிமேலழகர் செய்த ஒன்றே என்று குற்றம் சாட்டுகிறார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ‘ குறளில் கலைஞர் உரையில், அவர் ‘அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை, ஆதி பகவன் உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை’ என்கிறார்.ஆக ‘ஆதி பகவன் உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை’ என்கிறார் .மு.வ வும் தன் உரையில்,’உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது ‘என்று கூறியுள்ளார்.

‘மொழியின் எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதன்மையாய்க் கொண்டவை .அது போல உலகத்தின்உலகத்தின் உயிர்கள் எல்லாம் ஆதி பகவன் என்று நம்பப்படும் மூல ஆற்றலையே முதன்மையாகக் கொண்டவை ‘என்கிறார் கவிஞர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ‘ குறளில்

கலைஞர் ‘அறிவில் மூத்த பெருந்தகையாளர்’ என்று கூறியுள்ளார்.மு.வ வோ ‘தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவன்’ என்கிறார்.பரிமேலழகர் ‘மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களை தொழாராயின்’ என்கிறார்.திருக்குறள் வி. முனுசாமி ‘தூய அறிவினன் மெய் உணர்வினன் ஆகிய இறைவனுடைய நல்ல அடிகள் ‘என்கிறார்.கல்வி கற்றதன் பயன் கடவுளை வணங்குவது என்று ஒரு வரியில் விளக்கம் சொன்னதும் உண்டு.

‘தூய மெய்யறிவின் வடிவமாக விளங்கும் சான்றோர் திருவடிகள்’ என்கிறார் கவிஞர்..

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் ‘ குறளில்,’மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனை பின்பற்றுவோரின் புகழ் உலகில் நெடுங்காலம் நிலைத்திருக்கும்’ .இது கலைஞர் உரை.

மு.வ ‘அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்’ என்கிறார் .

’அறிவின் உறைவிடம் உள்ளம். அந்த உள்ளத்திலே பூப்போல பொருந்தி இருக்கிற அறிவுப் பெரியோரின் மாட்சிமைப்பட்ட அடிகளை நீங்காது நினைக்கிறவர்கள்’என்கிறார் கவிஞர்..

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல ‘ குறளில், ‘விருப்பு வெறுப்பற்று தன்னலமின்றித் திகழ்கின்ற வரை’ என்கிறார் கலைஞர் .
மணக்குடவர் ‘இன்பமும் வெகுளியும் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்’ என்கிறார்.

‘’விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்து வழிகாட்டும் பெரியவர்கள்’’ என்கிறார் கவிஞர்.

‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ‘ குறளில் மட்டும் இறைவனைக் கொண்டு வருகிறார் கலைஞர். ‘இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புபவர்கள் நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்’ என்கிறார்.

‘இறை என்பது ஒரு கருத்துரு. அது மன மயக்கத்தால் விளையும் நன்மை தீமை என்று இருவினைகளையும் கடந்தது என்று கருதப்படுவது. அதன் பொருள் புரிந்து தெளிவு பெற்றவர்கள் விருப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாக மாட்டார்கள் ’என்கிறார் கவிஞர்..

‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ‘குறளுக்கான விளக்கத்தில்,’ ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் ‘என்கிறார் கலைஞர்.

மு.வ. ‘ஐம்பொறி வாயிலாக அவிக்கும் வேட்கைகளை அவித்த இறைவனின் ‘என்கிறார்.

மணக்குடவர் ‘ஐம்பொறிகளில் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி ,நாற்றம், ஓசை என்னும் ஐந்தின் கண்ணும் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது’ என்கிறார். கடவுள் பற்றிக் குறிப்பிடவில்லை.

‘மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்களின் நுகர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஐந்து ஆசைகளையும் அறுத்தெறிந்து பொய்யொழுக்கம் நீங்கி மெய்யொழுக்கத்தில் எவர் ஒருவர் நீங்காது நிலைபெறுகிறாரோ அந்தப் பெருமகனின் வழி நிற்பவர்கள் நெடுவாழ்வு காண்பர்’ என்கிறார் கவிஞர்.

‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது’ குறளில், கலைஞர்,’ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய’ என்கிறார்

மு.வ.,’தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகள்’ என்கிறார் .பரிமேலழகர் ‘தனக்கு உவமை இல்லாதான் தாள்’ என்கிறார்.மணக்குடைவர் ‘தனக்கு நிகரில்லாதானது திருவடி’ என்கிறார்.

கவிஞர் ‘அறிவிலும் ஒழுக்கத்திலும் ஒப்புமை இல்லாமல் உயர்ந்து நிற்கிற பேராண்மையின் வடிவத்தில் நடப்பவர்களைத் தவிர மற்றவர்களின் மனக்கவலைகளைத் தீர்ப்பது அரிதே ஆகும்’ என்கிறார் சற்று விளக்கமாகவே

‘அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது’ குறளில்,

கலைஞர்,’ அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால் அந்தச் சான்றோரின் அடியொற்றி’ என்கிறார்.மு.வ.’அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடி’ என்கிறார்.
மணக்குடவர் ‘அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடி’ என்கிறார்.

