இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர் ,செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி ,கரன் சக்கரவர்த்தி, , ஆலன் கிருஷ்ணா, சிந்து குமரேசன் ,ஆனந்த் சௌந்தரராஜன், நேசன், குயிலி நாச்சியார் ,உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா நடித்துள்ளனர் .
டி. கிட்டு இயக்கி உள்ளார்.திரைக்கதை- திருமுருகன், படத்தொகுப்பு- சிஎம் இளங்கோவன் ,ஒளிப்பதிவு- சிபி சதாசிவம் ,கலை இயக்கம்- முஜிபுர் ரஹ்மான் ,இசை தீசன்.
கோடை மலையில் இந்தக் கதை நடக்கிறது.நாகரிகமும் கல்வியும் எட்டாத ஒரு மலைவாழ் கிராமத்தில் ஒரு பெண் படித்து தனது கல்வியை, கல்வி அறிவற்ற பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.அங்கே பள்ளிக்கூடம் என்ற பெயரில் ஒரு கொட்டகை இருக்கிறது .அதற்கும் ஆசிரியர்கள் இல்லை. தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒரு ஆசிரியர் வருகிறார். அங்கே ஒரு காவல் நிலையம் இருக்கிறது குற்றச்செயல்கள் இல்லாமல்
அதற்கு வேலை இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த ஆசிரியை ,புதிதாக வந்த ஆசிரியர், காவல் ஆய்வாளர் இந்த மூன்று புள்ளிகளைச் சுற்றிக் கதை நகர்கிறது .அதனோடு மர்மமாக இருக்கும் அந்த கொலைச் செயல்களை யார் செய்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது .இதற்கு பதிலாக யார் செய்கிறார்கள் இந்த செயல்களை ஆட்டி வைப்பவர் யார் ? அந்த ஆட்டி யார்?என்பதைத் தேடி செல்வது தான் 93.51 நிமிடங்கள் கொண்ட இந்த ‘ஆட்டி’ படத்தின் மீதிக் கதை.
இன்று நாம் அடைந்து விட்டதாக நினைக்கிற பெண் சுதந்திரத்திற்குப் பின்னே எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பதை நினைவூட்டுகிற வகையில் இந்தக் கதையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன .
இந்த படத்தில் அழகு என்கிற பாத்திரத்தில் அபி நட்சத்திரா நடித்துள்ளார் .அந்த மலைவாழ் கிராமத்துப் பெண்ணாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அமைதி ராஜன் என்கிற பாத்திரத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் நடித்துள்ளார்.
முரட்டுத்தனமும் அதிகம் பேசாத புதிர் தன்மையும் கொண்ட அந்தப் பாத்திரத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக அவர் நடித்துள்ளார்.
படத்தில் வருகிற பிற பாத்திரங்களும் படத்துக்காக நடித்தது போல் தெரியாமல் அந்தப் பாத்திரங்களாகவே உணர வைக்கிறார்கள். அந்த வகையில் அந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர்களையும் பாராட்டலாம்.
மலைவாழ் கிராமம் என்கிற பின்புலமே படத்திற்கு புதிய காட்சி அழகைக் கொடுக்கிறது.அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவை சிபி சதாசிவம் வழங்கியுள்ளார்.
ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்திற்கான வகையில் இசையமைத்துள்ளார் தீசன்.
படத்தில் வரும் முகமூடி கொலைக்காரர்கள் ஐந்து பேர் யார் என்ற முடிச்சு அவிழும் போது பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.திரைக்கதை ஆங்காங்கே எதிர்ப்படும் தொய்வுகளைச் சரி செய்திருந்தால் படம் மேலும் விறுவிறுப்பாக மாறி இருக்கும்.
அந்தக் காலத்திலேயே பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். எனவே பெண்களுக்கு இவர்கள்தான் கல்வியும் உரிமை கொடுத்தார்கள் என்று பேசப்படும் அரசியலுக்கு எதிராகவும் கருத்து கூறப்பட்டுள்ளது இந்த படத்தில். மொத்தத்தில் ஆட்டி ஒரு வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு புதிய முயற்சி போல தெரிகிறது. முடிந்தவரை செய்திருக்கிறார்கள்.வணிக நோக்கில் இல்லாமல் நமது தொன்மையை உணரும் வகையில் எடுத்திருக்கும் பட முயற்சி என்ற நோக்கத்திற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.


