சமந்தா ,திகந்த் மஞ்சாலே,
கௌதமி ,ஆனந்த் ,ஸ்ரீ லக்ஷ்மி ,
குல்ஷன் தேவய்யா ,
மன்ஜூஷா ,சைதன்ய கிருஷ்ணா ,
ஸ்ரீமுகி மற்றும் பலர் நடித்துள்ளனர்.பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மார்வெல் நட்ராஜ் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில்
தயாரிப்பாளர்கள் ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு தயாரித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்டவர் சமந்தா.இதனால் தனது கணவரின் வீட்டுக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது. கணவனின் தங்கையின் திருமணத்தை முன்னிட்டு ஊருக்கு வருகிறார்கள்.கணவனின் குடும்பத்தினருடன் பழகி இணக்கத்தைக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் செல்கிறார். அங்கே இளைய மருமகள் குடும்பத்தினருக்கு ஏற்றபடி நடந்து கொண்டு தங்கம் என்று பெயர் எடுத்து இருக்கிறார்.
ஆச்சாரமும் கட்டுப்பாடும் நிறைந்த அந்தக் குடும்பத்திற்குள் நுழைந்து சமையல் , சம்பிரதாயம்,பக்தி என்று அவர்களுக்கு ஏற்றபடி தன் திறமையைக் காட்டிக் குடும்பத்தினரைக் கவர முயற்சி செய்கிறார்.மெல்ல மெல்ல அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கொலைத் தண்டனைக் கைதி குல்ஷன் தேவய்யா, சிறையிலிருந்து தப்பித்து சமந்தாவைத் தேடி வருகிறார். சமந்தா தன்னுடன் வரவேண்டும் இல்லை என்றால் குடும்பத்தினரைப் பழி வாங்குவேன் என்று மிரட்டுகிறார்.இது என்ன சம்பந்தம் இல்லாத கதையாக இருக்கிறதே என்றால் அதற்கு ஒரு முன் கதை செல்கிறது.கணவனுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாத ஒரு கதை.
தன் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து என்றால் தன் உயிரைக் கொடுத்தாவது அதைக் காப்பாற்றுவேன் என்று கூறும் சமந்தா, தன் கணவரின் குடும்பத்திற்கு வந்த ஆபத்தைக் காப்பாற்றுகிறாரா? யாரும் அறியாத அவரது உண்மையான பின்புலம் என்ன ? என்பதைப் பரபர அதிரடிக் காட்சிகளோடு சொல்வது தான் 154.30
நிமிடங்கள் கொண்ட
‘எங்கள் தங்கம்’ படத்தின் மீதிக் கதை.
ஆரம்பக் காட்சிகளில் சமந்தா அந்த ஸ்வர்ணா பாத்திரத்தில் ஒரு குடும்பத்துக் குத்து விளக்கு போல அன்றலர்ந்த மலர் போலத் தோன்றுகிறார் . சமையல் ,பக்தி என்று குடும்பத்தினரின் மனதில் இடம் பிடிக்கச் செய்கிற சாதுரியங்கள் என்று கலகலப்பூட்டுகிறார்.தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து வரும்போது பூவுக்குள் பூகம்பம் போல, பூ ஒன்று புயலானது போல ஜான்சியாக மாறி ஆவேச அவதாரம் எடுக்கிறார். சமையலில் கரண்டி பிடித்த கை சம்ஹாரம் செய்ய துப்பாக்கி எடுத்து ஆடுகிற ஆக்ஷன் ஆட்டம் அசரவைக்கிறது.
வில்லனாக வரும் குல்ஷன் தேவய்யா,நாகரிகத் தோற்றத்தில் வந்தே நரித்தனம் செய்கிறார்.
கிரண்மயி பாத்திரத்தில் வரும்
மன்ஜூஷா சமந்தாவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் செம கலகலப்பு க் காட்சிகள்
சமந்தாவின் கணவர் அனிருத்தாக வரும் திகந்த் மஞ்சாலே, மாமியார் காமாட்சியாக வரும் கெளதமி, மாமனார்
ராமய்யா ராஜுவாக
வரும் ஆனந்த், பாட்டியாக வரும் ஸ்ரீ லக்ஷ்மி, கணவரின் தம்பியாக வரும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக வரும் ஸ்ரீமுகி போன்று துணைப் பாத்திரங்களில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் கலகலப்பாகக் குடும்பத்திற்குள் நடக்கும் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உள்ளன.
பெண்களுக்குப் பிடிக்கும் வகையிலான ஒரு கதையாக கதாசிரியர்கள் ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி எ உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களது கதைக்குத் திரைக்கதை அமைத்திருக்கும் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம் படத்திற்கு வீரியம் சேர்த்திருக்கிறார்.
சமந்தாவை வேறு ஒரு நிறத்தில் ஆக்ஷன் நாயகியாக ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.
படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் ரணகளமாக்கி அதகளமாக மாற்றி, அதிலும் குடும்பத்தினரை இணைத்து ஒரு முழுமையான குடும்பக்கதையாக வழஙகியுள்ளார் .
மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ முழுமையான பொழுதுபோக்குப்படமாக ரசிக்கலாம்.