‘அறத்தின் கடலாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சான்றோர்களைப் பின்பற்றி நடப்பவர்க்கன்றி மற்றவர்க்கெல்லாம் பிறப்பினால் சூழப்படும் துன்பக் கடலைக் கடப்பது அரிதுதான்’ என்கிறார் கவிஞர் .

‘கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை‘ குறளில்

‘ஐம்பொறிகள் இருந்தும் அவை இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலை’ என்கிறார் கலைஞர்.

கடவுள் தன்மை பற்றி மு.வ, ‘கேட்காத செவி பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை’ என்கிறார்.

‘எண்ணற்ற பெருங்குணங்கள் பொருந்திய பெரியவர்களின் திருவடியை வணங்காதவர்களின் தலையில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள் இருந்தாலும் அவை இயங்காதவை போலத்தான்’ என்கிறார் கவிஞர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’ குறளில்,

கலைஞர் கூறும் போது, ‘ வாழ்க்கை என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர் தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்’ என்கிறார்.

மு.வ. ‘இறைவனுடைய திருவடிகளை’ என்கிறார்.பரிமேலழகர் ‘இறைவனடி என்னும் புண்ணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்’ என்கிறார்.
இதையே மணக்குடவரும் அப்படியே வழிமொழிகிறார்.

‘பிறப்பது என்பது பெருங்கடல். கடந்தாக வேண்டிய கடல். கடக்க வேண்டுமெனில் வாழ்வை வழிநடத்தும் பெரும்பொருளாகிய பேராளுமைகளின் அடியொற்றி நடக்க வேண்டும். இல்லையேல் பிறப்பாகிய பெருங்கடலைக் கடந்தேற முடியாது ‘என்கிறார் கவிஞர். 

காலமாற்றமும் கருத்து மாற்றமும்!

உலகம் ஹாமுராபியின் விதித் தொகுப்பில் இருந்து எவ்வளவோ விதிகள், சட்டங்களைப் பார்த்து வருகிறது.கண்ணுக்குக் கண், கைக்கு கை என்று இருந்த காலம் முதல்,தண்டனைச் சட்டங்கள் மாறிவந்துள்ளன
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்க என்று மன்னிப்பை அறமாகக் கூறியவர் திருவள்ளுவர் மட்டும்தான்.

வரைவின் மகளிர் பற்றி வள்ளுவரே சற்றே கசப்பு காட்டும் போதெல்லாம் கவிஞர் கருணையுணர்வு காட்டுகிறார்.

வரைவின் மகளிர் பற்றி எழுதியது குறித்துக் கவிஞர் பேசுகிறார் இப்படி:

”உலகத்தின் எல்லா இனக் குழுக்களிலும் எச்சில் பட்டவர்களாகவும் இழிவு செய்யப்பட்டவர்களாகவும் கருதப்பட்ட கூட்டத்தை நான் கருணையின் வெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். அவ் வினையாற்றப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். பாவம் பணிக்கப்பட்டவர்கள் என்றே, என் உரை அவர்கள் பொருட்டு உரையாடுகிறது” என்கிறார்.

”பெண்வழிச் சேறல் அதிகாரத்திலும் ஆணாதிக்கச் சிறை வழியே இல்லத்தரசிகளைக் காணாமல் ஆண்களின் கழிபெரும் காமமே கண்டிக்கப்படுகிறது” என்றும் கூறுகிறார்.அதனால்தான் 918 வது குறளுக்கு ‘வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை அவ் வஞ்சனையை’ என்றெல்லாம் புலியூர்க் கேசிகன் உரை எழுதிய போது,கவிஞர்’ பகுத்தறிந்து பார்க்கும் அறிவில்லாதவர்களுக்குப் பொதுகளிரின் முயக்கத்தால் வரும் மாய மயக்கம் என்பது விடுபட முடியாது என்று சொல்லப்படும் அணங்குப்பிடி போன்றதென்று ஆன்றோர் கூறுவர்’ என்கிறார் எச்சரிக்கையாக.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’ (41)குறளில்,

கலைஞர் கூறும் போது, ’பெற்றோர் ,வாழ்க்கைத் துணை ,குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவருக்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்’ என்கிறார்.மு.வ. ‘அறத்தின் இயல்புடைய மூவருக்கும்’ என்று பொதுவாகக் கூறுகிறார்.
மணக்குடவர்,இந்த மூவரைப் பற்றி ‘ தவசி, பிரம்மச்சாரி, துறவியாகிய மூவர்’ என்கிறார்.

