ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி மணிரத்னம் , ராஜ் ஐயப்பா,ரம்யா பாண்டியன் ,சத்யராஜ், சமுத்திரகனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, சாய்தீனா, ரித்விக், ஜெயபிரகாஷ் , பிரித்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
இசை : தேனிசைத் தென்றல் தேவா ,ஒளிப்பதிவாளர்: சஞ்சய் பி எல் ,வசனம் மற்றும் பாடல்கள்: பா விஜய் , கதை: வெங்கட் ,
படத்தொகுப்பு: ரிச்சர்ட் ,கலை இயக்குநர்: வாசுதேவன்,நடன இயக்குநர்கள்: கலா, அசோக்ராஜ், ஸ்வர்ணா .
அருண் விஷூவல்ஸ் மற்றும் மெட்ராஸ் சினி புரொடக்ஷன் தயாரித்துள்ளன.இ எஸ் எண்டர்ட் டெய்ன்மென்ட் வெளியீடு.
சாருகேசி என்பவர் பிரபல கர்நாடக சங்கீத மேதை.அவரது மனைவி பாக்யம் மகன் சஞ்சய் .
தனது சங்கீத உலகில் முடி சூடா மன்னனாக இருக்கிறார் சாருகேசி,அதாவது சிந்து பைரவி ஜே கே பி போல.
அவர் ஒரு பக்கம் இசையில் ஆழ்ந்திருந்தாலும் இன்னொரு பக்கம் மன வலியோடு வாழ்கிறார். அந்த வலிக்குக் காரணம் அவரது மகன் சஞ்சய்.தன் தந்தையான சாருகேசியின் புகழே தன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக மகன் உணர்கிறான். அதனால் தந்தை மீது கசப்புடன் இருக்கிறான்.அந்த வெறுப்பு அவனுக்குள் வளர்வதால் திசை மாறிச் செல்கிறான். அவனை நினைத்து சாருகேசி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? ஒரு கட்டத்தில் மருமகளாக வரும் கௌதமியும் சாருகேசிக்கு எதிராகச் செயல்படுகிறாள். அவரது அனைத்து கௌரவத்தையும் அழித்து விடுவேன் என்று சவால் விடுகிறாள் .இப்படி வீட்டுக்குள்ளே வில்லன்கள் வந்திருக்கிற சூழலில் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவருக்கு உடல் ரீதியான பிரச்சினையும் வருகிறது .அதாவது அல்சைமர் என்கிற ஞாபக மறதி பிரச்சினை வருகிறது.அதனால் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இப்படிச் செல்கிற கதையின் முடிவு என்ன என்பதுதான் 146.44 நிமிடங்கள் கொண்ட ‘சாருகேசி ‘படத்தின் மீதிக்கதை.
படத்தில் சாருகேசி பாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்தியுள்ளார் ஒய் .ஜி. மகேந்திரன்.தன் துறையில் விற்பன்னராக இருக்கும் ஒரு வித்துவானுக்குரிய கம்பீரத்துடனும் பெருமிதத்துடன் உரிய தோற்றமும் தோரணையும் உடல் மொழியும் நன்றாகவே அவருக்குக் கை கொடுத்துள்ளன .அதற்குரிய காட்சிகளும் உள்ளன . நடிப்பும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஒய்ஜி மகேந்திரனின் மனைவியாக பாக்கியம் பாத்திரத்தில் வரும் சுகாசினி தனது முதிர்ந்த நடிப்பால் அந்தப் பாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறார்.
சாருகேசியின் டிரைவராக வரும் தலைவாசல் விஜய் செந்தில் என்கிற முழு நீளப் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து கவனிக்க வைக்கிறார்.ஒரு புதிரான வருகை போல் ராகதேவன் பாத்திரத்தில் வரும் சத்யராஜ் வித்தியாசமான தோற்றத்தில் குட்டி குட்டிக் கதைகள் பேசி வாழ்க்கையின் தத்துவங்களை எளிதாக எடுத்துரைக்கிறார். அவரும் சாருகேசியும் சந்திக்கும் சந்தர்ப்பங்களும் காட்சிகளும் சுவாரசியமாக உள்ளன.குறைந்த காட்சிகளில் வந்தாலும் சத்யராஜின் திரையிருப்பு அந்தப் பாத்திரத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.
சஞ்சய் பாத்திரத்தில் ஒய்ஜி மகேந்திரனின் மகனாக வரும் ராஜ் ஐயப்பாவும் மருமகளாக கௌதமியாக வரும் ரம்யா பாண்டியனும் எதிர்மறைப் பாத்திரங்களில் வந்து படம் பார்ப்பவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதையை சாருகேசி பற்றி ஆவணப்படம் எடுத்த சமுத்திரக்கனி கூறுவது போல் உள்ளது .அந்த கதையை மதுவந்தி கேட்பது போல் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
படத்தில் கதாபாத்திரங்களும் அவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளும் இருப்பதால் பெரிதாக பின்புலங்கள் பற்றி நம் கவனம் செல்லவில்லை. எனவே அளவான பின்புலங்களோடு அந்தக் கதாபாத்திரங்களின் உணர்ச்சியைப் பிரதானமாகக் காட்டியுள்ளார்கள். அதற்கேற்ப சஞ்சய் பி எல் செய்துள்ள ஒளிப்பதிவு பாத்திர உணர்வுகளைக் காண்பவர் மனதில் நிறுத்துகிறது. படத்திற்குப் பெரும் பலமாக இருக்கிறது
தேவாவின் இசை கர்நாடக இசைப்பின்னணி கொண்ட படத்திற்குப் பெரிதும் துணை நின்றுள்ளது.பாடல்களில் அர்த்தமுள்ள வரிகளை மட்டுமல்ல பளிச் வசனங்களையும் எழுதியுள்ளார் பா. விஜய்.
சில காட்சிகளில் நாடக சாயல் இருந்தாலும் சாருகேசி என்கிற பாத்திரம் படம் பார்ப்பவர் மனதில் பதியும்வண்ணம் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
கண்ணியமான ஒரு சங்கீத மேதையின் கதையை எடுத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படம் அனைத்து ரசங்களையும் பல்வேறு உணர்வுகளையும் திரையில் காணும் திருப்தியைத் தரும் என்று கூறலாம்.


