‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படமாக மலர்ந்திருக்கிறது. எழுத்து வடிவில் வந்த நாவலோ தொடர்கதையோ திரைப்படமாக உருவாக்குவது பெரும் சவால்.திரைப்படம் கோருகின்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.திரையில் ஓடும் நேரம், பட்ஜெட், நட்சத்திரங்கள் என திரைப்பட வடிவம் கேட்கும் அனைத்து தேவைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டுத்தான் ஒரு படம் உருவாக வேண்டும்.

பொன்னின் செல்வன் மிகப்பெரிய அளவில் வாசக பரப்பைச் சென்றடைந்த ஒரு படைப்பாகும். அதைப் படமாக எடுப்பது இதுவரை பலராலும் விரும்பியும் நிறைவேறாமல் இருந்த ஒரு கனவாகும். அதை மணிரத்னம் நனவாக்கி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் உலகளாவிய படமாக மாறி உள்ளது. இப்போதைய காலகட்டம் உலகின் பல நாடுகளுக்கும் இப்படம் சென்றடைகிற பொற்காலமாகும். அதனால்தான் இது ஒரு உலகப் படமாக மாறி இருக்கிறது.

பலர் கண்ட கனவை வடிவாக்கி இக்கால இளைய தலைமுறை முன் வைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் படத்தை ஒவ்வொரு தமிழரும் தங்களது கனவாக என் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதோ வந்துவிட்டது.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா,ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஹ்மான், ஜெயராம் என்று ஏராளமான நட்சத்திரங்கள். ஆஸ்கார் விருது புகழ் ஏ.ஆர். ரகுமானின் இசை , பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தேசிய விருது பெற்ற தோட்டா தரணியின் கலை இயக்கம் ,தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையான ஜெயமோகனின் வசனம் என்று அனுபவமும் திறமையும் மிக்க கலைஞர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த மாபெரும் படைப்பினை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இங்கே நாம் பொன்னியின் செல்வன் படத்தின் கதையைச் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அந்தக் கதை நாடறிந்த ஒரு கதையாக இருக்கிறது. அனைவராலும் வாசிக்கப்பட்ட ஒரு படைப்பாக இருக்கிறது. இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது?என்றால் இது வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டிய படம். எப்படி எடுத்துக்கொண்டாலும் இதன் மூலம் ராஜராஜ சோழன் என்ற பெயர் இந்தியாவில் இப்பொழுது போய்ச் சேர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்தனை பெரிய பேரரசுகள் இருந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.

இப்படத்தை இந்திய ரசிகர்கள் முழுமையாகப் பார்த்தால்தான் இந்த படத்திற்கு செய்யப்பட்ட முதலீட்டுக்கு அர்த்தம் உண்டு. அதுவே போன்ற பெரிய படங்கள் வருவதற்கும் வாய்ப்பாக இருக்கும் .இது போன்ற பெரிய படங்கள் வந்தால் மட்டுமே தமிழரின் வரலாறும் பண்பாடும் நாகரிகமும் உலகெங்கும் கொண்டு செல்ல முடியும் .

ஜோதா அக்பர், பாகுபலி ,கேஜிஎப், RRR என்று எத்தனை நாளைக்குத்தான் பிற மாநிலத்து மொழி மாற்றுப்படங்களின் பிரம்மாண்டங்களையும் சரித்திரங்களையும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறோம்?
நம்மிடம் இல்லாத சரித்திரமா? நம்மிடம் இல்லாத பண்பாட்டு வளமா?நம்மிடம் இல்லாத வீரக் கதைகளா? என்றும் நெஞ்சை நிமிர்த்த வைக்கும் செழுமைகள் நம்மிடம் உள்ளன. அந்த வரிசையில் முதல் படமாக வந்திருப்பது தான் பொன்னின் செல்வன்.
இதுவரை உலக சினிமாவை தமிழன் பார்த்தான். இனி தமிழனின் சினிமாவை உலகம் பார்க்கும்.