அதேபோல கவிஞரும் ,இல்வாழ்க்கை என்கிற போது, வீட்டை விட்டு வெளியே சென்று ’இல்லறத்தான் என்பவன் உறவினர், நண்பர், உதவிக்குரியவர் என்று இயல்பாய் அமைந்த மூவகைப்பட்டவர் ’என்கிறார்.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் .துண்ணாமை நன்று’(259) குறளுக்கு

’நெய் போன்ற பொருள்களை தீயில் இட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமல் இருப்பது நல்லது’ என்கிறார் கலைஞர்.பெரும்பாலும் அதே கருத்தை தான் அனைவரும் கூறுகிறார்கள்.

கவிஞர்,’தீ வளர்த்து அதில் ஊனிட்டு நெய்விட்டு ஆகுதி சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஓர் உயிரை கொன்று உண்ணாதிருத்தல் சிறந்தது’ என்கிறார்.

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’(392 )குறளுக்கு

எல்லோருமே எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என்ற போது,கலைஞர் மட்டும் ’அறிவுக் கண்களைப் பெற்றவர்கள்’என்கிறார்.

கவிஞரோ, ஒரு படி மேலே சென்று,’கணிதம் என்ற கலை அறிவையும் எழுத்தென்ற மொழி அறிவையும் வாழும் உயிர்களுக்கு எல்லாம் வாழ்வை வழி நடத்தும் கண்கள் என்று சொல்வார்கள்’ என்கிறார்.

’உவப்பத்தலைக்கூடி ’ குறளுக்கு (394)’அன்பின் பெருக்கத்தாலும் அறிவின் நெருக்கத்தாலும் மனம் மகிழுமாறு ஒன்று கூடி’ என்கிறபோது உரையாசிரியர் தாண்டிக் கவிஞர் முகம் காட்டுகிறார் .

பிழையாகப் புரிந்து, பழகிக் கொண்டவை!

இறை நம்பிக்கை உள்ளவர்கள் நம்புவது, முருகனை வழிபட்டு ‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் அதாவது கருப்பையில் கரு வளரும்’ என்பதாகும்.
அதைச் ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?’ என்பார்கள்.
‘ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்பதுதான் உண்மையான பழமொழி.அதாவது ஆயிரம் மூலிகை வேரையாவது அகழ்ந்து எடுத்து பயன்படுத்தியவன் பாதி மருத்துவன் ஆகி விடுகிறான் என்பதற்காகச் சொன்னதை ‘ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ‘என்று சொல்கிறார்கள் அல்லவா?அப்படித்தான் திருக்குறளுக்கும் காலகாலமாக ஒருவரால் பிழையாக மொழியப்பட்ட ஒரு கருத்தை பலரும் வழிமொழிந்திருக்கிறார்கள்.

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ‘ (560)
குறளுக்கு ஆபயன் என்றால், ‘ஆக்கப் பணிகள்’ என்கிறார் கலைஞர்.பரிமேலழகர் மணக்குடவர் போன்ற அனைவரும் ‘பசுக்களை’க் குறிப்பிடுகின்றனர்.பரிமேலழகரும் ’ஆவாற் கொள்ளும் பயன் ’ என்கிறார்.ஆறு தொழில்களைப் பற்றிய அவர் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ,ஏற்றல் என்கிறார்.

கவிஞர் ‘ஆகி வரும் பயன்கள் குறைந்து போகும்’ என்கிறார்.

’ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர்” என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு தொடர். இது சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் ஆயர்குடி மடந்தையான மாதரி பற்றிக் கூறப்படும் போது வருகிற வரியாக வருகிறது .இதன் பொருள், “பசுக்களைப் பாதுகாத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலைப் பிறருக்கு வழங்கும் ஆயர்கள்” என்பதாகும் .இவற்றை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அந்த வழியில் தான் கவிஞர் எழுதியுள்ளார்.
குறளில் அடுத்து வரும் அறு தொழிலோர் நூல் மறப்பர் என்பதற்கு பலரும் அந்தணரோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
அந்த அறு தொழில்களுக்கு ‘உழவு, நெசவு ,அமைச்சு அரசு, கற்பித்தல் ,வாணிபம் என்ற வாழ்வியலை இயக்கும் ஆறு தொழில்களும்’ மறந்தே போகும்’ என்கிறார் கவிஞர்.

’மயிர் நீப்பின் உயிர் வாழா’ (969) குறளுக்குக் கலைஞர் எச்சரிக்கையாக ‘உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள்’ என்கிறார். இந்த நம்பிக்கையை அவர் உறுதிப்படுத்தவில்லை.பரிமேலழகரும் மணக்குடவரும் ‘கவரிமா’ என்று தான் கூறுகிறார்கள்.

நாம் பிழையைப் பழக்கி வழக்கமாக்கிக் கொள்வோர் தான். எனவே கவிஞரின் விளக்கம் கண்டு துணுக்குறலாம். கவிஞர் மா என்பதற்கு விலங்கு என்று கூறுகிறார்.’ரோமங்கள் உதிர்க்கப்பட்ட விலங்கு’. என்கிறார்.

