‘ஜோக்கர்’ விமர்சனம்

jokerஇந்த அமைப்பாலும் அரசாலும் அதிகாரிகளாலும் நீதித்துறையாலும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று சமூகக்கோபம் கொள்ளும் ஒருவன் எப்படி ‘ஜோக்கர்’ ஆக்கப் படுகிறான் என்பதே ‘ஜோக்கர்’ படத்தின் கதை மையம்.

நாட்டில் எங்கு அநியாயம் நடந்தாலும் அநீதி நடந்தாலும் ‘டிராபிக் ராமசாமி’ ஸ்டைலில் களத்தில் இறங்கி அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது ஜனாதிபதி என்கிற பெயர் கொண்ட  நாயகனின் வேலை.

அதற்கு உற்ற தோழன் பொன்னூஞ்சல் .உடனே புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றும் தகவல் தொடர்பு வேலை இசைக்கு. இந்தக் குழு செய்யும் வித்தியாசமான போராட்டங்கள் ஊடகங்களுக்குத் தீனியாகவும்  அதிகார வர்க்கத்துக்கு தலைவலியாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு சிறார்க்கும் வகுப்பறை; ஒவ்வொரு வீ ட்டுக்கும்   கழிப்பறை என்பது இவர்களது நீண்ட கால போராட்ட கோஷமாகவுள்ளது.அப்படி ஜனாதிபதி செய்யும் போராட்டங்களால் பலமுறை போலீசால் தாக்கப் படுகிறார்.

ஒரு முறை ஒரு தனியார் பள்ளி உரிமையாளரைத் தாக்கிய வழக்கில் அவரை நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள் அங்கு தான்தான் ஜனாதிபதி என்றும் ராணுவ ஆட்சிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். பின்னணியை ஆராயச் சொல்கிறார் நீதிபதி. ப்ளாஷ்பேக் விரிகிறது.

ஒரு வாட்டர் கேன் கம்பெனியில் வேலை பார்க்கிறவராக வருகிறார் மன்னர்மன்னன் அதாவது நம் ஜனாதிபதி .ஒரு பெண்மீது ஆசைப் படுகிறார். உன் வீட்டில் கழிப்பறை கட்டு பிறகு தாலிகட்டு என்கிறார் பெண். பிறகு திருமணமும் நடக்கிறது. படாதபாடுபட்டு கழிப்பறை கட்ட அவர் படும் போராட்டம் பெரியது.  முறையாக கட்டப்படாத அக் கழிப்பறை இடிந்து விழுந்து கர்ப்பிணியான மனைவி அடிபட்டு கோமாவுக்குப் போகவே., மனப்பிறழ்வுக்கு ஆளாகி இப்படி ஆகியுள்ளார் என்கின்றன  காட்சிகள்.

Joker-Firstசமூக அவலங்களை ஆங்காங்கே தெறிப்புள்ள வசனங்களாக சிறுசிறு மின்னல் காட்சிகளாக இயக்குநர் ராஜுமுருகன் தூவியுள்ளார். பல காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.  நமதுஅமைப்பை கேலி பேசுகின்றன.கேள்வி கேட்கின்றன. அதிகார வர்க்கத்தை எள்ளல் செய்கின்றன. ஆட்சியினர் பற்றி ஆதங்கப் படவைக்கின்றன.ஆனாலும் டாக்கு மெண்ட்ரி நிழல் விழாத படி எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டுள்ளன காட்சிகள்.

tகழிப்பறை திட்டத்தில் கூட ஊழல்செய்து காசு பார்க்கும் அதிகாரச்  சங்கிலியை தோலுரிக்கின்றது.

ஜோக்கர் என்கிற மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம் வருகிறார் .மனிதர் இருவித தோற்றங்களில் அசத்தியுள்ளார். பல ஸ்டார்களுக்கு சவாலான யதார்த்தமான நடிப்பு.

ஜோக்கர் மனைவியாக யதார்த்த நாயகியாக ரம்யா பாண்டியன். சக போராளி பொன்னூஞ்சலாக மு.ராமசாமி வருகிறார். ஜெயகாந்தன் தோற்றத்தில் காந்தமாக ஈர்க்கிறார் நடிப்பில். உடன் பயணிப்பவராக இசையாக காயத்ரி கிருஷ்ணா. மிலிடரியாக வந்து கவர்கிறார் எழுத்தாளர் பவா செல்லத்துரை.

அனைவரும் கதை மாந்தர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.பார்ப்பவர்கள் தங்களை இதில் கண்ணாடி போல காண முடியும்.  ஏனென்றபால் இது தான்திஜமான  வெகு ஜனங்களுக்கான படம். வணிக அபத்தங்களைக்கொண்டாடும் ஊடகங்கள் இப்படத்தை உச்சி மோந்து கொண்டாட  வேண்டும்.

படத்தில்  செழியனின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் இசையும் இயக்குநரோடு கைகோர்த்து இணையாக பயணித்துள்ளன.கதைக்களமாக வரும் தர்ம்புரி மண்ணும் ஒரு பாத்திரம் போலவே தெரிகிறது. இயக்குநர் ராஜுமுருகன் ஒரு பத்திரிகையாளர்.சினிமா மொழியறிந்து படமெடுத்துள்ளார்.

பத்திரிகையாளரால் நல்ல படமெடுக்க முடியாது என்கிற அவப்பெயரையும் துடைத்துள்ளார் இயக்குநர் . இப்படிப் படம் பற்றி நிறையவே  சொல்லலாம். போய்ப் பார்க்கவேண்டாமா? நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் ஜோக்கர். வெல்டன் ராஜுமுருகன் !.