அருள்நிதி, ஆரவ் ,காளி வெங்கட், ரம்யா பாண்டியன், ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், அருள்தாஸ்,ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கணேஷ் விநாயன் இயக்கியுள்ளார்.எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.கலை இயக்கம்: லால்குடி இளையராஜா .90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ். ஜி.சரவணன், சுபா சரவணன் தயாரித்துள்ளார்கள்.
2004ல் தொடங்குகிறது இந்தக் கதை. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்வியும் நாகரிகமும் எட்டிப் பார்க்காத ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் இருக்கின்றன.அவர்கள் தங்களுக்கென ஒரு மொழியை பேசிக்கொண்டு தங்களுக்கென ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு நாட்டின் பொது நீரோட்டத்தில் கலக்காமல் குறுகிய வட்டத்தில் வாழ்கிறார்கள்.அங்கே கிடைக்கும் சொற்ப விளைபொருட்களைக் கொண்டே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் யாரும் படிக்கவில்லை .அப்படி இருக்கும் அவர்களை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை .அது மட்டுமல்லாமல் எஸ்டேட் முதலாளிகளின் ஆதிக்கத்தால் அவர்களுக்கு பல தொந்தரவுகள் உள்ளன.மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வழிமறித்துக் கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளதால் அவர்கள் அடிப்படை வசதிக்கே சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய சிரமத்தில் இருக்கிறார்கள். இது பற்றி எதிர் கேள்வி கேட்டவர்களை ஆதிக்க வர்க்கம் ஒடுக்குகிறது அல்லது கொன்று விடுகிறது. வனத்துறை அதிகாரிகளும் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். அங்குள்ள ஏழைகளைப் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஆரவ்- ரம்யா பாண்டியனின் மகள் குறிஞ்சி பருவம் எய்தி இருக்கிறாள். சிறுமி குறிஞ்சியிடம் அவர்களது மரபுப்படி மாப்பிள்ளையை முடிவு செய்யச் சொல்கிறார்கள். ஐந்து நபர்கள் பெயரில் ஐந்து கற்களைக் கொடுத்து யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். அவள் தனக்குத் திருமணம் வேண்டாம் கல்வி கற்க வேண்டும் என்கிறாள்.கல்வி அவளது கனவாக இருக்கிறது.
அந்த ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்தால் நல்லது என்று நினைக்கிறாள். அவளுக்குப் பொய் நம்பிக்கை கொடுத்து ஒரு கல்லைத் தேர்ந்தெடுக்க வைக்கிறார்கள்.தான் ஏமாற்றப்பட்டது அவளுக்குத் தெரிகிறது.ஒரு கட்டத்தில் குடும்பத்தைப் பிரிந்து பாதை தவறி வெளியே சென்று
விடுகிறாள்.வெளியில் வந்தவளுக்கு மனிதர்களால் அவ்வளவு ஆபத்து நேர்கிறது. வனத்தில் விலங்குகள் மத்தியில கூட பயமில்லாமல் இருந்தவள், மனிதர்களைக் கண்டாலே அஞ்சுகிற நிலை.ஒரு கொடூர விபத்தில் காப்பாற்றப்படுகிறாள். மருத்துவ சோதனையில் அவர் உடலுக்கு ஊறு நேர்ந்தது தெரிகிறது.அவளது பள்ளி பற்றிய ஏக்கம் கலெக்டர் வரை செல்கிறது.கலெக்டராக இருக்கும் அருள்நிதி நேரில் வந்து பார்த்தவர்,சிகிச்சை முடித்து குறிஞ்யைசி அழைத்துச் சென்று தன் மகளைப் போல ஆதரிக்கிறார். படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் குறிஞ்சியோ தான் மட்டும் படிப்பது சுயநலம் .தனது கிராமத்து பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளது ஆசையை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அருள்நிதி போராடுகிறார்.அந்த மலைப் பகுதிக்கு ஆசிரியர்கள் வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் தடையாக இருக்கின்றன .எனவே அவரே தன் கலெக்டர் பதவியை விட்டுவிட்டு அங்கே பள்ளி ஆசிரியராகச் சென்று அந்தப் பழங்குடியின மக்களைப் படிக்கவைத்துப் பல்வேறு உயர் பதவிகளுக்கு அனுப்புகிறார்.குறிஞ்சி கலெக்டர் ஆகிறாள்.ஏழையின் படிப்பில் இறைவனைக் காண்கிறார் அருள்நிதி.’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே’ சிறந்த அறம் என்று வாழ்ந்து காட்டுகிற அருள்நிதியின் கதையே இந்த 109.31 நிமிடங்கள் கொண்ட ‘அருள்வான் ‘ படத்தின் மீதிக்கதை.
இப்படத்தை முத்துவேல் என்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் பழங்குடியின மக்களின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்த கதை என்று கூறலாம். பழங்குடியினர் இனத்தில் பிறந்து உரிமைக்குக் குரல் கொடுத்து போராளியாக வெற்றி பெற்ற குறிஞ்சி என்கிற ஒரு பெண்ணின் கதை என்றும் கூறலாம்.
