‘அப்பா குட்டி’ திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, சிறுமி லிதன்யா, ஜென்சன் திவாகர், முருகானந்தம் ,அருவி மதன், பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், விஜயன், ஹரிப்பிரியா இசை ,ஹரிதா, ஹரிப்பிரியா, மூணாறு ரமேஷ் ,லிசி ஆண்டனி , ஸ்ரீஜா ரவி, , பிரவீனா, சித்ரா லட்சுமணன், குமார் நடராஜன் ,லொள்ளு சபா சுவாமிநாதன் நடித்துள்ளனர்.

மு.மாறன் எழுதி இயக்கியுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ளார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

படத்தின் தலைப்பிலேயே இது அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படம் என்பதை அனைவரும் யூகிக்க முடியும். அது எப்படிப்பட்ட அப்பா மகள் பாசம் என்பதே கதை.

மனைவி இல்லாமல் தனித்து வாழும் விஜய் ஆண்டனி ஊட்டியில் படப்பிடிப்புகளுக்கு லொகேஷன் மேனேஜராக இருக்கிறார்.அவருக்குப் பள்ளி செல்லும் வயதில் தியா என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரித்தி அஸ்ராணிக்கு விஜய் ஆண்டனி மீது ஒரு தலைக் காதல் உண்டு.அது அந்த மகள் மீது பாசமாக வெளிப்படுகிறது.

தனது மகளிடம் அம்மா இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி கூறி வளர்க்கிறார்.ஆனால் இறந்ததாகச் சொல்லப்பட்ட அந்தப் பெண்ணை பிரித்தி அஸ்ராணி ஊட்டியில் கணவர், குழந்தை என்று குடும்பத்துடன் இருப்பதைப் பார்க்கிறார்.அதை விஜய் ஆண்டனிடம் கூறுகிறார்.அவர் மகளிடம் பொய் சொன்னதற்காக வருந்துகிறார்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் கதையில் ஒரு நிலையில் விஜய் ஆண்டனி மகளுக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்படுகிறது.மருத்துவ சோதனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதற்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.அதற்கு ஸ்டெம் செல் தானம் பெற  குழந்தையோடு உடன்பிறந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும்.ஆனால் விஜய் ஆண்டனிக்கு திருமணமே ஆகவில்லை என்று தெரிகிறது.இப்படிப்பட்ட சூழலில் அது கைவிடப்பட்ட குழந்தை என்று தெரிகிறது. அதன்  நிஜமான பெற்றோர் யார் என்கிற தேடல் நடக்கிறது. சிறுமியின் உயிரைக் காப்பாற்ற அவர்களின் உண்மையான பெற்றோரைத் தேடிச் செல்லும் போது அவர்கள் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் மூலம் ஒரு குழந்தை  பிறந்தால் தான் தீர்வு என்று பிரச்சினை மேலும் சிக்கல் ஆகிறது. அவர்களோ ஒருவர் மீது ஒருவர் வெறுப்புடன் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட சூழலில் தான் வளர்க்கும் குழந்தையைக் காப்பாற்ற அவர்களை அணுகி அவர்களிடம் உயிரணு தானம் கேட்டுப் போராடும் விஜய் ஆண்டனி அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் ‘அப்பா குட்டி’ படத்தின் மீதிக்கதை.

இந்தியாவில்  சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான கதையில் பல கற்பனைகளும் கலந்து இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மு.மாறன்.

இப்போது மூன்றாவது மனிதரிடமிருந்து ஸ்டெம் செல் பெற்றுச் சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.ஆனால் படத்தில் இப்படி வருவது சற்று முரணாக உள்ளது.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ஏற்கெனவே தாய்ப் பாசத்தைக் காட்டியவர். இந்தப் படத்தில் தந்தைப் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பாசமுள்ள தந்தையாக அடக்கி வாசித்து நடித்துள்ளார். ஆனால் பல இடங்களில் அது மிகையாகத் தோன்ற வைக்கிறது.

பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் பிரித்தி அஸ்ரானிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது அதற்கான காரணம் பரிதாபமா? அல்லது வேறு ஏதுமா? அதற்கு அழுத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை.எனவே அவரது நடிப்பு மிகையாகத் தோன்ற வைக்கிறது.

தன்னை வளர்க்கும் தந்தையை வார்த்தைக்கு வார்த்தை அப்பா குட்டி அப்பா குட்டி என்று அழைத்துக் கொண்டு விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா, இயல்பான நடிப்பு, அப்பாவித்தனமான குறும்புத்தனமான பேச்சு  என்று ஈர்க்கிறார்.உச்சக்கட்ட காட்சியில் காட்டும் முகபாவனைகள் மூலம் அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார்.

பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லக்‌ஷ்மணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம்.ஆர் உள்ளிட்ட படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் வருகிற நடிப்புக்கலைஞர்கள் தங்கள் அனுபவம் உள்ள நடிப்பின் மூலம் தங்கள் பாத்திரத்தில் நிறைவு தருகிறார்கள்.ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்து அவர்கள் திறமைக்குத் தீனி போட்டு இந்தக் கதையை நிர்வகித்துள்ள வகையில் இயக்குநரின் திறமை பாராட்ட வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் கதாபாத்திர உணர்வுகளைக் கடத்துவதில் கவனம் செலுத்தி தனது வேலையை நிறைவு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்கு வலுவூட்டும் படியும் மீண்டும் மீண்டும் கேட்கும் படியும் உள்ளன.அவரது பின்னணி இசையும் காட்சிகளைப் பலப்படுத்தி உள்ளது.

படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் விஜய் ஆண்டனி, தன்னாலான செய்தொழில் நேர்த்தி காட்டியுள்ளார்.

படத்தின் இயல்பு தாண்டி ஆங்காங்கே நாடகத்தனம் தலை காட்டுவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். ஒரு முடிவை நோக்கிச் சென்றுவிட்ட கதைக்குப் பிறகு வரும் நீதிமன்றக் காட்சிகள் படத்தின் நீளத்தை உணர வைக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், அப்பா மகள் பாசத்தைக் காட்டிருந்த கதையில் மருத்துவத் துறையின் சில மாற்றங்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.

மொத்தத்தில், ‘அப்பா குட்டி’ அப்பா மகள் பாசம் சார்ந்த ஒரு பொழுதுபோக்குப் படம்.