பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார் , லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத் ,கவிதா பாரதி , ஆறுபாலா, பீட்டர் ஜெ சந்திரன், ஷிவின், பவன், அக்ஷயா வி ,பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தரராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கிறார். கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.விபின் பாஸ்கர் இசை அமைத்துள்ளார்.
18 கிரியேஷன்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.இந்த ‘சட்டமும் நீதியும் 2’ தொடர் அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5-ல் காணலாம்.
சட்டத்திற்குக் கண் கிடையாது ;அதற்கு நீதிகளை விட நியாயங்களை விட சாட்சியங்கள் தான் முக்கியம்.ஒரு காவல் ஆய்வாளர் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அது கொலையா தற்கொலையா என்பது பற்றிய விசாரணையின் பயணம் தான் இந்த
‘சட்டமும் நீதியும் 2’. அந்த மரணத்தின் விசாரணையில் சட்டத்திற்கு முன்பு சந்தேகம் உள்ள பலரையும் விசாரிக்கிறது விசாரணைக் குழு. அதன்படி அது கொலைதான் என்றும் அதை யார் யார் செய்திருப்பார்கள் என்றும் சாட்சியங்களைக் காட்சிகளாக்கி கதை விரிகிறது .ஒரு கட்டத்தில் அது கொலையல்ல தற்கொலை என்று ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது. ஆனால் அதுதான் முடிவா இரண்டுக்கும் இடையில் வேறு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக இந்த இணையத் தொடர் பேசுகிறது. அந்த மரணத்திற்கு என்ன தான் காரணம் என்பது பல சுவாரஸ்ய முடிச்சுகளுக்குப் பின் தெரிய வருகிறது. சட்டம் ஒரு பக்கம் சாட்சி என்கிற ஒரு பக்கம் ஆனால் உண்மையில் நீதி யார் பக்கம் என்பதை நோக்கி இந்தக் கதை செல்கிறது.
அப்படிக் கொல்லப்பட்டு இறக்கும் காவல் ஆய்வாளர் கனகவேலாக பிரேம்குமார் வருகிறார். கொலைக்குக் காரணமானவர்கள் அதே துறையைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள் என்று கதை செல்கிறது. அப்படிப்பட்ட பாத்திரங்களில் கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறுபாலா போன்றவர்கள் விசாரணை வளையத்திற்குள் வருகிறார்கள்.
பிரேம் குமாரின் மனைவியாக முன்னணி வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் வருகிறார்.தனது கணவரைக் கொலைதான் செய்துவிட்டார்கள் என்று அவர் வாதிடுகிறார்.வேறு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஏற்று நடத்த முன் வராத சூழலில் அவர் முன் நின்று நடத்துகிறார்.இந்தப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளார்.
சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்:து விளையாடக்கூடிய வாதத் திறமை கொண்ட வரலட்சுமி சரத்குமாரை எதிர்த்து வாதிடுபவராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சரவணன் வருகிறார். இறுதியில் யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பது ஒரு பரபர பயணம்.
கணவனை இழந்த சோகத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு பெண் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் பளிச்சிடுகிறார்.
எப்படிப்பட்ட ஆதாரங்களையும் ஜோடிக்கப்பட்டவற்றையும் எதிர்த்து உண்மையை நோக்கி பயணம் செய்யும் வழக்கறிஞர் சத்தியமூர்த்தியாக சரவணன் நேர்த்தியாக நடித்துள்ளார்.அந்த வழக்கறிஞர் பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்- பருத்தி வீரன் சரவணன் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள் .குறிப்பாக சின்ன சின்ன அசைவுகளில் பருத்திவீரன் சரவணன் கவனிக்க வைக்கிறார். அவருக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் போல இணையத் தொடர்களில் அவர் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றவாளி என்று சந்தேகப்படும் போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களது திரை இருப்பின் மூலம் இந்தத் தொடருக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.
எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு நம்மை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை கடத்தியிருக்கிறது.விபின் பாஸ்கரின் பின்னணி இசை கதையின் வேகத்தை முடுக்கி விடுவதுடன் பாத்திரங்களின் உணர்வுகளையும் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியுள்ளது.
ஓர் இணையத்தொடரில் அதுவும் சட்டப் போராட்டம் குற்றம் சம்பந்தப்பட்ட தொடரில் பாடலுக்கு என்ன வேலை? அது எப்படிப்பட்ட பங்கு வகிக்கும் என்று நினைத்தால், ‘நான் என்பவன் உலகை அறியான் ;நானா என்பவன் தன்னை அறியான் ,நானும் என்பவன் தோல்வி அடையான் ;நியாயம் உணர்ந்தவன் நிமமதி அடைவான்’ என்றும் ‘அவரவர் மனதில் ஆளுக்கொரு நியாயம்,உண்மை ஒன்றுதான் ஆடிடுமே தாயம்,ஏற்றி வைக்காதே வலிகளை – தவறை ,ஏற்றுக்கொள்வதே விடுதலை,சட்டம் நிற்பது நூறுசாட்சியில்;நீதி நிற்பது மனசாட்சியில்’போன்று தக்க சந்தர்ப்பத்தில் தத்துவமேற்றிய தனது வரிகள் மூலம் காட்டி அந்த எண்ணத்தை உடைத்துள்ளார் பாடலாசிரியர் மோகன் ராஜன்.
ஒரு கொலை ,அது சார்ந்த விசாரணை என்கிற கதையாக இருந்தாலும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பரபரப்பை முறுக்கேற்றும் வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் ஆதீஸ்வரன்.ஆர்.
இணையத் தொடருக்கு என்று ஒரு மொழியும் நிறமும் கதை கூறும் முறையும் இருக்கிறது. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கான கதையை அமைத்திருக்கிறார்கள் திரைக்கதை எழுதியிருக்கும் பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான்.
இந்த விறுவிறுப்பான கதையை கொலையா தற்கொலையா இரண்டும் இல்லையா வேறொன்றா என்று நம்மை ஒவ்வொரு அத்தியாயத்திலும் மர்மத்தை ஏற்றிக் கொண்டே இந்தத் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்.நீதிமன்ற நடைமுறைகள், நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய கலைச்சொற்கள் , குற்றிவியல் விசாரணை முறைகள் போன்றவற்றைப் பற்றிய ஒரு சிறு தெளிவையும் அறிவையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார் இயக்குநர். யதார்த்தம் மீறாத கூர்மையான வசனங்களும் இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ளதும் சிறப்பு.
மொத்தத்தில், முதல் சீசனைப் போலவே ‘சட்டமும் நீதியும் 2’ தொடரும் இருக்கை நுனி திரை அனுபவத்தைத் தருகிறது.


