நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி!

naa-muthu-nffமறைந்த நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து வசீகரன் சிவலிங்கம் ஒரு நண்பனின்  அஞ்சலியாக இறுகி உடைந்த மனதோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதோ வசீகரன் சிவலிங்கம் பேசுகிறார்!

‘ஏழு வருடங்களாக நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த ஏழுவருடங்களில் மூன்று முறை “தமிழர் விருதினை” பெற்ற  ஒரே கவிஞன் நா.முத்துக்குமார். அவருடைய பெரும் ஆற்றலுக்காகவும், சிறந்த பாடல்களுக்காகவும்  இந்த விருதினை வழங்கினோம்!

அனால் பூமிப்பந்தின் உச்சியில் வாழ்கின்ற எமக்கு! உச்சந்தலையில் இடியாய் விழுந்தது நா.முத்துக்குமார் மரணித்த செய்தி.

அறிவுமதி அண்ணன் கவிதைக்  காட்டில் பூத்துக் குலுங்கிய புதுக்கவிதை.
புதுமைக்  கவிஞர்களில் நா.முத்துக்குமார் அண்ணனும் ஒருவர். கவிஞர்கள் வாலி அய்யா, புதுக்கவிதைத் தாத்தா மு.மேத்தா, அண்ணன்  அறிவுமதி, கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் வரிசையில் எந்நேரமும் என் மனதில் நிறைந்தவர் நா.முத்துக்குமார்.

அவருடன் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அவர் பாடல்கள் வெளியாகும் போது  அவருடன் அலைபேசியில் பேசிய நாட்கள் நிறைவு.

அவர் பாடலைப் போலவே நெஞ்சை விட்டு அகலாத உணர்வுகளைத் தருகிறது அவரின் நினைவலைகள்.! அவரின் பிரிவு இனம் புரியாத வலியோடு கூடிய எழுச்சியை தருகிறது. இயந்திர மயமாகிப் போன புலம்பெயர் வாழ்வினில் தொடர் வாசிப்பை இன்னும் நேசிக்க வைக்கிறது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற மனஉறுதியைக் கொடுக்கிறது.

தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு படைப்பாளி தன்னை எப்படி அர்ப்பணித்தான் என்பதற்கு, இளைய தலைமுறைக்கு நா.முத்துக்குமார் எடுத்துக்காட்டு. தன்னையும் தனது உடலையும் முதலில் பாது காக்கவேண்டும் என்பதற்கும் இனி அவரே எடுத்துக்காட்டு.

தாய்மொழியின் மேல் உள்ள அளவு கடந்த காதலால் “கிறுக்கல்” கவிதைகள்  போல 1993 இல் எழுத ஆரம்பித்தேன். ஈழத்தமிழர்களின் தொடர்கிற வலியை, சோகத்தை, விடுதலையை, எம் தேசத்திற்கான எழுச்சியை  எழுத்து மூலம் பதிவு செய்து, ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

என் தாய்மொழிப் பயணத்தில், எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு  “தமிழர் திருநாள்” தைத்திங்கள் 15 -2009 இல் வெளியீடு செய்யப்பட்டது. என்னுடைய இந்த நூலுக்கு  அணிந்துரை எழுதி, வாழ்த்திய மகாகவிஞன் நா.முத்துக்குமார்! இன்று இல்லை என்பதும் அவர் இரு பிள்ளைகளை, சகோதரியின் துயரை எண்ணி நெஞ்சு வெடிக்கிறது.

இது போர்க்களமா இல்லை தீக்குளமா…விதி மாற்றிடும் வாழ்வு(காதல்) புரியாதே! அவரின் பாடல் வரிகளையே உள்வாங்கி  எமது வாழ்வைத்  தொடர்ந்து எழுதத்தூண்டுகிறது. ஒரு பாதி வாழ்க்கைக்குள் இத்தனை  உயரம் தொட்ட இளைஞன். மறுபாதி வாழ்க்கை மரணத்தின் மடியிலா? ஒரு பாதி சாதனை மறுபாதி சோதனையா ?! எம் மண்ணையும், மக்களையும் தமிழீழத்தின் விடுதலையை உண்மையாய் நேசித்த கவிஞன் நா.முத்துக்குமார்.

நா.முத்துக்குமார் இலக்கணம், இலக்கியம், கவிதைகள், கதைகள், பாடல்கள், ஆடல்கள், தேடல்கள் விருதுகள், காவியம் கடந்த நல்ல இதயம்!

அடுத்த தலைமுறையின் பாடல் வரியே!
தமிழ்ப் பாடல் உலகின் தூயதமிழ் முத்து!

அழுகின்ற குழந்தைகளின்
அழுகையை நிறுத்திய
ஒரே பாடல்!

ஆனந்த யாழை மீட்டிய

பறவையே எங்கு இருக்கிறாய் ?

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு !

உன்   பாடல் வரிகள் போல்
நாங்கள் கேட்ட செய்தி
ஆகாதோ என்ற ஏக்கம் !

கவிதையே…எங்கள் பாடலே…
கண்ணீர் அஞ்சலிகள் உனக்கு!

உன் மரணம் !
நம்ப மறுக்குது மனம்
மெய்யாய் பெரிய ரணம்!

இவ்வாறு வசீகரன் சிவலிங்கம் கூறியுள்ளார்.