‘திலகர்’ விமர்சனம்

thilakar2படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி.

வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் அது எதிரியையும் அழிக்கும். எடுத்தவரையும் அழிக்கும். என்கிற கருத்தை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் ‘திலகர். இப்படத்தை பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வி.மதியழகன். ரம்யா,நாசே ராஜேஷ் தயாரித்துள்ளனர். பெருமாள்பிள்ளை இயக்கியுள்ளார்.

வயதானாலும் சின்னப்புத்திக்காரர் உக்கிரபாண்டி. வயது குறைந்தாலும் பெருந்தன்மைக்காரர் போஸ் பாண்டி. இந்த இருவருக்கும் தீராத பகை.

தன்னை முன்னிலைப் படுத்த எந்த அளவுக்கும் கீழே செல்பவர். வாடகை கொடுத்தாவது வாழ்த்துக்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர் உக்கிரபாண்டி. நேர்மையாக இருந்தால் நேசம் பெருகும் என்பவர் போஸ்.

ஊரில் போஸுக்கு பெருகும் ஆதரவும் செல்வாக்கும் உக்கிரபாண்டிக்குள்  பொறாமைத்தீயை  வளர்க்கிறது. வன்மத்தை விதைக்கிறது.

உக்கிரபாண்டி ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார். சிலரின் பிரச்சினையால் வெள்ளூர்காரர்களை தியேட்டருக்குள் விடக் கூடாது. என்று அறிவிக்க.. அது சட்ட விரோதம் என்று  வெள்ளூர்கார போஸ் முறையிட தியேட்டருக்கு சீல் வைக்கப் படுகிறது.

புகையாக இருந்த பகை நெருப்பாகி கொழுந்து விட்டு எரிகிறது.

தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த ஆட்களால் போஸ் குத்திக் கொலை செய்யப் படுகிறார்,
போஸ் பாண்டி இறந்த பிறகு அண்ணனின் கடமையும் தலைமை பொறுப்பும் தம்பி திலகர் மீது வருகிறது. தானுண்டு காதலி ஜெயா உண்டு என்று வம்பு தும்புக்கு போகாத வாலிபனாக வளைய வந்த திலகர்  மீது, வீரம் என்கிற பெயரில் வன்மத்தை ஏற்றுகிறது சுற்றம்.

அண்ணனைக் கொலை செய்தவனை பழிவாங்க வெறியேற்றுகிறார்கள்  தாய், அண்ணி ,குடும்பம் சொந்த பந்தங்கள் எல்லாரும்.

ஆவேசமடைந்த திலகர்  தன் அண்ணனை வேடம் போட்டுக் கொன்றவர்களை வெளிப்படை யாகவே போட்டுத் தள்ளி எரித்து விடுகிறார்.

இந்தப் பகை வளர்ந்து திலகரைத் துரத்துகிறது.அண்ணனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அவனுக்காக வாழ முடிவெடுக்கிறான். ஆனாலும் எதிரிகள் விடவில்லை.

இறுதியில் அண்ணன் மகனான அந்தச் சிறுவன் கண் எதிரேயே திலகரை வெட்டி வீழ்த்துகிறது கும்பல்.

தன் சித்தப்பாவை வெட்டிய எதிரிகளை பார்க்கிற சிறுவன் ராமர் என்ன முடிவெடுக்கிறான் என்பதே க்ளைமாக்ஸ் .

Thilagar- kishore, Anumol (3)படத்தில் போஸ் பாண்டியாக கிஷோர் வாழ்ந்திருக்கிறார். அவரது நெடு நெடு உயரம் பெரிதும் பொருத்தம். அந்த ஏங்கு தாங்கான உடல் வாகு, பெரியமீசையென அவரது தோற்றமே பலவற்றை சொல்லாமல் சொல்லி விடுகிறது. கம்பீரம், மிடுக்கு, கர்வம், கடமை எல்லாமும் கொண்டவராக வந்து நடிப்பை அனாயாசமாக வழங்கிவுள்ளார். படத்தின்முதல் பாதிவரை இவரது ஆட்சி நடக்கிறது

வில்லன் உக்கிரபாண்டியாக வரும் ‘பூ’ராமு மிரட்டியுள்ளார். அந்த நரை முடியும் , மீசையும் மனம் நிறைய வஞ்சகமும், வெஞ்சினமும்.வைரம் பாய்ந்த வில்லனாக வந்து கொடூர- குரூர முகம் காட்டியுள்ளார்.

