‘ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா, வாட்சப் மணி, டெப்னிதா,பிரகதி ,உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் எழுதி இயக்கியுள்ளார். முகேஸ்வரன் வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

சிவா கல்லூரிப் படிப்பு படித்துவிட்டு தனது நண்பனின் ஹோட்டலில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் வேலை பார்க்கிறான்.அங்கே ஒரு நண்பன் டூரிஸ்ட் கைடு ஆக இருக்கிறான்.ஒரு சுற்றுலாத் தளத்துக்கு அவனைப் பார்க்க சென்றபோது அங்கே ஒரு தமிழ் பெண்ணைச் சந்திக்கிறான் .அவள் தான் சாதனா. சிவாவின் குணத்தைப் பிடித்து போய் சாதனா ஐ லவ் யூ சொல்கிறாள். ஆனால் சிவா வேண்டாம் என்கிறான். ஏனென்றால் மீண்டும் ஒரு காதல் வலியைத் தாங்க தனக்கு சக்தி இல்லை என்கிறான். அதற்குப் பிறகு ஏன் என்னாச்சு என்கிறாள் சாதனா.தன் முன் கதையையும் தான் சாகித்யாவைக் காதலித்ததையும் நெருக்கமாக இருந்ததையும் அப்படிப்பட்டவள் உயர் படிப்புக்காக தன்னிடம் அனுமதி பெறாமல் அமெரிக்கா சென்றதையும் கூறுகிறான்

ஒரு வழியாக சாதனாவை ஏற்றுக்கொண்டு பயணிக்கும் போது ஒரு விபத்தை சந்திக்கிறான். விபத்தில் காயம் அடைந்து ஆறாண்டுக்கான நினைவுகள் மறந்து விடுகின்றன. எழுந்ததும் பழைய காதலி சாகித்யாவைப் பற்றியே பேசுகிறான்.இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவில் இருந்து ஊட்டிக்கு வந்துள்ள சாகித்யாவின் உதவியை சிவாவின் நண்பர் குழு நாடுகிறார்கள்.அங்கே ஒரு வாரம் தங்கி பிரச்சினையை சரி செய்ய முயல்கிறார்கள். ஆனால் சிவா சாகித்யாவுடன் நெருக்கமாகப் பழக கதை வேறு மாதிரி செல்கிறது.இதற்குப் பிறகு என்ன நடக்கிறது பழைய காதலியா? புதிய காதலியா சிவா யாருடன் சேர்ந்தான் என்பது தான் ‘ஹார்ட்டின்’ படத்தின் மீதிக் கதை

இதில்  சிவாவாக வரும் நாயகன் சனந்த் சுமாரான தோற்றத்தில் வந்தாலும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.இரண்டு கதாநாயகிகளுடன் அவர் நடித்துள்ளார்.முதல் காதலி மடோனா செபாஸ்டியனுடன் காதலிக்க அவர் பிரிந்து சென்ற வலியுடன் இருக்க ,இரண்டாவது காதலி இமயாவுடன் மறு மகிழ்ச்சி காணும் காட்சிகளில் நடிப்பில் நன்றாக வெளிப்பட்டுள்ளார்.

அறிமுக நடிகை இமயா, அனுபவம் இல்லாதவர் என்கிற சுவடு தெரியாமல் நடித்துள்ளார்.மடோனா செபாஸ்டியன்,முதல் காதலை அலட்சியப்படுத்தும் போது காட்டும் நடிப்பும் மீண்டும் அதைப் புதுப்பிக்க தடுமாறித் தவிக்கும் போதும் என காட்சிகளில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகன் சனந்த்தின் நண்பராக மணி பாத்திரத்தில் வரும் வாட்ஸ்-அப் மணி நகைச்சுவைப் பகுதியை கையில் எடுத்துக் கொள்கிறார்.அவரது மனைவியாக டெப்னிதா கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி எழிலைக் காட்சிப்படுத்தி விஷூவல் விருந்தளித்து இருக்கிறார்.பாடல் காட்சிகளில் அழகுணர்ச்சி மிளிர படப் பதிவு செய்துள்ளார்.ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் இனிமை ரகமாக உள்ளன.இயக்குநர் சொன்னதைப் புரிந்து அவரது வழியில் படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார்,ஒரு காதல் கதையைக் கூற நினைத்து தவறவிட்ட நினைவுகள் ,கடந்து போன வாழ்க்கை என்று வேறொரு திசையில் கொண்டு சென்று சுவாரஸ்யப் படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.ஆனால் அதற்கான அழுத்தம் கொண்ட காட்சிகள் குறைவாக உள்ளது பலவீனமாக உள்ளது.

எந்தக் காதலியுடன் சேரப் போகிறார் என்பது ஒரு புதிரான கேள்வியாக இருந்தாலும் காதலர்கள் இருவர் இடையேயான ஈர்ப்பு, பிணைப்பு போன்றவற்றை இன்னும் ஆழமாகக் காட்டியிருக்கலாம்.எனவே குறிப்பிட்ட காலம் நினைவு மறத்தல் என்கிற வழக்கமான சினிமாவின் டெம்ப்ளேட் கற்பனைக்குள் இந்தக் கதை சென்று விடுகிறது.

குறைந்தபட்ச கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சலிப்பில்லாத திரைக்கதை அமைத்த வகையில் இயக்குநருக்கு வெற்றிதான்.

மொத்தத்தில் இந்த ‘ஹார்ட்டின்’ காதல் முலாம் பூசப்பட்ட சில சுவாரஸ்ய விளையாட்டுகள் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படம் என்கிற திருப்தியை அளிக்கும்.