வெற்றி ,பிரியலயா, லிவிங்ஸ்டன் ,துளசி,அபிராமி வெங்கடாச்சலம், ஏ வெங்கடேஷ், ராமர், அருள் டி சங்கர், சபிதா ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் தீரன் அருண்குமார், கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.எம் எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரித்துள்ளார்.
நாயகன் வெற்றி ஒரு கார் மெக்கானிக். அவரது தந்தை லிவிங்ஸ்டன் வேன் ஓட்டுநர்.உழைத்து வருவதே போதும் என்று இருப்பவர் இப்படிப்பட்ட ஒரு நடுத்தர வர்க்க குடும்ப சூழலில் தந்தை, தாய், தங்கையுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் வெற்றி.
தனது கல்லூரியில் படித்த பிரியா லயாவைக் காதலித்தும் வருகிறார்.
இதற்கிடையே, லாரி ஓட்டுநரான வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன் ரூ.5 கோடி சரக்குடன் ஆந்திரா சென்றவர் காணாமல் போய் விடுகிறார்.கோடிக்கணக்கான ரூபாய் பொருளுடன் வேனையும் இழந்த தங்கம் நிறுவனத்தின் முதலாளி ஏ.வெங்கடேஷ், லிவிங்ஸ்டன் மீது சந்தேகப்படுகிறார்.அவர் ஏதோ மோசடி செய்து விட்டதாக நம்புகிறார்.தந்தை காணாமல் போனதை நினைத்துப் பதற்றமாகும் வெற்றி, அவர் மீது விழுந்த திருட்டுப் பழியையும் கண்டு ஆவேசமாகிறார்.உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்குகிறார்.காவல்துறையை மீறி அவர் மும்முரமாக அந்த விசாரணையில் இறங்குகிறார். போகப் போக அவருக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. பிளாக் கோல்டு என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்கிறார்.முடிவு என்ன என்பதுதான் ‘பிளாக் கோல்டு’ படத்தின் மீதிக்கதை.
மன நெருக்கடிகளைச் சுமந்து பெரிதாக முகத்தில் மலர்ச்சியைக் காட்டாவிட்டாலும் அந்த இறுக்கமான முகத்துடனேயே அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தி உள்ளார் வெற்றி. காதல் காட்சிகளிலும் குடும்பத்தில் ஒரு மகனாகவும் தந்தையை இழந்து தவிக்கும் போதும் விசாரணையில் மர்ம உலகம் துலங்கும் போதும் என்று பல்வேறு முகபாவனைகளைக் காட்ட கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியலயாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும், அழகாக வந்து போகிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிராமி வெங்காடசலம், காக்கி உடைக்கான மிரட்டலான விழிகள் உடல் மொழி என்று கம்பீரத்துடன் வருகிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக யதார்த்தமான நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கிறார்.அம்மாவாக நடித்திருக்கும் துளசி, அனுபவம் வாய்ந்த நடிப்பால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
நைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், தங்கம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன முதலாளியாக நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், நைனா மகள் மல்லியாக நடித்திருக்கும் சபிதா ராய், ராமர், கராத்தே வெங்கடேஷ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் குறையில்லாத நடிப்பின் மூலம் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தில் பிளாக் கோல்டு என்று சொல்லப்படுவது தலைமுடியாகும்.சாதாரணமாகத் தலை மயிர் என்று சொல்லப்படுவதற்கு தங்கத்துக்கு நிகரான மதிப்புள்ளது என்று காட்டுகிறார்கள். சர்வதேச சந்தையில் அதற்குள்ள தேவையையும் காட்டுகிறார்கள்.
உலகளவில் அதன் பின்னால் பல கோடி வியாபாரம் உள்ளது என்பதை விவரிப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் தொழில் போட்டிகளின் பின்னணி உண்மைகளை, கற்பனையுடன் சேர்த்து சினிமா பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி, கிரைம் மற்றும் ஆக்ஷன் திரில்லர் பாணிக் கதைக்கு ஏற்றவாறு காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையும் திரைக்கதையின் விறுவிறுப்பை ஏற்றிக் கவனம் ஈர்க்கிறது.
நான் லீனியர் முறையில் தாவித்தாவிச் செல்லும் கதையில் காட்சிகளை தொகுத்து, பார்வையாளர்களை படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் ஈர்த்து விடுகிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் குமார். தொடர்ந்து, படத்தைத் தொய்வின்றித் தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தீரன் அருண்குமார், உண்மைச் சம்பவங்களை மையமாக்கி ஒரு சுவாரஸ்யமான கிரைம் மற்றும் ஆக்ஷன் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
தங்கத்திற்கு இணையான மதிப்பு கொண்ட தலைமுடி பற்றி இது வரை திரையில் சொல்லப்படாத பல தகவல்களைக் கூறியிருகிறார் இயக்குநர் தீரன் அருண்குமார், சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இரண்டு மணி நேரம் பார்வையாளர்கள் கவனத்தை முழுமையாக கவர்ந்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘ இந்தப் பிளாக் கோல்டு பார்வையாளர்களை ஈர்க்கும்.