அவர் ‘உடலின் கற்றை முடியை கம்பளி போல் கவரியாகக் கொண்டு குளிர் தாங்கும் பனி நாட்டு விலங்கு அந்தக் கற்றை முடி உதிர்ந்து விட்டால் குளிர் தாங்காமல் இறந்து விடும்’ என்கிறார்.

’உடுக்கை இழந்தவன் கை போல’(788) குறளுக்குப் பலரும் ’உடுக்கை இழந்தவன் அணிந்திருக்கும் உடையை நழுவ விட்டவன்’ என்றே கூறினர். கவிஞர் அந்த விரைவு பற்றிக் குறிப்பிடும்போது, ’உடுத்தியிருக்கும் ஆடை அவிழ்ந்து போனால் மூளையின் ஆணைக்குக் காத்திராமல்’ என்ற அறிவியலைப் புகுத்தியவர் ’அனிச்சைச் செயலாய் ’(Reflex action) என்று கால வேகத்தைப் பதிவு செய்கிறார்.

’அருளில்லார்க்கு ’(247) குறளில் அவ்வுலகம் என்பதைத் துறவற வாழ்க்கை என்கிறார் கலைஞர். மு.வ.இவ்வுலகம் என்கிறார் அவ்வுலகம் என்கிறார். அவ்வுலகம்
எவ்வுலகம்? என்று சொல்லவில்லை.மணக் குடவர் மேலுலகம் என்கிறார்.
கவிஞரோ ‘அருட்சிந்தை யற்றவர்களுக்கு நிகழ்கால உலகம், எதிர்கால உலகம் இல்லை’ என்கிறார் ,அதாவது எதிர்காலம்.

’எவ்வ துறைவது உலகம்’(426)குறளில்,உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகிறதோ என்று தற்குறிப்பு ஏற்றுகிறார் கலைஞர். மற்றவர்கள் உலகத்தோடு கண் மூடித்தனமாக ஒத்துப் போக வேண்டும் என்கிறார்கள்.

கவிஞரோ,’உலகத்தில் பொது நன்மை கருதி உயர்ந்தோர் கூட்டம் எவ்வாறு வாழ்கிறதோ அவ்வாறே அவ்வழியில் கலந்து வாழ்வது அறிவுடைமை ஆகும் ‘என்கிறார்.

’இருமை வகை தெரிந்து’ (23)குறளில் ‘நன்மை தீமை என்பதுதான் இருமை’ என்கிறார் கலைஞர்.மு.வ,’பிறப்பு ,வீடு’ என்கிறார். பரிமேலழகர் ’பிறப்பு ,வீடு’ என்கிறார் மணக்குடவரும் அதனையே கூறுகிறார்.

கவிஞரோ, ‘பிறப்பு இறப்பு என்ற இரண்டு எல்லைகளிடையே நிகழும் வாழ்க்கை’ என்று இருமைக்குப் பெருமை அளிக்கிறார்.

‘சிறப்போடு பூசனை செல்லாது’ (18)குறளுக்கு ‘வானமே பொய்த்து விடும்போது அதன் பின்னர் வானத்தில் வாழ்வதாக சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது ?வழிபாடு தான் ஏது?’ என்கிறார் கலைஞர்.அவர்கள் வழியிலேயே சென்று கேள்வி கேட்கிறார்.

மு.வ. ‘வானோர்க்காக நடைபெறும் திருவிழா’ என்கிறார்.பரிமேலழகர் மணக்குடவர் ‘தேவர்களுக்கு’ என்கிறார்கள்.

கவிஞரோ,’வான் புகழ் கொண்டு மறைந்தவர்களுக்கு வழிபாடும் இல்லை.மரபு வழி செய்யப்படும் சிறப்புகளும் இல்லை’ என்கிறார். சரியாகத்தானே இருக்கிறது? அவரது பார்வை?

’வான்நின்று’(11) குறளுக்கு கலைஞர் உள்ளிட்ட பலரும் அமிர்தம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

கவிஞரோ,’வான்மழையினால் இந்த உலகம் இடையறாது இயங்கி வருவதால் அந்த மழையைத்தான் சாவாமருந்து என்றும் அமிழ்தம் என்றும் எண்ண வேண்டும்.’ என்கிறார்.வான் மழையே ஒரு அற்புதம் தானே?

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ’(37) குறளுக்குப் பலரும் நீட்டி முழக்க

‘பல்லக்கில் அமர்ந்து வருவாரைப் போல அறவழிப் பட்டவர்கள் இன்புறுவார்கள். அதனை சுமந்து திரிபவர்களைப் போல அறவழிப்படாதவர்கள் துன்புறுவார்கள்’ என்கிறார் சிக்கலின்றி .

