ரஜித் மேனன், தீப்ஷிகா, லக்சாசரண், ஸ்ரீராம் கார்த்திக் , விஜே பப்பு ,ஜி.எம்.குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன்,பருத்திவீரன் சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கி உள்ளார்.மாறா இசையமைத்துள்ளார்.பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ளது .
முற்பிறவி போன்று சிந்திக்க வைக்கும் ஒரு கதையானது இது பார்வையாளர்களுக்கு மாயைக்கும் எதார்த்தத்திற்குமான விளையாட்டு காட்டுகிறது .
கேரளாவைச் சேர்ந்தவர் ரஜித் மேனன்.தாவரவியல் ஆய்வாளர்.தாவரங்கள் பற்றி ஆய்வு செய்வதற்குக் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஊருக்கு வருகிறார். பேருந்தில் பயணம் செய்கிறார். எல்லாமே வழக்கத்துக்கு மாறாக உள்ளது போல் தோன்றுகிறது.அந்த ஊரில் அவர் தங்குவதற்கு ஒரு இடம் கிடைக்கிறது. அந்த இடத்தில் திருமணமான இளம் பெண் நக்ஷா சரணைச் சந்திக்கிறார். அவரிடம் பழகும் போது ஏதோ தங்களுக்கு ஒரு தொடர்பு இருப்பதாக உணர்கிறார்.அதனால் குழம்புகிறார்.அவருடன் நெருக்கமாக நினைக்கிறார். ஆனால் பெண்ணோ விலகிச் செல்கிறார்.தான் தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியோடு
ரஜித் மேனன் அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார்.சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க மீண்டும் தனது நண்பருடன் அந்த ஊருக்கு வருகிறார் ரஜித் மேனன்.அப்போது அவர் முன்பு சந்தித்த நக்ஷா சரண் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் வேறு பெயரில், மாறுபட்ட அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
விசாரிக்கிறபோது ரஜித் மேனனை ஏற்கெனவே பார்த்ததே கிடையாது என்கிறார்கள்.மனிதர்கள் மட்டுமல்ல வீடு புவியியல் காட்சி எல்லாமே மாறி உள்ளன.அங்கே தான் வந்ததை நிரூபிக்க முயல்கிறார். ஆனால் எல்லாமே அவருக்கு எதிர்மறையாக நிற்கின்றன.இந்த குழப்பத்தில் இருந்து ரஜித் மேனன் மீண்டாரா ?அந்த மர்மத்தின் பின்னணி என்ன என்பதை சொல்லும் படம் தான் ‘சிட்டுக்குறிஞ்சி’.
சஸ்பென்ஸ் திரில்லர் போன்ற இந்த கதையில் ஒரு சமூகப் பிரச்சினையைக் கூறியிருக்கிறார் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம்.
நாயகனாக நடித்திருக்கும் ரஜித் மேனன், படத்திலேயே ஒரு மலையாளி பாத்திரமேற்றுள்ளதால் அவரது மலையாளம் கலந்த தமிழ் இயல்பாக உள்ளது. தயக்கமும் குழப்பமும் கொண்ட அவரது பாத்திரம் நம்பும்படி உள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் நக்ஷா சரண், பார்த்த பழகிய முகம் போல் உள்ளது அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக உள்ளது.அந்தப் பாத்திரத்தின் நடவடிக்கைகள் அவர் மீது அனுதாபத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.
மற்றொரு நாயகியான தீப்ஷிகாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இருமை குணம் காட்டும் அந்தப் பாத்திரத்தை நம்ப வைக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜே பப்பு, ஜி.எம்.குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன்,பருத்திவீரன் சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு, சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பால் படத்திற்கு உதவி உள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார்.மலைப்பிரதேசத்தை இயற்கை காட்சிகளை அழகாகக் காட்டி எண்பதுகள் 2000 கள் என்று இருவேறு காலகட்டத்தையும் காட்சிகளாக்கி உள்ளார்.இசையமைப்பாளர் மாறா இசையில், பாடல்கள் ஓகே ரகம்.மலைப்பிரதேசத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பையும், திருப்பங்களையும் கொண்ட திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
பின்புலம் அழுத்தமாக இருக்கும் காட்சிகளில் கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மேலும் அழுத்தமாகக் காட்டி இருக்கலாம்.
அவருக்குக் கொடுத்த பட்ஜெட்டில் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம்.
மொத்தத்தில், ‘சிட்டுக்குறிஞ்சி’ காதல் கதையில் ஒரு கால விளையாட்டு.


