‘நிறம்’ திரைப்பட விமர்சனம்

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி தனியா ஹோப்,நித்தின் சத்தியா, சுரேகா வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர் . பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.கே ஸ்கொயர் சினிமாஸ் சார்பில் கே பிந்து மாதவி தயாரித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார் .

மருத்துவமனை சார்ந்த க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் தான் இந்த ‘நிறம்’.

ஓர் அடுக்குமாடிக் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.  கட்டடத்தின் தூண் ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை உரிமையாளரான சுரேகா வாணியின் மகள் தன்யா ஹோப் கடத்தப்படுகிறார். அவரை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவி ப்ரீத்தி அஸ்ராணியும் மாயமாகிறார்.மும்முனைகளில் இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்று பேருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை .இருந்தாலும் அந்த மூன்று புள்ளிகளை வைத்துக் கோலம் போல் பின்னப் படுகிற கிரைம் கதை தான் இந்த நிறம். ஒரு கட்டத்தில் இந்தப் புள்ளிகள் இணையும்போது பல கோரங்கள் நிறம் காட்டுகின்றன.இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் இருப்பது யார் என்பதைப் பரபரப்பாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘நிறம்’.

பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் மருத்துவக் கல்லூரி மாணவராக வருகிறார்.காதல் பதற்றம் குழப்பம் போன்ற நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி,பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தவறு யார் செய்தாலும் தட்டிக்கேட்கும் தைரியசாலியாக வருகிறார்.அந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். முகேன் ராவுடனான காதல் காட்சிகளில் இளமை , குறும்பு என வரும் ப்ரீத்தி அஸ்ராணி, தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார்.

மற்றொரு நாயகியாக வரும் தன்யா ஹோப், தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அளவான நடிப்பால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

மருத்துவமனை உரிமையாளராக நடித்திருக்கும் சுரேகா வாணி, பணக்கார திமிர் கொண்ட எதிர்மறை பாத்திரத்தில் வருகிறார். அந்த மருத்துவமனை நிர்வாகியாக நடித்திருக்கும் நிதின் சத்யா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லத்தனம் காட்டி மிரட்டி உள்ளார்.அதிகார அலங்காரம் கொண்ட அரசியல் தலைவராக நடித்திருக்கிறார் கஜராஜ்.மேலும் அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு போன்ற நடிகர்களும் தங்களது பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சான்டோனியோ டெர்சியோ, படம் முழுவதிலும் ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் உணர்வு இருக்கும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும் ரகம்.அவர் வழங்கியுள்ள பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், திரில்லர் காட்சிகளுக்கும் கூடுதல் விறுவிறுப்பூட்டுகிறது.

இறுக்கமாகக் காட்சிகளைத் தொகுத்துள்ள படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் சபாஷ் சொல்ல வைத்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் பலராம் கிருஷ்ணா, மருத்துவப் பின்னணியில் நடக்கும் குற்றங்களை மையமாக வைத்துக்கொண்டு, காதல், காமெடி, ஆக்‌ஷன், மர்மம் ஆகியவற்றை அளவாக கையாண்டு ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை கொடுத்திருக்கிறார்.

நீரோட்டம் போல ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாமல் வெவ்வேறு புள்ளிகளில் பிரித்துப் பறக்கவிட்டு மீண்டும் ஒன்று இணைத்து மர்மங்களைத் துலங்க வைத்து குழப்பம் இல்லாமல் கதை கூறி உள்ள இயக்குநரைப் பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘நிறம்’ க்ரைம் தரம்.