அவ்வித்து (167) குறளில் ‘தவ்வை’ என்று குறிப்பிடப்படுவதற்கு.ஸ்ரீதேவி ,மூதேவி பற்றி சொல்லப்படுவதால்செல்வத்தின் குறியீடாகச் சொல்லப்படுகிறவள் திருமகள் என்னும் இளையவள். வறுமையின் குறியீடாகச் சுட்டப்படுகிறது மூதேவி என்னும் மூத்தவள் ‘என்கிறார். மூதேவி என்பதை அவ சொல்லிலிருந்து காப்பாற்றுகிறார்.

‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்’ (169) குறளில்,’பொறாமை உள்ளம் கொண்ட ஒருவன் செல்வந்தனாய் இருப்பதும் செம்மை உள்ளம் கொண்டவன் வறுமையுற்றுக் கிடப்பதும் இயல்புக்கு மாறானவை; ஆராய்ச்சிக்குரியவை’ என்கிறார்.

‘தீயவை தீய ‘(202) குறளுக்கு,’தீ நன்மை தீமை இரண்டையும் விளைவிக்கும் .தீவினைகளோ தீயவைகளை மட்டுமே விளைவிக்கும்.ஆதலால் தீவினைகளை தீயைக் காட்டிலும் அதிகமாக அஞ்சப்படும் ( தீ மூட்டப்பட்டவனே சுடும் தீவினை மூடியவனையும் சுடும் ஆதலால்)என்று புது விளக்கம் தருகிறார்.

’பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்’ குறளில் வரும் கற்புக்கு இவர் எப்படிக் கூறுவார்? ஏனென்றால் கற்பு என்றாலே கற்பிதம் என்று கூறப்படும் காலத்தில் ?

‘கற்பு என்னும் உள்ள உறுதி மட்டும் வாய்க்கப் பெற்றால் ஒரு மனையாளை விட மேம்பட்ட பெரும் பொருள் வேறென்ன இருக்க முடியும்?’என்கிறார் .

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’ குறளுக்குக் கலைஞரின் விளக்கம் இதோ:’கணவன் வாக்கினை கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனைத் தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப்
பெய்கின்ற மழையைப் போல தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்’.

ஆனால் கவிஞரோ கலைஞரிடமிருந்து சற்றே முரண்பட்டு அந்தப் பெண்மையைப் பெருமைப்படுத்துகிறார்.அவளைப் பற்றி கூறும் போது,
’கட்டமைக்கப்பட்ட தெய்வங்களை வணங்காமல் கட்டி வந்த கணவனையே தெய்வமாய்த் தொழுகிறவள் பெய்யென்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படியோ அப்படி நன்மை தருவாள்’ என்கிறார்.

’எழுபிறப்பும்’(62) எனத்தொடங்கும் குறளுக்கு ,’ஏழேழு தலைமுறை ’என்கிறார் கலைஞர் ’ஏழு பிறவி’ என்கிறார் மு.வ.

கவிஞரும் ’ஏழு தலைமுறைகள்’ என்று கலைஞரை வழிமொழிகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ’ என்கிற போது, கலைஞர் , ’தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்’ என்கிறார்..

கவிஞரோ,’வாழ வேண்டிய அறநெறியில் அருங்குணங்களால் வாழ்ந்து காட்டும் ஒருவன் வானளவு புகழ் கொண்டவர்களின் வரிசையில் வைக்கப்படுவான்’என்கிறார்.

‘இரந்தும் உயிர் வாழ்தல்’ (1062) குறள் பற்றிய விளக்கமாக,’பிச்சை எடுத்தே பிழைக்க வேண்டிய நிலைக்கு இந்த உலகத்தை உண்டாக்கியவனாகக் கருதப்படுகிறவன் எவன்? அவன் எவனாய் இருந்தாலும் அந்தத் துயரத்தை உணரும் பொருட்டு அவனும் இரவலனாய் அலைந்து திரிந்து அழிவானாகுக’என்கிறார்

‘தாமரைக் கண்ணான் உலகை’ (1103)என்பதற்கு எப்படிக் கூறுவார்?’தாமரைக் கண்ணன் உலகு என்று கற்பிக்கப்படும் பேருலகத்தில் கிட்டுவதாகக் கருதப்படும் பேரின்பப் பெருவாழ்வு ‘என்கிறார்.

’அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’
(64) என்கிற போது,’சாவா மருந்து என்றும் சுவையானதென்றும் சொல்லப்படும் அமிழ்தத்தை விட இனியது தம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் சிறு கை விரல்கள் குழப்பிய கூழ்’என்கிறார் கவிஞர்.
இதே பொருள்தான் 82 ஆவது குறளுக்கும் .

’முறைகோடி மன்னவன்’(559) எனத்தொடங்கும் குறளுக்கு ,’முறைதவறிச் செயல்படும் ஆட்சியில் நீரை தேக்கி பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டு போகும். ஆதலால் வான் வழங்கும் மழையை தேக்கி வைத்து வளம் பெற இயலாது’.இது என்கிறார் கலைஞர் நடைமுறை விளக்கம்.

