மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம்

kalam31சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு அமையும் எரி சக்தி ஆராய்ச்சி மையத்தை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

”நண்பர்களே உங்களது எழுச்சி பெற்ற மனங்களைப் பார்க்கிறேன். உங்கள் உற்சாகத்தைப்பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய வளமான வாழ்வு பெற ஓர் சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். அந்தக் கவிதையின் தலைப்பு ‘வாழ்வில் நான் பறந்துகொண்டே இருப்பேன்’ என்பதாகும். இதை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்கிறீர்களா?

நான் பறந்து கொண்டே இருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்.
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயற்படுத்தkalam1
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன் ஆகாய உச்சிதான் என் இலட்சியம்
பறப்பேன் பறப்பேன் வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த இலட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ வெற்றியடைய முடியும்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்

உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
மாணவர்கள் பாடங்களோடு தங்களது தனித்தன்மை எது எனக் கண்டறிந்து அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே ஆக உங்களுக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன்;,

அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை.அவை என்ன?

1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.

2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.

3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

இந்த நான்கு குணங்களும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம்.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது.
பேராசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களது தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் ”என்றார் அப்துல் கலாம்.
நிகழ்ச்சியில், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரிய ஜீனா ஜான்சன், மரிய ஜீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.