சில விஷமிகளின் அவதூறுகளைப் புறந்தள்ளிவிட்டு இந்தப் படத்தை தமிழர்களின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும்.

இந்தப் படத்தை பார்க்கும் போது மட்டும் தான் நமது சோழர் கால பெருமிதத்தை உணர முடிகிறது.
படம் ஆரம்பித்ததும் ,கார்த்தி தோன்றும் ‘பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள’
பாடலுடன் தொடங்குகிறது. பாடல் முடிவதற்குள் அந்த வந்தியத்தேவன் பாத்திரம் நம் மனதில் வரையப்பட்டுவிடுகிறது.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணச்சித்திரமும் திரையில் அப்பாத்திரம் தோன்றிய சில வினாடிகளில் பதிய வைத்து விடுகிறார் மணிரத்தினம்.

இயக்குநர் மணிரத்னம் படத்தில் எப்போதுமே நீளமான வசனங்கள் இருக்காது. இதிலும் நறுக்குத் தெரிந்தாற்போல் சின்ன சின்ன வசனங்கள் தான்.வரலாற்றுப் படம் என்பதால் நீள வசனங்கள் பேசி அலுப்பூட்ட வில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் வாரிசுரிமைப் போட்டி,குடும்பப் பிரச்சினை, உள்நாட்டுப் பூசல்கள் ,வெளிநாட்டு சீண்டல்கள் போன்றவற்றை மீறி தனது ராஜ்ஜியத்தை பலப்படுத்தும் அரசன் , அரசு , நிர்வாகம் சார்ந்த கதைதான் இது என்று தோன்றும்.
ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை உணர்ச்சிகளைக் கடத்தி உள்ளார்கள் .அன்பு, காதல், பாசம், சூழ்ச்சி, போட்டி,பொறாமை,, கடமை, நட்பு, துரோகம், பூசல், பகைமை, வன்மம் போன்ற எத்தனையோ உணர்வுகள் சாட்சிகளில் வருகின்றன.

வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழு வேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ் அனைவரும் சிறப்பான தேர்வு. அவர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளனர். இவர்கள் தவிர விக்ரம் பிரபு, சோபியா, ஐஸ்வர்யா லட்சுமி, லால், மோகன்ராம் வினோதினி நிழல்கள் ரவி அஸ்வின் ரஹ்மான் போன்றவர்களும் நடித்துள்ளனர். அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி உள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் அழகும் த்ரிஷாவின் அழகும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை கிறங்கடிக்கின்றன.போர்க்களக்காட்சிகளும் அரண்மனை பிரம்மாண்டங்களும் காட்சி இன்பம் தருபவை.

பாடல்களில் வைரமுத்து இல்லாத குறை தெரிகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.அவர் எழுதியிருந்தால் பாடல்கள் மேலும் பலம் பெற்று இருக்கும்.

எழுத்து வடிவில் ஆனவை திரைவடிவமாக மாற்றும்போது சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் . அந்த அழகிய மாற்றங்களை இதிலும் செய்துள்ளனர். அவை ரசிக்கும் படி உள்ளன. எனவே தொடர்கதை போல் படம் இல்லை என்று சொல்வது புரிதல் இல்லாத பார்வை.ஒவ்வொரு ஊடகத்தின் கூறுமொழிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். திரைவடிவ கூறு மொழி என்பது வேறு.இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு படத்தை ரசிக்க வேண்டும்.எனவே அப்படிப்பட்ட பொருள் இல்லாத வாதங்களைப் புறம் தள்ளிவிட்டு இந்தப் படத்தை வரவேற்போம்.

ஒரு கனவுப் படத்தை உருவாக்கிய மணிரத்னம் குழுவை தமிழர்கள் நிச்சயம் பாராட்டலாம்.மொத்தத்தில் பொன்னியின் செல்வன் தமிழர்களின் கனவு தன் கண் முன்னே திரையில் தோன்றுவதை ரசிக்கும் உணர்வு தரும் அனுபவம்.