இந்தப் படத்தில் பழங்குடியினத்தில் தோன்றிய ஒருவராக கந்தன் பாத்திரத்தில் ஆரவ் ஆஜானுபகுவான தோற்றத்துடன் வருகிறார். அவர் தன் மகள் குறிஞ்சியை உயிராக நேசிக்கிறார். தன் மகளிடம் நீ நினைப்பதை அடைய வேண்டும். அதற்கு எந்தத் தயக்கமும் கூடாது. தடைகள் வந்தாலும் தாண்டி வர வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வளர்க்கிறார். திறந்த மார்புடன் தோன்றும் அவர் சண்டைக்காட்சிகளில் வீரம் காட்டுகிறார். சாமியாக சன்னதம் வரும் காட்சிகளிலும் ஆவேசம் காட்டி நடித்துள்ளார்.அப்படிப்பட்டவர் மனைவி ரம்யா பாண்டியனுடன் தோன்றும் காட்சிகளில் கணவன் மனைவி இடையே நிலவு இயல்பான அன்னியோன்யம் வெளிப்படுகிறது.அந்த வகையில் ஆரவ் – ரம்யா பாண்டியன் ஜோடி பொருத்தமான ஜோடியாக இருக்கிறது.ரம்யா பாண்டியன் அமரவல்லி பாத்திரத்தில் மண் மணம் மாறாத மலைமகளாக வருகிறார்.அவர்களது மகளாக குறிஞ்சி பாத்திரத்தில் வரும் சிறுமி கீர்த்திகா உயிர்ப்பான பாத்திரத்தில் துடிப்பான நடிப்பில் கவர்கிறார்.
வனத்துறை அதிகாரியாக வழக்கம் போல வில்லத்தனம் காட்டுகிறார் ஜான் விஜய்.
சமூக ஆர்வலராகத் தன்ராஜ் பாத்திரத்தில் பத்திரிகையாளராக காளி வெங்கட் வருகிறார். உரிமைக்குக் குரல் கொடுத்துச் சினத்தில் பொங்கும் போதும் அவலங்களைக் கண்டு கண்ணீர் விடும் போதும் கவனிக்க வைக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துவேல் பாத்திரத்தில் நடித்துள்ளஅருள்நிதி அப்பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார்.ஆளுமைக் குணம், அதிகார மனம் ,அன்பு, கருணை, பரிவு ,சகிப்புத் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் அந்தப் பாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தியுள்ளார் அருள்நிதி. அவர் படத்தின் முற்பாதியில் சில காட்சிகளில் வந்தாலும் பிற்பாதி படத்தை அவர் தாங்கிப் பிடித்துள்ளார்.சராசரிக்கு மீறிய உயரம் கண்ணியமான தோற்றம் மீட்டர் தாண்டாத நடிப்பு என்று வருபவர், இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது பாதியில் தனது திரையிருப்பால் படத்தை நிறைத்துள்ளார்.அவரது திரைத்தோற்றம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளதுடன் கதை நிறைவுக்கு அவரது பங்களிப்பு பெரிதும் கைகொடுத்துப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
அருள் நிதியின் பிஏவாக வரும் விடிவி கணேஷ் வழக்கம் போல தனது கேலி ,கிண்டல் பேச்சால் சிரிக்க வைக்கிறார்.
பழங்குடிக் கிராமத்துப் பெரியவராக அருள்தாஸ் நடித்துள்ளார்.
மலைவாழ் கிராமம் என்கிற போது ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா வழக்கமான படப்பிடிப்பிடங்கள் போல் அல்லாமல் காடு மலை அருவி ஆறு பள்ளத்தாக்குகள் என்று சுற்றிச் சுழன்று படப்பதிவு செய்துள்ளது.எழில் மிகு திறந்த வெளிகளில் புகுந்து விளையாடி உள்ளவர் கண்ணுக்கு விருந்தாக இயற்கையைக் காட்சிப்படுத்தி உள்ளார் .அதே நேரம் பாத்திரங்களின் உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறவில்லை.
எளிய மக்களின் கதையைச் சொல்லும் இந்தப் படத்தில் எளிமையான கருவிகளைக் கொண்டு மண் மணம் மாறாத இனிமையான பாடல்களை வழங்கியுள்ளார் ஜி. வி. பிரகாஷ் குமார்.அந்த பழங்குடியினர் எண்ணங்களைத் தனது பாடல்களில் பிரதிபலித்துள்ளார்.
எளிமையான சிந்திக்க வைக்கும் வசனங்களை எழுதி உள்ளார் யுக பாரதி. மலை வாழ் மக்களின் உரிமைகளையும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டி கல்வியின் அவசியத்தையும் பிரச்சார தொனியின்றி இந்தக் கதையின் மூலம் எடுத்து விளக்கி உள்ளார் இயக்குநர் ரமேஷ் விநாயகன்.அதில் ஆவணத் தன்மை எட்டிப் பார்த்து விடாமல் பார்த்துக் கொண்டது சாமர்த்தியம்.படத்தில் இறுதியில் கல்விக்கான தங்கள் பயணத்தில் தடை தாண்டி வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற ஏழை மாணவிகள், பழங்குடி மாணவிகளின் உணர்ச்சிமிகு வாக்குமூலங்களாக வருகின்ற காட்சிகள்படத்தின் உண்மைத் தன்மைக்குச் சான்று கூறுகின்றன.
பழங்குடி இனம் மக்கள் பேசும் மொழியைத் தமிழிலேயே பேசவைத்திருக்கலாம்.சில காட்சிகளில் அவர்கள் மொழி சில காட்சிகளில் தமிழ்மொழி என்று குழப்பி இருக்கத் தேவையில்லை.
ஜாக்கிசானே திரைப்படங்களில் தமிழ் பேசுகிறார் .எனவே இதைத் தவிர்த்திருக்கலாம்.
இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியான ஆதரவு தானாக அமைந்துவிடும். வசூல் ரீதியான ஆதரவையும் ரசிகர்கள் வழங்க வேண்டும்.


