புலி ,யானை, சிறுத்தை, மாடு, மான் ,நரி ,வரையாடு, சிங்கவால் குரங்கு, ஓணான்,தவளை, பிளமிங்கோ பறவை, ஹார்ன் பில், சிட்டுக்குருவி , மரங்கொத்தி, பட்டாம்பூச்சி, முள்ளெலி,மின்மினி பூச்சி, மீன்கள்,டால்பின், திமிங்கிலம் போன்றவை இப்படத்தில் இடம்பெற்று வாழ்ந்துள்ளன .
மலை ,காடு ,ஆறு, பள்ளத்தாக்கு, சதுப்பு நிலம், ,அருவி, ஓடை ,ஏரி, கடல், சமவெளி, வயல், மலைச்சரிவு போன்றவை பின்புலங்களாக வருகின்றன.
இந்தப் படத்தை கல்யாண் வர்மா இயக்கியுள்ளார் .கல்யாண் வர்மா, சுமன் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். இவர் கிராமி விருது பெற்றவர்.சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னெடுப்பாக, ‘நேச்சர் இன்:ஃபோகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் நிலங்களை ஐவகையாகப் பிரித்தனர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு பகுத்து தமிழர்கள் நிலங்களைப் பேணி பாதுகாத்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.அந்தப் பகுப்பின் காரணம் தர்க்கரீதியானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அப்படி பன்மைத்துவம் கொண்ட தமிழ்நாட்டின் இயற்கைச் சூழலையும் ,இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் விரித்துக் காட்டி விழிப்புணர்வூட்டும் வகையில் உருவாகியுள்ள ஆவணப்படமாகத்தான் 60.11 நிமிடங்கள் கொண்ட இந்த ‘வைல்ட் தமிழ்நாடு’ தோன்றுகிறது.
இதில் ஒவ்வொரு நிலப் பகுதி பற்றியும் காட்சிகள் வருகின்றன. முதலில் குறிஞ்சி, மலையும் மலை சார்ந்த இடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. அடுத்து முல்லை, காடும் காடு சார்ந்த இடங்கள், அடுத்து மருதம், வயலும் வயல் சார்ந்த இடங்கள்,அடுத்து நெய்தல் ,கடலும் கடல் சார்ந்த இடங்கள், கடைசியாக பாலை ,வறண்டு போன நிலப்பகுதி இப்படி ஐவகை நிலங்கள் பற்றிய இடங்களில் படப்பிடிப்புக் குழு சென்று படப்பிடிப்பு நடத்தி இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் தமிழ்நாட்டு இயற்கைச் சூழலையும் அங்குள்ள பல்லுயிரின வாழ்வியல் இனப்பெருக்கம் உயிர்வாழ் முறை பற்றியும் பல நாட்கள் காத்திருந்து காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளனர் .
மலையில் முதலில் வரையாடு வருகிறது.உயரமான மலைப்பகுதியில் வாழும் அதன் சூழல் சவாலானது.அதே போல ஹார்ன் புல் பறவையின் வாழ்க்கை வருகிறது. மரப்பந்துக்குள் பெண் பறவை தங்கி இருந்து இனப்பெருக்க வாழ்வைக் கடப்பது ஆண் பறவை இரையூட்டுவது போன்றவை வருகின்றன.
தூக்கணாங்குருவி, கூடு கட்டுவதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். கூடு கட்டும் போது முதன் முதலில் எப்படி ஒரு முடிச்சு போடுகிறது என்பதில் தொடங்கி ஒரு கூடு உருவாவது வரை அதில் காட்டப்படுகிறது .அந்த கூட்டைப் பார்த்து பெண் இணை சரி பார்த்து சம்மதம் சொல்ல வேண்டும். அப்போதுதான் சேர முடியும் என்கிற காட்சி வியப்புக்குரியது.
மின்மினிப் பூச்சிகளில் ஆண் மின்மினிப்பூச்சிதான் அந்த ஒளியை உமிழ்கின்றன. அது பெண்ணைக் கவர்வதற்காகவே அப்படிச் செய்கின்றன. ஒரு பருவத்தில் அப்படி ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒளிர்வது கண்களுக்கு பெரிய விருந்தாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உயிரினம் பற்றியும் காட்சிகள் வருகின்றன.
பெண் ஓணானைத் கவர்வதற்காக ஆண் ஓணான்கள் இடையே நடக்கும் யுத்தத்தையும் காட்டுகிறார்கள். ஒரு குடும்பமாக யானை காட்டுக்குள் வாழ்வதில் அந்த இனத்திற்குள் உள்ள ஒத்திசைவு பற்றியும் சாட்சிகள் வருகின்றன. ஒரு நீர்ப்பரப்பில் நீர் அருந்த புலி வந்து காத்திருக்கிறது அப்போது யானை வருவதை அறிந்து புலி அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறது.யானை வரும் போது புலி அங்கு விலக வேண்டும் இதுதான் காட்டின் சட்டம் என்று கூறப்படுகிறது.வேட்டையாடிகள் வரும்போது பறவைகளும் விலங்குகளும் ஒன்றுக்கொன்று அபாய ஒலி எழுப்பித் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதும் காட்டப்படுகிறது.
இதுபோன்று இந்த ஐந்து வகை நிலங்களுக்குரிய அழகு, வளம், அங்கே நிகழும் பல்லுயிரினப் பெருக்கம்,உயிரினங்களுக்குள் நடக்கும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,நிலம் ,நீர் ,காற்று சார்ந்த வாழ்க்கைச் சூழல் போன்ற அனைத்தையும் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
கடைசியில் ஒரு கடற்கரையில் ஆமை முட்டையிட்டுப் புதைத்து வைப்பதுடன் காட்சி முடிகிறது .அந்த ஆமை முட்டை இடக்கூடிய இச்செயல் 100 மில்லியன் ஆண்டுகளாக நடந்து வருகிற உயிரியல் செயற்பாடாகக் காட்டி,இந்த அழகும் சுமூகச் சூழலும் இயற்கையின் வளமும் எதிர்காலத்தில் தொடர்வது மனிதர்களாகிய நம் கையில் தான் இருக்கிறது என்ற கருத்துடன் முடிகிறது படம்.நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.
மிக அழகான ஒளிப்பதிவு அதற்கேற்ற பின்னணி இசை அரவிந்த்சாமியின் அற்புதமான இணைப்புரை போன்றவை இணைந்து இந்த ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப் படத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது .ஆனைமலை, புலிகள் குகை, முதுமலை தேசிய பூங்கா , புலிக்காட் ஏரி,கோடிக்கரை பறவைகள் சரணாலயம் ,பாக்ஜலசந்தி, பிச்சாவரம், விளைநிலங்கள், பவளப்பாறைகள் மெரினா கடற்கரை வரை படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஓர் ஆவணப்படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. காட்சிகள் படத்தொகுப்பு ஒளியமைப்பு இணைப்புரை பின்னணி இசை அனைத்தும் சர்வதேச தரத்தில் உள்ளது இதன் சிறப்பாகும்.
தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் உற்சாகமான திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும் எனலாம்.
ஒரு மணி நேரத்தில் நம்மை தமிழகச் சுற்றுலாவில் பல்வேறு இடங்களைக் காட்டி இயற்கை வளத்தைக் கண்முன் நிறுத்தி சமூக பொறுப்பு உணர்த்தி முடித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு முயற்சியைப் பாராட்டலாம்.
செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ்திரையரங்குகளில்
‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் வெளியாகிறது.


