அர்ஜுன் தாஸ்,அன்னா பென்,யோகி பாபு, வடிவுக்கரசி,அகிலன்,நந்தகோபால்,VTV கணேஷ்,தீபா ராமானுஜம்,
ராதா ரவி ,அருள் தாஸ்,ஷாஜி சென்,தம்பி ராமையா,ரமேஷ் திலக் ,பரத்வாஜ் ரங்கன்,இமான் அண்ணாச்சி,
பொன்வண்ணன்,ராகு எசக்கி ,சதானந்த் நடித்துள்ளனர்.
ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார்.இசை: ஷான் ரோல்டன்,ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்,படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ,தயாரிப்பு: ஹரிஷ் துரைராஜ்.தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: டெல்டா ஸ்டுடியோஸ்,வெளியீடு: டி. ஆர். எஸ். முத்துக்குமார் மற்றும் கே. ஜே. ஐயப்பன்.
வாழ்க்கையில் அடிபட்ட அர்ஜுன் தாஸ் தவறான வழியில் பணம் சேர்த்துப் பெரியாளாக வேண்டும் என்று நினைக்கிறார். காதல் கை கூடாதது காதலியின் தந்தை நம்பாதது போன்று அதற்கான நெருக்கடிகளும் நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்படுகின்றன. அந்த வகையில் அவர் மின்சார வாரியத்தில் தற்காலிக வேலை பார்த்து வசூல் செய்யும் பணத்தைக் களவாடி விடுகிறார்.பணம் கட்டுபவர்களுக்குப் போலி பில்லை கொடுத்து ஏமாற்றி அந்தப் பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார்.
பிறகு ஒரு நிதி மோசடிக் கம்பெனி தொடங்கி ஏமாற்றுகிறார்.அன்னாபென் வாடகைக்கு வீடு பிடித்து அதை லீசுக்கு விட்டு ஒரு கம்பெனியின் பெயரில் மோசடி செய்து வருகிறார்.இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி இணைந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். குயிக் மணி, மங்களபுரம் நிதி மோசடி என்று களை கட்டுகிறது.லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள்.சம்பாதித்த பணத்தினை அந்நாள் வரை ஆபத்தில் உதவிய நண்பருக்குக் கொடுக்கிறார் அர்ஜுன் தாஸ்.ஆனால் அந்த நண்பர் கொலையாகிறார்.பணம் பறிபோய் விடுகிறது.மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்க மோசடிகளைச் செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். கர்நாடகா சென்று அங்கே சரவணா ஓட்டல் என்று வைத்துப் பிழைக்கிறார்கள். அவர்களைத் தேடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கட்டத்தில் அன்னா பென்னின் மகனைக் கடத்திப் பொறி வைத்துப் பிடிக்கிறார் . சிறுவனை மீட்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.அப்போது அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்குப் பெரிய அளவில் பணம் வேண்டும் என்றும் பெரிய மோசடிகளைச் செய்யத் தூண்டுகிறார்.பெரிய அளவில் திட்டம் போட்டு மோசடியில் இறங்குகிறார்கள். இப்படிப்பட்ட மோசடிப் பயணத்தின் முடிவு என்ன என்பதை நோக்கிச் செல்கிற கதை தான் 152 நிமிடங்கள் கொண்ட ‘கான் சிட்டி’ திரைப்படம்.
2010- 17 என்று கதை சொல்கிறது.இதில் அர்ஜுன் தாஸ் சரவணன் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளார். பவ்வியமாக ஓட்டல் தொழில் செய்பவராகவும் மின்சார வாரியத்தில் மோசடி செய்பவராகவும் பிறகு பல்வேறு நிதி மோசடிகள் செய்பவராகவும் அதற்காக தனது மூளையைச் செலவிட்டு விதவிதமாக மக்களை ஏமாற்றுபவராகவும் நடித்துள்ளார். அதே சமயத்தில் தன்னிடம் வந்த அன்னா பென்னின் மகனைக் காப்பாற்றவும் அவர் பாசமுள்ள ஒரு மனிதராக வருகிறார்.
நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க முடியாத வகையில் அமைந்த அந்த சிக்கலான பாத்திரத்தில் அவர் நன்றாகவே வெளிப்பட்டுள்ளார்.தோற்றம், உடல் மொழி ,வசன உச்சரிப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளன.
அவரது குழுவில் உள்ள ஒருவராக யோகி பாபு வருகிறார். அவ்வப்போது டைமிங் காமெடியில் அவர் சிரிக்க வைக்கிறார். யோகிபாபுவின் தாயாராக வடிவுக்கரசி வருகிறார்.சந்தர்ப்ப சூழ்நிலையின் நெருக்கடி தெரியாமல் அவர் நடந்து கொள்ளும் விதமே சிரிப்பு வரவைக்கும்.
மித்ரா பாத்திரத்தில் வரும் அன்னா பென் அந்த பாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிரித்துக் கொண்டே மோசடி செய்கிறார்.
ஹோட்டல் காரராக வரும் இமான் அண்ணாச்சியும் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் விடிவி கணேஷூம் தங்கள் பங்குக்குக் கலகலப்பூட்டுகிறார்கள்.
வடிவுக்கரசி,நந்தகோபால்,தீபா ராமானுஜம்,ராதா ரவி ,அருள் தாஸ்,ஷாஜி சென்,தம்பி ராமையா,ரமேஷ் திலக் ,பரத்வாஜ் ரங்கன்,பொன்வண்ணன்,ராகு எசக்கி ,சதானந்த் என்று எத்தனை நட்சத்திரக்கூட்டம் . அனைவரையும் வைத்து வேலை வாங்கியுள்ள இயக்குநர் ஆச்சரியம் தருகிறார்.
கான் சிட்டி என்பது மோசமான நகரம் என்பதைக் குறிக்கும் வகையில் அனைவரும் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். பணம் எந்த குறுக்கு வழியில் வந்தாலும் நிலைத்து நிற்காது .குப்புறத்தள்ளி விடும் என்பதை கதையாக்கி இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள்.
கதையின் போக்கில் , டார்க் காமெடி ரகத்தில் இந்தப் படத்துக்கான காட்சிகளை எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். பாடல்களிலும் பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் ஷான் ரோல்டன்.
இரண்டாவது பாதியில் அந்த போலீஸ்காரர் கல்யாண சுந்தரத்திடம் அர்ஜுன் தாஸ் சிக்கிக் கொள்ளும் போது அந்த இன்ஃபெக்டருக்காக செய்யும் மோசடிகள் குறித்து யோசிப்பது தயாராவது திட்டமிடுவது போன்ற காட்சிகள் நீளமானவை.
அவற்றைத் தயக்கமின்றிக் கத்திரி போடலாம்.
மற்றபடி இந்த ‘கான்சிட்டி’ படம் கலகலப்பான குற்ற செயல்கள் பின்னணியிலான நகைச்சுவைப் படம் என்று கூறலாம்.


