‘அந்தரன் ‘திரைப்பட விமர்சனம்

பிரஜின், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மென், எம் கே சாம்பசிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார்.கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஹரி எஸ். ஆர் இசையமைத்துள்ளார்.ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரித்துள்ளார்.

கார்த்திகாவை வெவ்வேறு காலகட்டத்தில் ஒவ்வொருவராக மூன்று பேர் காதலிக்கிறார்கள்.அந்தக் காதல் கைக்கூடி வரும்போது திருமணம் நெருங்கும் போது என்ற நிலையில் ஒவ்வொருவராக மர்மமாக இறக்கிறார்கள். ஒருவர் ஊரைவிட்டு ஓடிக்காணாமல் போகிறார். இன்னொருவர் ஒரு விபத்தின் மூலம் கொலை செய்யப்படுகிறார் .மற்றொருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குக் காரணம் தனது தந்தையாக இருக்கும் என்று மகள் காத்திகா போலீசில் புகார் கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் சர்வ செழியன் விசாரணையில் இறங்குகிறார். கார்த்திகாவின் தந்தை ஒரு ஜாதிக் கட்சி தலைவராக இருப்பதால் இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீசுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் மெல்ல மெல்ல அந்தச் சந்தேக வலையில் இருந்து அவரை விலக்கி வைக்கிறது விசாரணைக் குழு.வேறு யார் என்று தெரியாமல் குழம்புகிறது.சந்தேகப்படுபவரை நெருங்கி நெருங்கி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும்போது அதற்கான முகாந்திரம் இல்லாமல் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் செழியன் கார்த்திகாவை காதலிப்பதாகக் கூறித் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். தன்னைத் திருமணம் செய்து கொள்வோருக்கு இறப்பு நேர்வதை எண்ணி கார்த்திகா திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கத் தயங்குகிறார்.மீண்டும் தீவிரமாக விசாரிக்கும் போது கார்த்திகாவின் கடந்த காலத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த ரகசியங்களை வெளிக்கொண்டு வரும்போது பல உண்மைகள் வெளி வருகின்றன.விசாரணைக் குழு வியப்பில் ஆழ்கிறது.அதன் பின்னர் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன? இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணமாக இருப்பது யார் ? என்பதைப் பற்றிச் சொல்வதே 125-26 நிமிடங்கள் கொண்ட ‘அந்தரன்’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் இன்ஸ்பெக்டர் சர்வசெழியனாக பிரஜின் நடித்துள்ளார் . அவருக்கு அந்தப் போலீஸ் பாத்திரம் சரியாகவே பொருந்தி உள்ளது .நிதானமான பேச்சுள்ள அவரது விசாரணையில் அனுபவம் மிகுந்த போலீஸ் அதிகாரி என்ற சித்திரம் வெளிப்படுகிறது. அந்தப் போலீஸ் பாத்திரத்தின் உணர்வை ஏற்ற உடல் மொழியிலும் வெளிப்படுத்தியுள்ளார்.காதல் காட்சிகளிலும் மிகை நடிப்பு இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக கதைநாயகியாக கார்த்திகாவாக நடித்துள்ள இவானா வருண் தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் துறுதுறுப்பான நடிப்பால் பார்ப்பவர்களின் கவனம் பெறுகிறார்.
ஆரம்பத்தில் தனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் திருமணம் செய்வதற்கு முன் கொலை செய்யப்படுவதாக எண்ணி பதற்றம் அடைபவராக நடித்துள்ளார். ஆனால் பிற்பாடு அவர் வேறு முகம் காட்டி நடிப்பில் வேறொரு திசைக்குச் செல்கிறார்.
அந்த வகையில் அவர் அந்த பாத்திரத்தில் குறை இல்லாமல் செய்துள்ளார்.இவானாவின் தந்தையாக வரும் தயாரிப்பாளர் சாம்பசிவம்  ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து இருக்கிறார்..இவானாவின் தாயாக செந்தி நடித்திருக்கிறார்.மனோதத்துவ நிபுணராக அனுபமா குமார் நடித்துள்ளார்.அவரது தோற்றமே பாதி வெளிப்பாடாக மாறிவிடுகிறது.

படம் முழுக்க முழுக்க போலீஸ் விசாரணையைச் சுற்றி நகர்கிறது.போலீஸ் விசாரணையில் ஒரு காதல் கதை போலவும் க்ரைம் கதை போலவும் சரிசமமான அளவில் காட்சிகள் உள்ளன.இந்தக் காட்சிகளை, கதாபாத்திரங்களை முன்வைக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன்.

இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர், கேட்கும் வகையில் பாடல்களை இசையமைத்துள்ளார் .அவை காதல் காட்சிகளுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.

காதல் காட்சிகள் கிரைம் காட்சிகள் மட்டும் இல்லாமல்  உளவியல் சார்ந்த ஒரு விஷயத்தையும் நுட்பமாக இந்தப் படத்தில் வைத்துள்ளார் இயக்குநர். அது என்ன என்பது படம் பார்க்கும்போது தெரியும்.அது வேறு ஒரு திசையில் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள உதவும்.

பட்ஜெட்டில் போதாமை தெரியாமல் திரைக்கதை அமைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளது இயக்குநர் சந்தோஷ் ராவணனின் திறமையைக் காட்டுகிறது.

முற்றிலும் ஒரு க்ரைம் கதையாக அல்லாமல் காதல் கதை போலவும் நினைவில் பதியும் வகையில் சுழலும் கதாபாத்திரங்கள் என்று ஒரு வித்தியாசமான கதை அனுபவத்தைத் தருகிற இந்த ‘அந்தரன்’,  க்ரைம் கதை ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதல் கதை ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.