’ராம் அண்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்

ரியோ, வர்த்திகா,சேத்தன், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், காத்தாடி ராமமூர்த்தி, முனிஷ் காந்த், மாகாபா ஆனந்த் நடித்துள்ளனர்.
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.அங்கிட் மேனன் இசையமைத்துள்ளார்.ஆர் ரவீந்திரன் மற்றும் சுதர்சனம் EWA என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்கள்.

ரியோ மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறார். அவருக்குப் பெண் அமையாமல் திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறது. பார்க்கிற பெண்களை எல்லாம் தொடர்ந்து செல்கிறார் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை.முதிர் கண்ணனாகி விடுவோமோ என்று பதற்றத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒரு பெண்ணை அதாவது வர்த்திக்காவை ரயிலில் சந்திக்கிறார். பொசுக்கென்று அவரும் இவருக்கு ஓகே சொல்லிவிட இவரால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் அது உண்மைதான்.
இந்தக் காதல் திருமணம் வரை செல்கிறது .ஆனால் அதில் ஒரு பிரச்சினை தினமும் மாலையில் 6:00 மணிக்கு மேல் அவர் எங்கும் வர மாட்டார் .வீட்டில் ரொம்ப கட்டுப்பாடு எனவே வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.கல்யாண ஏற்பாட்டில் கூட ஆறு மணிக்குள் அனைத்தையும் முடித்து விட வேண்டும் என்கிறார்கள். நெருங்கிப் பார்க்கும்போது அவர் மாலை ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறி விடுவார் .காரணம் அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்று அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அந்தக் காதல் நிறைவேறியதா? திருமணம் நடந்ததா ? பிறகு என்ன ஆனது என்பது தான் 142.44 நிமிடங்கள் கொண்ட ‘ராம் அண்ட் லீலா’ படத்தின் மீதிக் கதை.  

திருமணம் தள்ளிப் போகும் அந்த வாலிபத்தைக் கடக்கும் மனிதனின் மன ஏக்கங்களையும் கனவுகளையும் தனது பாத்திரத்தின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார் ரியோ.தான் காதலித்தது ஏலியன் என்று தெரிந்ததும் காதலை தொடர்வதா ? கை விடுவதா என்று தவிக்கும் காட்சியில் நன்றாகவே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

லீலாவாக நடித்துள்ள வர்த்திகா நல்ல தோற்றப் பொலிவுடன் பொம்மை போல் இருக்கிறார். அவர் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் அவரது தோற்றமே அந்த பாத்திரத்திற்கு ஒரு நிறைவு கொடுத்து விடுகிறது.அவர் ஏலியன் என்ற அறியும்போது நமது மனதில் இருந்து அன்னியமான உணர்வு ஏற்படுகிறது.ரியோவின் நண்பனாகவும் வர்த்திகாவின் மறு பாதி ஆண் பாத்திரம் ராமாக வரும் பாலாஜி தியாகராஜன் தயாளன் என்பவரும் நன்றாக நடித்துள்ளார்.

நாயகனின் தந்தையாக வரும் சேத்தன், அம்மாவாக வரும் மாளவிகா அவினாஷ், தங்கையாக வரும் தாஃபியா அபு, மாமனாக வரும் முனீஷ்காந்த்,  நாயகியின் அம்மாவாக வரும் தீபா வெங்கட், மாமன் மாகாபா, தாத்தா காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களுக்குஏற்ற தேர்வுகள்.அவர்களும் தாங்கள் நடித்திருந்த அந்தந்த பாத்திரத்தின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

இக்கதை அண்மையில் வந்த ஒரு படம் போலிருந்தாலும்  அதை நினைக்காதபடி காட்சிகளை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு படத்திற்கு தேர்ந்த தரத்தை வழங்கி கதாபாத்திர உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.இயல்பான சின்ன சின்ன உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக பார்க்கணும் பார்க்கணும் பார்த்துக் கொண்டே இருக்கணும் என்கிற ஒரு வசனம் ஒரு சாம்பிள்

அன்கிட் மேனன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இந்த ஜாலியான படத்திற்குப் பலமாக நின்றுள்ளன .

இது அதீத கற்பனை கொண்டதாக இருந்தாலும் அதற்குள் கலகலப்பைப் புகுத்தி கலகலப்பான முழு நீள வணிகப்பட அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.