மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்துப் பேச வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை!

”இந்த ‘சீன் ‘படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும் என்று படம் பற்றிப் பேசியதற்குப்பிறகு ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட அறிவுரையாகப் பேசும் போது, இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது . உங்களின் அன்பு தான்.திரை உலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அன்பு குறையாமல் என் மீது பாசம் காட்டி வருகிறீர்கள். மனதில் அமைதி வேண்டும் என விரும்புகிறேன். அத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு தான் அவசியம் என நினைக்கிறேன். இந்த இரண்டும் இருந்தால் இவற்றில் எல்லாம் அடங்கிவிடும்” என்று சீன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார் . இது பற்றிய விவரம் வருமாறு:
தீபாவளித் திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் இந்நிகழ்வில் படக் குழுவினருடன் நடிகர்கள் சிவகுமார்- கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில்,
” இது ரொம்ப முக்கியமான மேடை. ‘சீன்: படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த நேரத்தில் என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு தேவா சார் இசையமைத்திருந்தார். அவருக்கு இந்த மேடையில் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய நினைவில் இருப்பார். அவர் போட்ட ‘அவள் வருவாளா..!’ என்ற ட்யூன் தான் இன்று வரை என்னை அடையாளப்படுத்தி வருகிறது . நான் இவ்வளவு தூரம் பயணித்ததற்கு தேவா சார் தான் ஆரம்பப் புள்ளி.
இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து இங்கு வருகை தந்த ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களின் அன்பு தான்.
திரை உலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அன்பு குறையாமல் என் மீது பாசம் காட்டி வருகிறீர்கள். மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.‌
நற்பணி மன்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நாம் யார்? நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மற்றவர்களுக்காக நாம் நிரூபிக்க வேண்டியதில்லை. ‘மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்து பேச வேண்டாம்’ என்று நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு, எப்போதும் அந்த பேரன்பை கடைப்பிடித்து வருகிறீர்கள்.
500 நன்கொடையாளர்கள் மூலம் ரத்த தானத்தை தொடங்கினோம். இப்போது ஒவ்வொரு ஆண்டும் 5000 நன்கொடையாளர்கள் ரத்த தானத்தை வழங்குகிறார்கள்.
நாங்கள் ஏராளமான வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறோம். அதில் டாக்டர்ஸ் இருக்கிறார்கள். வக்கீல்கள் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். அண்மையில் ஒரு தம்பிக்கு காலில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இது தொடர்பாக டாக்டர்ஸ் குரூப்பில் ஒரு பதிவை பதிவிட்டோம். உடனடியாக கட்டணம் இல்லாமல் அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இவை அனைத்தும் ஒரே குடும்பம். அது என் குடும்பம்.
நானும் ஜோவும் ஜித்துவின் ‘ரோமான்சம்’ படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருடைய ‘ஆவேஷம்: படமும் எனக்கு பிடித்திருந்தது. அவர் உருவாக்கும் உலகம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்தது. அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் வித்தியாசமானதாக இருக்கும்.
எனக்கு இந்த வருஷம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. மூன்று படங்கள் வெளியாகிறது. இதற்கு முன் ‘மாயாவி’, ‘கஜினி’, ‘ஆறு’ என மூன்று படங்கள் வெளியானது என நினைக்கிறேன்.‌
‘கருப்பு’ 45 நிமிடங்களில் கதை கேட்டு நடிக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஃபேமிலி ஓரியண்டட் படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்தேன். அதுவும் உங்களுக்கு பிடித்திருந்தது. அதேபோல் இந்த படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும்.‌
இசையமைப்பாளர் சுசின் ஷியாம் தமிழில் அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக திரையரங்கத்திற்கு வந்து, இந்த படத்தை சந்தோஷமாக பாருங்கள்.
நடிகர் தனுஷ் ஒரு ‘ட்விட்’டில், ‘சூர்யாவின் படத்திற்காக என் படத்தினை தள்ளி வைக்கிறேன்’ என்று சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி.
வெற்றி குறித்து எனக்குள் ஒரு கேள்வி இருக்கிறது. என்ன செய்தால் வெற்றி பெற முடியும்? அது மட்டும் போதுமா.. !அதனால் வெற்றி பெறுவதும்… தோல்வி அடைவதும்… அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்ப்பது தான்.
20 வயதில் ஒரு வேலை வேண்டும். 25 வயதில் என் அக்கவுண்டில் இவ்வளவு பணம் இருக்க வேண்டும். 30 வயதில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும். 50 வயதில் ஒரு பிரம்மாண்டமாக வீட்டை கட்டிட வேண்டும் என்ற ஆசை இயல்பாக இருக்கும். நான் தற்போது 50 வயதை கடந்து விட்டேன். நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்றால்… மனதில் அமைதி வேண்டும் என விரும்புகிறேன். அத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு தான் அவசியம் என நினைக்கிறேன். இந்த இரண்டும் இருந்தால் இவற்றில் எல்லாம் அடங்கிவிடும்.
என்னால் என் பெற்றோர்களை முடிவு செய்ய முடியாது. என் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளையும் முடிவு செய்ய முடியாது. நான் பிறந்து விட்டேன். ஆனால் மனைவி அமைவதெல்லாம் …! என்று சொல்வார்கள் இல்லையா..?  அதேபோல் என்னை தற்போது கை பிடித்து முன்னால் அழைத்துச் செல்வது என் ஜோதிகா தான். அதற்காக அவருக்கு நன்றி.
வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை அழகானது. நாம் மூச்சு விடும் வரை எல்லா விசயங்களும் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை தான். எவை வேண்டுமானாலும் மாறலாம். எவற்றை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம். மூச்சு விடும் வரை தோல்வி என்பது இல்லை. எதுவும் முடிவில்லை. எதுவும் பிரிவில்லை. எதுவும் உடைந்து போகவில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய இயலும்” என்றார்.