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவ காலம் தவறி மறையும் பொய்யாது என்பது நம்பிக்கை வசப்பட்டது.
மு.வ உரை: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

கவிஞர் ?
‘ஓர் அரசன் நெறி தவறி ஆட்சி செய்தால் அந்த நாட்டில் வானமும் முறை தவறும். மழையும் பெய்யாது. முறை தவறும் ஆட்சி ம சுற்றுச்சூழலைப் பேணத்தவறும். ஆதலால் அதனால் மழை வளம் கிட்டாது ஒழியும்’ என்பது 21 ஆம் நூற்றாண்டு நடைமுறை விளக்கம்.

புத்தேள் என்பதற்கு,இனி வரவிருக்கும் பொது உலகம் ,எதிர்வரும் புத்துலகம்,எதிர்கால உலகம் என வெவ்வேறு  குறள்கள் வரும் இடங்களில் வெவ்வேறு பொருள் தருகிறார்.

அருள் இல்லார்க்கு (247) குறளில்,’ இவ்வுலகம் அவ்வுலகம் என்பதற்கு ,நிகழ்கால உலகம், எதிர்கால உலகம் ‘என இருவேறு உலகங்களைக் கூறுகிறார்..கூற்றம் குதித்தலும் (269) குறளுக்கு,’தவ வலிமையால் பேராற்றல் பெற்றவர்கள் சாவையும் தள்ளிப் போடும் வல்லமை உள்ளவர்கள் ஆவார்கள்’ என்கிறார்.பூதங்கள் ஐந்தும் என்கிற போது ஐந்து பூதங்களும் என்று ஒப்புக்கொள்கிறாரோ என எண்ணினால்,அவன் உடம்பில் உள்ளிருந்து அதனை அறிந்து கொள்ளும் ஐம்பூதங்களும் என்கிற போது ஐம்புலன்கள் என்று கொள்ளலாம்.
‘பிறர்க்கின்னா’ குறளில் (318) வரும் பிறருக்கு ஒரு தீமையை ஒருவன் முற்பகலில் செய்வானாயின் பிற்பகலிலே அந்த தீமையானது யாரும் செய்யாமலே தானாகவே வந்து தாக்கும்.இது கர்மா பற்றிய கொள்கையா என்றால்?

‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என்ற சமுதாய இயங்கியல் இதற்குப் பொருந்தும் ஆதலால் ‘என்கிறார்
கொல்லாமை (326) மேற்கொண்டு குறளில்’கூற்று என்பதற்கு சாவு’ என்கிறார்.

உறங்குவது போலும் சாக்காடு (339) குறளில்,’பிறப்பு என்பது உறங்கி விழிப்பது போன்றது இறப்பு என்பது கனவற்ற உலகத்தில் மீளா துயில் கொள்வது போன்றது’ என்கிறார்.பற்றுக (350)குறளில் பற்றற்றானைப் பெரியோர் என்கிறார்.354 வது குறளில் வரும் ஐயுணர்வுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என்று என்று ஐம் புலன்கள் என்கிறார்.

சூழ்நிலை பண்பே ஊழ் (371) என்பது என்பவர்.அப்படி என்றால் வகுத்தான் (377) யார்?அவனை இவர் எப்படி அழைப்பார் ?’சட்ட நெறிகளும் வாழ்க்கை முறைகளும் விதித்த விதிகள் தான் என்கிறார்.

இப்படியே பகுத்தறியும் வழி நின்று எழுமை என்பதற்குஏழேழு தலைமுறைக்கும் என்றும்,உய்வு என்பதற்கு மீள ஒரு வழி’ என்றும் விளக்கம் கூறுகிறார்.ஒரு பால் கோடாமை என்பதற்கு’ஒரு பக்கமாய்ச் சாராமையும் சாயாமையும் ‘என்கிறார்

இன்பத்துப்பாலில் கவிஞர் பரிமாறும் கவிப்பால்!

இன்பத்துப்பாலில் வரும் 1221 வது குறளான ,’ மாலையோ’எனத்தொடங்கும் குறளில் வரும் மாலைப் பொழுதைப் பற்றிக் கூறும் போது,கலைஞர் ’உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கு ஒரு வாழ்த்து’ என்கிறார்.மு.வ,’மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய் ’என்கிறார்.
பரிமேலழகர் ’மணந்தார் உயிர் உண்ணும் வேலை / மகளிர் உயிரை உண்ணும் இறுதிக்காலம்’என்கிறார்.மணக்குடவர் ’உயிரை உண்பதாகிய ஒரு வேலாய் இருந்தாய் ’என்கிறார்.

கவிஞர் வேலைத் தவிர்த்து விட்டார்.’மணந்தோம் ,ஆனால் கூடும் துணையின்றி பிரிந்திருக்கிறோம்.இவ்வேளை பார்த்து வருகிறாயே, உன் பெயர் என்ன மாலைப்பொழுதா ? இல்லை எங்கள் உயிரை உண்டு முடிக்கும் அந்திமக்காலமாகிய அந்திக்காலமா? நீயாவது வாழ்வாயாக’ என்கிறார் கவிஞர்.

