‘நூறு சாமி’ திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி, சுவாசிகா ,அஜய் திஷான் ,சக்தி, பாடினி குமார், காவியா அனில், கருணாஸ் , லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் , முனிஷ்காந்த் ,ஜென்ஸன் திவாகர் ,பகவதி பெருமாள் ,வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர்.

சசி எழுதி இயக்கி உள்ளார்.
தர்ஷன் கிர்லோஸ்
ஒளிப்பதிவு செய்துள்ளார்.பாலாஜி ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார்.
கலை இயக்கம் வி. சசிகுமார்,
படத்தொகுப்பு ஹரிஷ் யுவராஜ்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.

சுவாசிகா 26 வயதில் கணவனை இழந்தவர். விதவையாகக்  கைம்மைத் துயரத்திலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. கல்லூரி செல்கிற வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மறுமணத்தில் விருப்பம் இருக்கிறது.ஆனால் மூத்த மகன் அதற்கு எதிர் மனநிலையில் இருக்கவே அதிர்ச்சி அடைகிறார் .சில ஆண்டுகள் கழித்து தாயின் மன உணர்வைப் புரிந்து கொள்ளும் மகன்கள் தாய்க்கு மறுமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.அப்போது சுவாசிகா மனதில் மகன்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று ஒரு தயக்கம்.இருந்தாலும் இரண்டு மகன்களும் பிடிவாதமாக இருந்து தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், பழமையிலும் சம்பிரதாயங்களிலும் போலிக்கௌரவ பாசாங்குகளிலும் மூழ்கிக் கிடக்கும் உறவினர்களும் ஊர் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.பிள்ளைகள் அந்த எதிர்ப்புகளை எப்படி எடுத்துக் கொண்டார்கள்? அனைத்தையும் மீறி தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார்களா இல்லையா என்பதுதான் 131.35 நிமிடங்கள் கொண்ட ‘நூறு சாமி’ படத்தின் மீதிக் கதை.

மென்மையான காதல் கதைகளையும் மனிதர்களின் நல்லுணர்ச்சிகளையும் இதுவரை படங்களில் காட்டி வந்த இயக்குநர் சசி இப்போது ஒரு சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற பிரச்சினைக்கு எதிராக வாள் சுழற்றி இருக்கிறார் என்றே கூற வேண்டும்.இந்த மண்ணில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தான் இந்த படத்திற்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.அந்த முன்னுதாரண சம்பவத்தை பின்வரும் சமுதாயமும் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.நட்சத்திர நடிகர் நடிகைகளை வைத்து இயக்கும் சசி, இதில் டைட்டில் ரோலான அந்த செல்வி பாத்திரத்திற்கு சுவாசிகாவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று நினைக்கிறபோதே அதற்கான முகாந்திரம் புரிபட்டு விடுகிறது.படத்தைப் பார்க்கிற போது அந்த பாத்திரத்திற்கு சுவாசிகா செய்துள்ள நியாயம் இயக்குநரின் முடிவை ஆமோதிக்க வைக்கிறது. ஆசா பாசங்களை மனதில் வைத்து பூட்டிக்கொண்டு அதேநேரம் பிள்ளைகளிடம் பாசம் காட்டிக் கொண்டு சமுதாயத்தின் கீழ்மையான பார்வைகளைச் சகித்துக் கொண்டு வாழும் அந்தப் பாத்திரத்தில் சுவாசிகா கரைந்து வாழ்ந்திருக்கிறார்.தனது ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாமல் மின்விசிறியிடம் பகிர்வது அவரது பாத்திரத்தின் தனிமை உணர்ச்சியை வெளிக்காட்டும்.கதை நாயகியாகப் படத்தைத் தாங்கிப் பிடித்து உயர்த்தியிருக்கிறார்.

படம் முழுக்க வராவிட்டாலும் இரண்டாவது பாதியில் வந்து எதிர்பாராத நேரத்தில் முகம் காட்டி விஜய் ஆண்டனி அந்த ஏழுமலை கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு நிறைவு அளிப்பதுடன் அவரது திரையிருப்பின் மூலம் படத்திற்குப் பலமும் சேர்த்திருக்கிறார்.சில காட்சிகளின் மூலமே அவரது பாத்திரத்தின் நிறைவை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் உள்ளன.

சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி இருவரும் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்கள். இவர்கள் தவிர பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என துணைப் பாத்திரங்களில் விரும் அனைவரும் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஸ் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்ட முயன்றுள்ளார்.
முதல் பாதியில் பிரதான செல்வி பாத்திரத்தின் மனவுணர்வுக்  கோணத்தில் காட்சிகளில் வண்ணங்கள் நிறையாமல் வறுமையை வெறுமையை உணர வைக்கிறது.ஆனால் இரண்டாவது பாதியில் கதையில் விடிவையும் தீர்வையும் உணர வைக்கும் வகையில் வண்ணங்கள் துலங்கித் தெரிகின்றன.

பாலாஜி ஸ்ரீராம் இசையில் பின்னணி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கும், பாத்திரங்களுக்கும் செழுமை சேர்த்துள்ளன.

ஹரிஷ் யுவராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு இதம். கலை இயக்குநர் வி.சசிகுமாரின் பின் புலப்பணிகள் சிறப்பு.

உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்ட இக்கதையைச் சரியான திரைக் கதையோடு படமாக்கியுள்ளார் இயக்குநர்.

முதல் பாதியில் சற்று வசனங்கள் மிகுந்து இருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் அர்த்தமுள்ள காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் கிளைமாக்ஸ் காட்சி போன்றவை அனைத்தையும் மறந்து ஒன்ற வைக்கிறது.

மறுமணம் என்பது வெறும் பாலியல் தேவைக்கானது அல்ல அப்படி பார்க்கும் பார்வை தவறானது. கைம்பெண்களை சமுதாயம் பார்க்கும் ஏளனப் பார்வையிலிருந்து தவிர்க்கவும் இளக்கார பேச்சிலிருந்து தப்பிக்கவும் உதவக் கூடிய ஒரு விடுதலை என்று கூறலாம். தனிமையில் குமைந்து கிடக்கும் உணர்வுகளில் இருந்து இளைப்பாறுதல் பெறவும் உதவுவதுதான் மறுமணம். மொத்தத்தில் அது ஒரு சுயமரியாதை உணர்வு என்கிற ரீதியில் பெண்மையை உயர்த்திப் பிடித்துள்ளார் இயக்குநர்.

மனித வர்க்கத்தின் முக்கிய தேவை என்கிற போது உணவு போல மூன்றாவது தேவையாக அனைவரும் செக்ஸ் என்று இருக்குமோ எதிர்பார்த்திருந்த நேரத்தில் அப்படிக் கூறாமல் ஒரு துணை என்று கூறி அந்தப் பாத்திரத்தில் கண்ணியம் ஏற்றிப் படத்தையே நாகரிகமானதாக மாற்றி விட்டார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘நூறுசாமி’ பெண்மனத்தின் குரல்.

ரேட்டிங் 4 / 5