‘மாயா’ விமர்சனம்

nayan-mayaஒரு பேய்ப் படத்தை தனியாகப் பார்ப்பவருக்கு ஐந்து லட்சம் பரிசு என்பதைக்கேள்விப்பட்டு தன் குடும்பச் சூழ்நிலையில் பணப் பிரச்சினையால் கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தவிக்கும் நயன்தாரா தன்னந்தனியாக பார்க்கச் சம்மதிக்கிறார். படத்தின் உதவிஇயக்குநர் , தடுத்தும் தனியாக இரவுக் காட்சி பார்க்கிறார். படத்தைப் பார்த்தால் அதில் வருவது தானாக இருக்கிறது. ஏன், எப்படி என மிரளும் அவர். என்ன செய்கிறார் என்பதே படம்.

ஒரு எழுத்தாளர் எழுதும் பேய்க்கதைக்கு ஆரி ஓவியம் வரைகிறார். ஆரி அந்தக்கதையை நண்பருக்குச் சொல்வது போல் படம் தொடங்குகிறது. பிறகுதான் தெரிகிறது. அதுதான்  கதையில் வரும் படத்தில் காட்டப்படும் பேய்ப் படத்தின்காட்சி என்பது.

மாயவனம் என்கிற காடு அங்குவருகிறவரை பலி கொள்கிறது என்கிற நம்பிக்கையின் பின்னே இருப்பது என்ன? அங்கு ஏன் மனநோயாளிகள் கொன்று புதைக்கப் படுகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்.

படத்தில்  ஒரு குழந்தையின் தாயாக நயன்தாரா நடித்துள்ளார். அவரது கதாநாயகி பிம்பத்தை ஊறு செய்யாதபடி சிரமமான வேலை வாங்காது நடிக்க வைத்துள்ளனர்.

பேய்க்கதை பாணியிலிருந்து விலகிநின்று கதை சொல்ல முயன்றிருக்கிறார்  இயக்குநர் அஸ்வின் சரவணன். பெரும்பாலும் இரவில் கதை நடப்பதால் கறுப்பு வெள்ளையிலேயே காட்சிகள் நகர்கின்றன. ஆர அமர வித்தியாசமாகச் சொல்கிறேன் என்று நத்தை வேகத்தில் நகர்த்துகிறார்கள் கதையை. அதனால் பல காட்சிகள் கண்களுக்கு விருந்தாகவும் பொறுமைக்கு சோதனையாகவும் தோன்றுகின்றன.அதுதான் மாயாவை அட போயா என்று  சொல்ல வைக்கிறது.