1158 வது குறளான ‘இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு’க்கு மு.வ,உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை. என் உயிருக்கு இனிய வரை பிரிந்து வாழ்வது அதைவிட கொடுமை ’என்கிறார். .

கவிஞர்,’துன்பத்தைப் புரிந்து கொள்ளத் துணை இல்லாத ஊரில் வாழ்வது இன்னாதது அதனினும் இன்னாதது இனியவரைப் பிரிந்து ஒற்றை வாழ்வு வாழ்வது’ என்கிறார்.

கூற்றமோ (1085) குறளுக்கு:’கொலைத் தொழில் செய்வதால் இவள் கண்கள் என்ன கூற்றமோ ? என் கண்ணிரண்டைக் கவ்வுவதால் இது கண்ணோ? மருண்டு நிற்பதால் பிணை மானோ? இவள் பார்வை இந்த மூன்றில் ஒன்றோ ? மூன்றுமோ?’ என்கிறார்.

‘கண்டு கேட்டு’  (1101)குறளுக்கு :அழகின் பருப்பொருள்களைக் கண்களால் கண்டும் மொழி சிணுங்கல் அணிகளால் உண்டாகும் ஓசைகளைக் காதுகளால் கேட்டும் வரைவிலக்கணம் இல்லாத படி நாவினால் உண்டும் இயற்கை செயற்கையாகிய மணங்களை மூக்கால் நுகர்ந்தும் பயிலப்படாத பாகங்களை மெய்யால் தீண்டியும் என்றிவ்வாறு ஐம்புலன்களுக்குமான அரும்பொருள்களை ஒளி பொருந்திய வளை அணிந்த ஒரு பெண்ணிடமே கிட்டுகின்றன என்கிறார் விரிவாக.

‘விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு’ (‘1186) குறளுக்கு ,
’விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்து பரவிடும் இருளைப் போல, இறுகத் தழுவிய காதலன் பிடி சற்று தளறும்போது காதலியின் உடலில் பசலை நிறம் படர்ந்து விடுகிறது’ என்கிறார் கலைஞர்.

’ஒளி எப்போது மெலியும் என்று நேரம் பார்த்திருக்கிறது இருள். ஒளி அணைந்த உடன் குப்பென்று அப்பிக் கொள்கிறது .அப்படித்தான் என் பசப்பு நோயும். என் தலைவனின் தழுவல் நழுவிய உடனே சற்றென்று வந்து ஒட்டிக் கொள்கிறது ’என்கிறார் கவிஞர்.

கவிதை எட்டிப் பார்க்கும் இடங்கள்!

உரையாசிரியராக- உரைநடை ஆசிரியராக உரை எழுதுவது என்பது வேறு.ஒரு கவிஞராக இருந்து கொண்டு உரை எழுதுவது என்பது வேறு.

கவிஞர் சிறுகதைகள் எழுதிய போது கூட ஆங்காங்கே கவிதைகளின் ஈரம் எட்டிப் பார்க்கும். அப்படியே இந்த உரையின் போதும் இந்த கவித்துவம் எட்டிப் பார்க்கும் இடங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அப்படிச் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

’அஃறிணை உயர்தினை என்ற எல்லா உயிர்களிடத்திலும் அருள் நெறிகொண்டும் வாழும் அறநெறியாளர்களே அந்தணர் எனப்படுவார்’என்கிற போது ’அந்தணர் என்பது இனப்பெயர் அன்று குணப்பெயர்’ என்கிறார்.

’தென்புலத்தார்’(43) குறளுக்கு ,முதாதையர் ,வாழ்வாங்கு வாழ்ந்து வழிபாட்டுக்குரியவர்கள், விருந்தினர்கள், சுற்றத்தார், மற்றும் தான் என்ற ஐவகை யாருக்கும் அறவழிக் கடமையாற்றுதல் இல்லறத்தானுக்கு தலையாய பண்பாகும் என்கிறார்.
’மகன் தந்தைக்கு (70) குறளில் எந்நோற்றான் என்பதற்கு என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்தானோ? என்கிறார் கவிஞர்.

’சிறுமைவுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் ‘என்பதற்கு,இங்கே இம்மை மறுமையைக் கலைஞர் ,’வாழும் போதும் வாழ்ந்து மறைந்த பிறகும் ’என்கிறார்.குறளுக்குப் பொருளுமாயிற்று, மறுபிறவிக் கோட்பாட்டுக்கு எதிர்ப்பொருளும் ஆயிற்று.

கவிஞரோ,’எவரையும் இழிவு செய்யாத இனிய சொற்களையே ஒருவன் சொல்லி வருவான் ஆயின் அது அவனுக்கு இருக்கும்போதன்றி இறந்த பிறகும் இன்பமான புகழை வழங்கும்?’என்கிறார்.

