அகில்யா பாம்ரூ, அயான், ஷாலினி கொண்டெபுடி,நிவேதா பெத்துராஜ்,ராகுல் ரவீந்திரன்துளசி, மகேஷ் அச்சந்தா, வம்ஷிதர்கவுடு,சிவநாராயணா, பானர்ஜி, ஸ்ரீமுக்தா மச்சா, ரச்சார ரவி, யோகி காத்ரி, ஜூனியர் ரேலங்கி, ஆனந்த்பாபு ,இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். அங்கூர் சஞ்சீவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.சொப்னா சினிமா மற்றும் வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் நாக் அஸ்வின் தயாரித்துள்ளார்.
சிங்கீதம் சீனிவாசாராவில் உள்ள சிங்கீதம் என்றல்லாமல் இந்தப் படத்தில் வரும் பெயரை Sing கீதம் என்பதைப் பாடல் பாடு என்கிற பொருளில் புரிந்து கொள்ளலாம்.முழுக்க முழுக்க சங்கீதத்தை அடிப்படையாக வைத்துப் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்து வசனங்களையும் இசையமைத்துப் பாடலாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கமலை வைத்துப் ‘பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத திரைப்படம் இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ் இந்த வித்தியாச படத்தை இயக்கி இருக்கிறார்.
குபேரபுரம் என்ற ஓர் ஊரில் சுரங்கத் தொழில் நடைபெற்று வருகிறது.அந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாததால் பல்வேறு விபத்துகளில் மூலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். அங்கு ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தை தனது தாயாக நினைக்கிறாள் கௌரி. அந்த மரத்தை வெட்ட வருபவர்களைத் தடுத்து அவள் போராடுகிறாள். ஆனாலும் மரம் வெட்டி வீழ்த்தப்படுகிறது. அப்படி இருக்கிற நிலையில் அந்த ஊர் தங்கச் சுரங்க அதிபரின் மகன் என்று பிரதாப் என்கிற வாலிபன் அந்த ஊருக்குள் நுழைகிறான் . கௌரியுடன் பழகுகிறான்.அவன்தான் சுரங்க முதலாளியின் உண்மையான வாரிசா என்று பலருக்கும் சந்தேகம். ஆனால் வியாபாரத்துக்காக அவனை நடிக்க வைப்பதாக ஏற்பாடு. ஆனால் தான் உண்மையான வாரிசு என்று நிரூபிக்க அவன் முயல்கிறான்.இந்த நிலையில் அந்த ஊரில் பேசிக் கொண்டிருந்தவர்கள் பாட ஆரம்பிக்கிறார்கள். அனைவருக்கும் பேச்சு பேச முடியாமல் பாட்டாகவே வருகிறது. அது ஒரு குபேரனின் சாபம் என்று நம்புகிறார்கள். இந்த சாபத்திலிருந்து விமோசனத்திற்காக அவர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். அந்த நிலையில் ஒரு கர்ப்பிணிப் பெண் அந்தச் சுரங்கத்தில் இறந்ததால் அந்தச்சாபம் என்று தெரிந்து கொள்கிறார்கள் .அந்தச் சுரங்கம் ஆபத்து கொண்டதாக இருப்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.அதே போல் மீண்டும் ஒரு கர்ப்பிணிப் பெண் அந்தச் சுரங்கத்தில் சிக்கிக் கொள்கிறாள். அவளுக்குப் பிரசவம் நிகழ்கிறது .குழந்தை பெற்றுக் கொண்டு அவள் உயிர் தப்பிக்கிறாள். அவர்களுக்குச் சாப விமோசனம் கிடைத்து பேச ஆரம்பிக்கிறார்கள். இப்படிச் செல்கிறது 137 நிமிடங்கள் கொண்ட ‘சிங் கீதம்’ படத்தின் கதை.
இதில் அந்த சுரங்கம் அந்த தனிப்பட்ட ஊர் , புல் பச்சை ஏதுமற்ற அந்த வெளியில் ஒரு பெரியமரம் போன்றவை புதிய பின்புலமாகப் பார்ப்பவர்களுக்குப் புதிய உலகமாகப் பதிகிறது.அது மட்டுமல்ல அங்கு வாழும் கதாபாத்திரங்களும் அந்த மண்ணின் மைந்தர்களும் சமகால அறிவியல் முன்னேற்றங்கள் வளராத காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறார்கள். படத்தில் வரும் கௌரி , ஷைலஜா,பிரதாப், பசவம்மா, போன்றவர்கள் பார்ப்பவர்கள் மனதில் பதிகிறார்கள் .அது மட்டுமல்ல அந்தச் சுரங்கத்தின் முதலாளி, அந்த ஆப்பிரிக்க வியாபாரி, சலூன் வைத்திருப்பவர்,டாக்டர், பேப்பர் போடும் சிறுவன், பாட்டு பாடும் இளைஞன், கௌரியின் தந்தை என்று அனைத்து பாத்திரங்களும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.விஜய் தேவரகொண்டா ஒரு சிறப்புத் தோற்றத்தில் இரண்டாவது பாதியில் வந்து ஆச்சரியமூட்டுகிறார்.
இப்படத்தில் அனைத்து வசனங்களையுமே பாடல்களாக்கி இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். அது மட்டுமல்ல ‘கண்ணே மணியே முத்தே ரத்தினமே’ என்ற பாடலும் ‘உனக்கு என்னதான் வேணும்’ என்று கிளைமாக்ஸில் ஒலிக்கும் பாடலும் படத்தின் ஓட்டத்தை தூக்கி நிறுத்துகின்றன.படத்தின் பின்னணி இசையும் நல்ல ஈர்ப்புடன் அமைந்துள்ளது.
படம் தொடங்கியதும் சில காட்சிகளுக்குப் பின் முழுக்க முழுக்க பாடல்களாக ஒலிக்கும் போது முதலில் சலிப்பும் அலுப்பும் ஏற்படுவது உண்மைதான்.ஆனால் போகப் போக அந்த உலகத்தில் நம்மை ஈர்த்துக் கொள்கிறார்கள். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ரசிக்க ஆரம்பிக்கிறோம்.படத்தின் உருவாக்கத்திலும் கலாச்சாரத்திலும் தெலுங்கு வாசனை வீசினாலும் அதற்குள் புகுந்து ஐக்கியமாகி விடுகிறோம்.
தமிழ் திரைப்பட உலகில் எழுபது பாடல்கள் இடம் பெற்ற ஒளவையார் படத்தை நிறைய பாடல்கள் நிறைந்த படம் என்று கூறுவார்கள். இதில் அனைத்து வரிகளையுமே பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள்.ஆனாலும் ரசிக்கும்படி இந்தப் படம் உருவாகி உள்ளது.
இந்தத் துணிச்சலான முயற்சியைப் பாராட்டலாம்.மொத்தத்தில் இந்தப் படம் வித்தியாசமான திரை அனுபவத்தைத் தருகிறது.அதிலும் தனது 90 வயது தாண்டி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள சீங்கீதம் சீனிவாசராவைப் பாராட்டலாம்.அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.


