ஆர்.மாதவன் ,பிரியாமணி,ஜெயராம் ,துஷாரா விஜயன்,சத்யராஜ்,வினய் ராய் ,அதிதி பாலன்,கருணாகரன்,மோகன் ராமன்,தம்பி ராமையா,
தேஜீந்தன் அருணாசலம்,பிரிகிடா சகா,ஷீலா ராஜ்குமார்,ஷில்பா ஸ்ரீகுமார் நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியுள்ளார் கிருஷ்ணகுமார் ராமகுமார்.எழுத்தாளர்கள்: கிருஷ்ணகுமார் ராமகுமார், ஆர்.மாதவன்.இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா,ஒளிப்பதிவு: அரவிந்த் கமலநாதன்,படத்தொகுப்பாளர்கள்: பிஜித் பாலா, கே.சசி குமார்,ஆடை வடிவமைப்பாளர்: ஜிஷாத் ஷம்சுதீன்.தயாரிப்பாளர்கள்: ஆர். மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன்.
ஜிடி நாயுடு என்று அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு கோயம்புத்தூர்க்காரர். அவரை ஒரு விஞ்ஞானியாகத் தமிழக மக்கள் அறிவார்கள். நீ என்ன பெரிய ஜி டி நாயுடுவா என்று சாதாரணமாகக் கேட்பது உண்டு. ஆனால் அவர் ஒரு பொருளாதார சிந்தனையாளர், தேசப்பற்று கொண்டவர் ,தொழிலில் புரட்சி செய்தவர்,அவர் சாமானியர்களுக்கும் தொழில்நுட்ப வசதிகள் விஞ்ஞான சாதனங்கள் எட்டப்பட வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் அவர் தனது வாழ்க்கையில் போராடினார் என்பதைப் பற்றி இந்த 147 நிமிடங்கள் கொண்ட ‘ஜி.டி.என்’படம் பேசுகிறது. 
ஜிடி நாயுடு என்பவர் அரசு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டியவரா இல்லையா என்ற விவாதத்தில் தொடங்குகிறது இந்தப் படம். அவரைப் பாடப் புத்தகத்தில் சேர்த்து நாட்டு மக்களுக்கு குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் பாடப் புத்தக வடிவமைப்புக்குழு உறுப்பினரான அதிதி பாலன்.முடிவு என்ன?
வரலாற்றை யார் எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்துதான் அந்த வரலாற்றின் தன்மை இருக்கும் .வேட்டையின் வரலாற்றைச் சிங்கம் எழுத முடியாது .அப்படித்தான் இவரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களால் மறுக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட புகைபடிந்த பக்கங்களைத் தேடிப் பிடித்து படமாக்கி இருக்கிறார்கள்.
கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் பருவம் முதல் அவரது மறைவுக் காலம் வரை பயணம் செய்கிறது இந்தக் கதை.தனது வாழ்க்கைப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் தடைகள் இடையூறுகள் போராட்டங்கள் துரோகங்கள் அனைத்தையும் பற்றி காட்சிகளாக்கி, வரலாற்றை வாசிக்க வைத்து விடுகிறார்கள்.இந்தக் கதையை ஆவணத்தன்மை எட்டிப் பார்த்து விடாமல் ஒரு சுவாரசியமான திரைக்கதை தொண்ட முழு நீளத் திரைப்படமாக மாற்றி அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
நமது இந்தியாவில் ஒரு விஞ்ஞானி தலை எடுப்பது சிரமமானது. தனது அறிவை நிரூபிக்க சொந்த நாட்டில் அவர் பட்ட பாடுகளையும் வெளிநாட்டில் அவருக்குக் கிடைத்த மரியாதையையும் காட்சிகளாகப் பார்க்கிறபோது வயிற்றெரிச்சல் தான் வருகிறது.
அவரது கனவுகள் சிதைக்கப்பட்ட விதம் காட்சிகளாக வருகின்றன.
படத்தில் ஜிடிஎன் அதாவது ஜி.டி.நாயுடு பாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன்,தனது தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு ,நனிப்பு என்று ஒவ்வொரு அசைவிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் தோற்றத்தில் மிகச் சிறப்பாக அவர் தோன்றுகிறார். அவருக்கு ஒப்பனை செய்தவருக்கும் சபாஷ்.
வருமானவரித்துறை அதிகாரியாக வரும் ஜெயராம் எப்போதும் கண்களில் சந்தேகத்தை வைத்துக்கொண்டு தனது உடல் மொழியின் மூலம் அந்தப் பாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளார்.
ஜி.டி.நாயுடுவின் நண்பர் சிதம்பரம் பிள்ளையாக வரும் சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.அவர் அந்தப் பாத்திரத்தில் அடித்து ஆடி உள்ளார்.
மாதவனின் முதல் மனைவியாக வரும் பிரியா மணி இரண்டாவது மனைவியாக வரும் துஷாரா விஜயன்
இருவரும் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளனர்.
அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பிறர் எனத்துணைப் பாத்திரங்களில் வரும் நடிகர்களும் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு செழுமை சேர்த்துள்ளனர்.
ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலக்கட்டத்திற்குள் காலப் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் கேமரா.
ஹிட்லர் தோன்றும் காட்சிகளையும் படத்தில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப பழமை மாறாத இசையை வழங்கியுள்ளார் கோவிந்த் வசந்தா.
இந்தப் படம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை போல் தோன்றினாலும் அந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளின் அரசியல் சூழல்கள் போன்ற வரலாற்றுப் பதிவுகளும் பின்புலமாக இடம் பெறத் தவறவில்லை.அரசியல் தலைவர்கள் நேரு, இந்திரா , பெரியார் ,அண்ணா, கலைஞர் போன்றவர்களும் காலத்தின் சாட்சிகளாகத் தோன்றுகிறார்கள்.
இது ஒரு வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முழு நீளத் திரைப்படம் என்றாலும் சற்றும் தொய்வு இல்லாமல் படத்தொகுப்பு செய்துள்ள படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் இருவருக்கும் பாராட்டுகள்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரது பணி படம் முழுவதும் காட்சிகளில் சாட்சிகளாகத் தெரிகின்றன.அந்தக் காலத்து பொருட்கள் பின்னணிகள் பின்புலங்கள் போன்றவற்றைக் காட்ட தயாரிப்பு வடிவமைப்பாளர் கடினமாக உழைத்து இருக்க வேண்டும்.
கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோரது திரைக்கதையில் ஜி.டி.நாயுடு என்ற மாபெரும் ஆளுமையைத் திரையாஆக்கமாகக் காட்டிய வகையில் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தத்தில், ‘ஜி.டி.என்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