ஒறுத்தார்க்கு (156) குறளில்,’பொய்யின்பம் நிலைக்கலாம் ,புகழின்பம் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் ‘என்கிறார்.மிகுதியான் மிக்கவை(158) என்னும் குறளில் மிக்கவை என்பதை ‘செல்வம் சினம் மனம் உடல் வலிமை அதிகாரம் என்ற ஏதேனும் ஒரு செருக்கினால் தீயவற்றைச் செய்தவர்களை தம் பொறுமை என்ற பெருங்குணத்தால் வென்று அதனை மனத்தில் இருந்து மறந்து விட்டு விட வேண்டும்’ என்கிறார்.
‘செவிக்குணவு இல்லாத போது ‘(412) :வயிற்றுக்குச் சென்றடையும் உணவை விட செவிவியே சென்றடையும் அறிவு சிறந்தது என்பது பெறப்படும் (செவி எவ்வளவு அறிவையும் செரிக்கும் .வயிறு குறிப்பிட்ட அளவே செரிக்கும் என்பதும் கருதப்படும்)என்கிறார்.

1232 வது குறளுக்கு, கண்ணீரெல்லாம் உன் காதலர்க்கு எதிரான கெட்ட வார்த்தைகள் .உனக்கு அவர் அருள் செய்ய வில்லை என்பதை ஊருக்கு அறிவிக்கும் அறிவிப்புகள் என்பவர்,1274 வது குறளான முகை மொக்குள், பற்றிக் கூறும்போது,
‘மொட்டினைப் போன்றவள் இந்த முத்தழகி. மொட்டுக்குள்ளே  படிந்திருக்கும் மணம் நாசியை முற்றிலும் சேராது. பட்டும் படாமல் அது வீசும். இந்தப் பேதையின் மலராத உதடுகளுக்குள்ளே மறைக்கப்பட்டிருக்கும் சிரிப்பிலும் ஒரு குறிப்பு உண்டு .அது அறிவுக்கு எட்டாது ‘என்று பொருள் கூறுகிறார்.
1301 வது குறளுக்கு,தலைவி தலைவரைக் கண்டதும் கூடல் குறிப்பைக் காட்டி விடாதே.தாவித் தழுவிக் கொள்ளாதே.சற்றே பிணங்கு; அவரைத் தவிக்க விடு, உன்னால் அவர் உறும் கலக்கம் கண்டு களி ;பிரிவுத் துன்பத்தில் நீ பட்ட பாடு அவர் உறுமாறு ஒருவாறு ஊடு என்கிற போது கவிஞருக்குள் அரும்புகிறது அரும்பு மீசை.

‘கண்டார் உயிர் உண்ணும்’ (1084) குறள் பற்றி,’நல்லழகுக்கு எதிரானது இவளது கொல்லழகுஎன்கிறார்.’கொடும் புருவம்’ (1086) :
அந்தக் கூரான கண்கள் தாராது போயிருக்கும்.1099 வது குறளுக்கு,
‘பொய் பேசாப் கண்களுக்கு பொய் சொல்லக் கற்றுக் கொடுப்பதும் காதலுக்கே உரிய கலைகளில் ஒன்றாகும்’ என்கிறார்.

‘கண்ணொடு கண்’ (1100) குறளுக்கு,’மொழிச் சொற்களைப் போல விழிச் சொற்கள் பொய் சொல்லா என்பதனால், வாய்ச் சொற்களை விட கண் பேசும் சொற்கள் சிறந்தவை’ என்கிறார்.

தாம் வீழ்வார் (1191):காதலித்தவர் காதலிக்கப்பட்டவர் இருவரும் ஒரே மனப் புள்ளியில் இணைந்து கூடுவார்களானால் அவர்கள் விதையில்லாத பழத்தை இடையூறின்றிச் சுவைத்தவர்களைப் போல் இடைவெளியின்றி இன்பம் துய்ப்பவர் ஆவார்.

வாழ்வார்க்கு வானம் (1192):விருப்பப்பட்டவருக்கு விருப்பத்தோடு காதல்  இணை செய்யும் காமக் கருணை என்பது ,வானம் பார்த்து வாழ்பவர்களுக்குத் தேவை பார்த்து மழை பொழிவது போன்றது.
1325 வது குறளான ’தவறு இலர் ஆயினும்’ குறளுக்கு,’உறவு மட்டுமன்று; இந்தப் பிரிவும் ஓர் இன்பம் உடையது தான் .இது உளவியல் சார்ந்த கலவியியல்’ .என்பது வரை இந்தச் சிருங்கார ரசம் சொட்டுகிறது.

இப்படியே கவிஞரின் உரையைப் புரட்டப் புரட்ட ஆங்காங்கே ஆச்சரியப் பொறிகளை உணர முடிகிறது;கவித்துவக் கனிகளை நுகர முடிகிறது;பகுத்தறிவு நோக்கைப் பார்க்க முடிகிறது.
-அருள்