திலகராக வரும் துருவா… துறுதுறுப்பான தோற்றமும் நடிப்பும் கச்சிதம். பஸ்ஸில் காதலியிடம் பம்முவது ,கண்ணடித்தாலே மிரள்கிற அவர்,ஆவேசமாகி அரிவாளை கையில் எடுத்து  ஆக்ஷன் அவதாரம் எடுப்பது அதிர வைக்கிறது. துருவா புதுமுகம் என்பதை நம்ப முடியவில்லை. சபாஷ்,துருவா நல்லா வருவார்.

மிருதுளா பாஸ்கர் கிராமத்துக் கிளியாக வருகிறார். .அளவாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.
திலகரின் வன்முறை முகமறிந்து விலகுவது நல்ல முடிவு.

திலகரின் அம்மா நாச்சியாராக வரும் சுஜாதா  மாஸ்டரும் நடிப்பில் நிற்கிறார். அழகான கேரள நாயகி அனுமோலை பாந்தமான மனைவியாகக் காட்டி மாற்றியுள்ளார் இயக்குநர். அவரும் வாழ்ந்துள்ளார்.

போலீஸ்காரராகும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவும் அளவான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் மட்டுமா நடித்துள்ளார்கள். அந்த நெல்லை மண், மரங்கள் ,மக்கள் .வீடுகள்,சாலைகள், சுவர்கள், குறுகிய சந்துகள் எல்லாமே பாத்திரங்களாகி மாறி நடித்துள்ளன.

படத்தில் இடம் பெறும்  கதை நிகழ்விடங்கள் புதிதாகவும் யதார்த்தமாகவும் உள்ளன.

பேசவேண்டியதைப் பாத்திரங்கள்  கூர்மையான வசனங்கள் மூலம் பேசியும். பிறஇடங்களில் காட்சிகள் மூலம் பேசவும் வைத்துள்ளார் இயக்குநர்.படத்தில் க்ளைமாக்சுக்கு  முன் வரும் 20 நிமிடக் காட்சியில் வசனமே இல்லை இருந்தாலும் காட்சி கருத்தைப் பேசுகிறது.வில்லன் ஆட்கள் வாழைத்தோட்டம் அழிப்பது, குலசேகரப்பட்டினம் தசரா விழா காட்சிகளில்  பிரமாண்ட அழகு.

அண்ணனுக்கு இறுதிக் காரியம் முடித்து திலகர் மொட்டையடித்து தலை முழுகும் காட்சியில் ஒலிக்கும்’என்ன பாவம் செய்தேனோ.;என்கிற 63 வகையான பாவப்பட்டியல் வரிகள் இது வரை பதிவாகியுள்ளதில் தமிழ்த்திரை காணாத   இறுதிச் சடங்குக்காட்சியின்  ஆவணம் எனலாம்.அதற்கான இயக்குநரின் மெனக்கெடல் வியப்பூட்டுகிறது.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்.பறந்து, பாய்ந்து, குனிந்து ,வளைந்து, நுழைந்து பயணம் செய்துள்ளது அவரது கேமரா

இதன்  இசை தமிழ்ப்படம் கண்ணனா என்று நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு பாடல்களில் பின்னணியில் அதகளம் செய்து இருக்கிறார். இனி இவர் ‘திலகர் ‘கண்ணனாகி விடுவார்.

படத்தில் ஆபாசக் காட்சிகள் இல்லை ஏன் தொப்புள் தெரியும் காட்சிகள் கூட இல்லை. வன்முறை காட்சிகள் தூக்கலாகவே இருக்கின்றன. அதை தாக்கத்துடன் காட்டியுள்ளதுதான் அதிரவைக்கிறது.

திலகர் படமும் அமைதியாக இருங்கடா.. என்றுதான் சொல்கிறது.வன்முறை கூடாதுனென்று தேவர்மகன். பாணியில்தான் முடிகிறது.

குழந்தைக் குற்றவாளிகளை உருவாக்கி விடாதீர்கள் என்றுதான் எச்சரிக்கிறது ஆனால் கத்திக் கத்தி கத்தியுடன் சொல்கிறது.அதனால்தான் ஏ சான்று கொடுத்துள்ளார்களோ?.

என்ன செய்வது இக்காலத்தில் படப்பிடிப்பில்அமைதியாக இருக்கவேண்டி  சைலன்ஸ் என்பதைக் கூட சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது

இயக்குநர் பெருமாள் பிள்ளை யதார்த்தமான மண்ணின் மைந்தர்கள் வாழ்க்கையை அதன் தன்மை குலையாமல் கலையாமல் பதிவு செய்துள்ள முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.