அருண்குமார் சேகரன்,நதியா சோமு ,சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் சேகரன். வினோத் குமார் பி.எஃப்.டி. ஒளிப்பதிவு செய்துள்ளார் .சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் .ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
என்.நாகராஜ் பெருமையுடன் வழங்க சங்கமித்ரன் புரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில்
நாராயண நாகராஜ் , அருண்குமார் சேகரன் தயாரித்துள்ளனர்.
‘ப்ராமிஸ்’ என்று எளிதாகச் சத்தியம் செய்வதில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை எடுத்துக் கூற வந்திருக்கும் படம் ப்ராமிஸ்.அதுமட்டுமல்ல அதே படத்தில் குடிப்பழக்கம் கொண்டு செல்லும் தவறான திசையையும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சினைகளையும் மனம் விட்டுப் பேசுவதில் உள்ள இளைப்பாறுதலையும் அவசர முடிவு எடுப்பதன் ஆபத்தையும் வலியுறுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கமித்ரன் என்கிற மித்ரன் கல்லூரி மாணவி லட்சுமியிடம் காதலில் விழுந்ததால் வேலையில் கவனம் இல்லாமல் இருக்கிறான். லட்சுமி குடும்பத்திற்கு இதில் சம்மதம் இல்லை. இருந்தாலும் மித்ரன் தனக்கே சொந்தம் என்று நினைக்கிறாள்.
அவனுக்கு நண்பர்கள் மூலம் குடிப்பழக்கம் அறிமுகமாகிறது.ஒரு நாள் அவன் குடிப்பதைக் கண்டித்து இனிமேல் குடிக்கக் கூடாது என்று ப்ராமிஸ் செய்யச் சொல்லி லட்சுமி சத்தியம் வாங்குகிறாள்.ஆனால் அவன் அதை மீறி விடுகிறான் .அவர்களுக்குள் பிணக்கு வருகிறது அவள் பேச மறுக்கிறாள்.ஒரு வழியாக மனம் மாறி ஒரு நாள் மலைக்கோயில் வரவழைத்து திடீரென மாலை மாற்றி தாலி கட்டச் சொல்கிறாள். மித்ரனும் வேறு வழி இல்லாமல் தாலிகட்டி விடுகிறான். திருமணம் முடிந்து மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் லட்சுமி கருவுறுகிறாள். ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மருத்துவ சோதனை செய்ததில் அவனுக்கு மட்டும் ஹெச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரிய வருகிறது. இதை எண்ணி அவன் அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு அந்த குடும்பத்தில் புயல் அடிக்கிறது. அவள் அவன் மீது காதலுடன் இருந்தாலும் அந்தப் புயல் திசை மாறி அவர்களை அழைத்துச் செல்கிறது.அவன் ஒரு கட்டத்தில் ஒரு விபரீத முடிவை எடுக்கிறான்.அது என்ன?
இதற்குப் பிறகு இந்தக் கதை எப்படிச் செல்கிறது என்பதைச் சொல்கிற படம் தான் ‘ப்ராமிஸ்’.
இந்தப் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன் சங்கமித்ரன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சுமாரான தோற்றம் சுமாரான உடல்மொழி என்றாலும் அந்தப் பாத்திரத்திற்கு தன்னைப் பொருத்திக் காட்டியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்து அல்லாட்டங்களையும் தடுமாற்றங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நடிகர் நடித்தது போலத் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு முக பாவனைகள் காட்ட முயற்சி செய்துள்ளார்.
குறிப்பாகக் குடிக்கும் காட்சிகளில் எச்ஐவி வந்த பிறகு வருத்தப்படும் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கதாநாயகி லட்சுமியாக நடித்துள்ள நதியா சோமு திராவிட முகத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சுமாரான முக பாவனைகள் காட்டினாலும் போகப் போக கதையின் தீவிரத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் கதையில் துணைக் கதாபாத்திரங்களில் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் மண்ணின் மைந்தர்கள் போல் தெரிகிறார்கள். ஆபத்துக்கு கிடைத்த அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் உள்ளது ஒவ்வொரு காட்சியிலும் படத்தின் பட்ஜெட்டை வெளிக்காட்டும் வகையில் காட்சிகள் எளிமையாக உள்ளது ஒரு பலவீனம்.
இந்தக் கதை வேலூர் மாவட்டத்தில் நடக்கிறது. எனவே அந்த வேலூரின் வெம்மை பூமியைக் காட்டி அந்த நிலக்காட்சியை நம்மை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார். இசையமைப்பாளர் தீபச்செல்வனின் இசையில் பாடல்கள் புரிகிற வரிகளில் உள்ளது பெரும் ஆறுதல்.குறிப்பாக ”தாரகைத் தீவிலே தேன்மழை சாரலே ‘, ‘உதிர்கிறேன் நானடி ‘பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.
முடிந்தவரை தொய்வில்லாமல் காட்சிகளைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஸ்ரீராம் விக்னேஷ்.
மது போதையில் திடீர் முடிவெடுக்கும் மனநிலை கொண்டு செல்லும் ஆபத்தைப் பற்றி இந்தப் படத்தில் கூறியிருக்கிறார்கள் .வாக்கு கொடுப்பவர்கள்,சத்தியம் செய்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டும்.எதற்கெடுத்தாலும் ப்ராமிஸ் ப்ராமிஸ் என்று சத்தியம் செய்வது பெரிதல்ல. அதைக் காப்பாற்றுவதில் பொறுப்பு உள்ளது என்பதை உணரும் வகையில் காட்சிகள் உள்ளன.
படத்தில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் அதிகம்.திரும்பத் திரும்ப வரும் மது அருந்தும் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.முதல் பாதியில் மேலும் சுவாரஸ்யமான காட்சிகளை வைக்க முயற்சி செய்திருக்கலாம் .
இது ஓர் எளிய முயற்சி என்ற வகையில் இதுவும் ஒரு படம் என்று முடங்கி விடுகிறது.
மித்ரனுக்கு எப்படி எச்ஐவி வந்தது என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கிறது. விலை மகள் வீட்டுக்குச் சென்று இருந்தாலும் அங்கு எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றாலும் எச்ஐவி எப்படி வந்தது என்பதற்கான தெளிவான விடை இல்லை.
குடும்பத்தில் நிகழும் முக்கியமான முரண்பாட்டு மோதல்களின் போது கதாநாயகனின் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது பதில் வினை என்ன என்பதைச் சரியாக காட்டவில்லை.
மொத்தத்தில் குடிப்பழக்கத்தின் விளைவுகளையும் அவசர முடிவுகள் தரும் ஆபத்தையும் மனம்விட்டுப் பேசாத மனநிலை தரும் சிக்கல்களையும் எளிய முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்கள் என்று கூறலாம்.


