சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார்.
மலர்விழி நடேசன் ஷிவானி சுப்பிரமணி தயாரித்துள்ளனர்.
ஒரு விபத்துக்குப் பின் பாத்திரங்கள் பேசிக்கொள்வது போல் படம் தொடங்குகிறது .அந்த விபத்து இரவு 11:30 மணிக்கு நடந்துள்ளது.நினைவு தப்பிய நிலையில் இருக்கும் நோயாளிடம் டாக்டர் பேசுவது போல் அந்த உரையாடல் இருக்கிறது.ஏன் என்ன என்பதற்குப் பதிலாக முன் கதை தொடங்குகிறது.
சந்தோஷ் பிரதாப் திறமையான தொழிலதிபர். தனது காதல் மனைவியை விபத்தில் இழந்தவர்.அதனால் பெரும் மனப் பாதிப்புக்கு உள்ளானவர். அவர் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்.அப்போது இரவு மணி 11:30. சிக்னல் ஒன்றில் நிற்கும் போது,ஸ்கூட்டியில் செல்லும் ஒரு பெண்ணை அதாவது பவ்யா திரிகாவை நாலைந்து பைக் இளைஞர்கள் துரத்துகிறார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சந்தோஷ் பிரதாப், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற உதவிக்குச் செல்கிறார். ஆனால் அந்தப் பெண்ணோ அதை மறுக்கிறார்.இருந்தாலும் வலுக்கட்டாயமாக அவரைக் காரில் அழைத்துச் சென்று தன் வீட்டில் அடைத்து வைக்கிறார். அதைக் கண்ட அந்த பெண் அச்சமாக இருக்கிறார். காணாமல் போன பெண்ணை வீட்டினர் போலீஸ் வைத்து தேடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும்,இவர் ஏன் அந்தப் பெண்ணை அடைத்து வைத்துள்ளார் ? அதன் பின்னணி என்ன? என்பதைப் பரபரப்பான திரைக்கதையோடு சொல்லும் படமே இந்த ‘சிக்னல் அட் 11.30’ படம்.
நல்ல தோற்றமும் நடிப்பாற்றலும் கொண்ட சந்தோஷ் பிரதாப் ஒரு நல்ல படத்திற்காகப் பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் இடத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதே இந்தப் படம்.உணர்ச்சிபூர்வமான காட்சிகள் கொண்ட வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.அவர் எதிர்மறைப் பார்வையில் தோன்றினாலும் அவரது பாத்திரத்தை உணரும்போது அவர் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.
பவ்யா திரிகா ஆக்ஷன் படத்தில் வரும் கறிவேப்பிலை நாயகி போல இல்லாமல் சிறிது நடிப்பிற்கும் வாய்ப்புள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னடா, காதல், டூயட் என்று திரைக்கதையின் முக்கிய திருப்பமாக அமையும் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு பயணித்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் , டீம் லீடர் முனிஷ்காந்த் ஆகியோரது திரைப்பங்களிப்பு படத்திற்குப் பலம்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரவு நேரத்தின் அமைதி, கொடைக்கானலின் அழகு மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் என அனைத்தையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.
இசை அமைப்பாளர் டி.இமானின் இசையில் தந்தை – மகள் பாசத்தைக் கூறும் “ஜோ ஜோ மா..” பாடலும், காதல் வலியைப் பேசும் “போக போக போகாதே…” பாடலும் மனதை வருடுபவை.
வழக்கமான டெம்ப்ளேட் வாத்தியங்கள் இல்லாமல் புதிய ஒலிகளைப் பயன்படுத்தி பின்னணி இசையில் வெளிப்பட்டுள்ளார் டி இமான்.
ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, உளவியல் கிரைம் திரில்லராக பயணிக்கும் கதையை, தொய்வின்றி விறுவிறுப்பான படமாக இயக்கி இயக்குநர் மலர்விழி நடேசன் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு திரில்லர் கதைக்களத்தில் தந்தை – மகள் பாசத்தையும், மனைவியாகும் காதலியின் கணவனின் அன்பையும் பிரிவு வலியையும் உணர்வுப்பூர்வமாகக் காட்சிகளாகி பார்வையாளர்களின் உணர்ச்சிகளோடு கலக்க வைத்துள்ளார் இயக்குநர் மலர்விழி நடேசன்.
குழப்பமில்லாத கதை கூறும் முறை இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
அதன் மூலம் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில், ‘சிக்னல் அட் 11.30’ நின்று கவனிக்க வைக்கும்.


