‘அங்காரகன் ‘விமர்சனம்

ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் தயாரிப்பில்  ‘அங்காரகன் ‘ படத்தை ஒளிப்பதிவு செய்து மோகன் டச்சு இயக்கியுள்ளார். சத்யராஜ், ஸ்ரீபதி ,நியா, ரெய்னா காரத், ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புக்குட்டி, கே.சி பிரபாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கருந்தேள் ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார். கு.கார்த்திக் இசையமைத்துள்ளார்.

காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு தனிமையான தங்கும் விடுதியில் அடுத்தடுத்து சில பெண்கள் காணாமல் போகிறார்கள்.அது குறித்து விசாரிக்க அசிஸ்டன்ட் கமிஷனர் சத்யராஜ் மற்றும் காவல் துறையினர் அங்கு வருகிறார்கள்.அங்கே தங்கியுள்ள ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ஒவ்வொரு முன்கதை விரிகிறது.
ஒவ்வொரு பாத்திரமும் தான் சொல்வது தான் சரி , தான் மட்டும் தான் நியாயவான் என்று பேசுகிறது.அதிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் முயற்சியில் சத்யராஜ் இறங்குகிறார்.ஒரு கட்டத்தில் கதை மாந்தர்களைப் பேய் வந்து பிடிக்கிறது.அதன் பின்னணி என்று என்ன என்று புரியாமல் இருக்கும்போது ஆங்கிலேயர் காலத்துக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.அதில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடங்காமல் இருக்கும் ஒரு மலைவாழ் விடுதலை வீரன் தான் அங்காரகன் என்று சொல்கிறார்கள். அவனது ஆன்மாதான் பேயாக வருகிறது என்று சொல்லப்படுகிறது.

முடிவில் சத்யராஜ் குற்றவாளிகளைப் பிடிக்கப் போகிறார் என்று நினைத்தால் எதிர் பாராத ஒரு திருப்பம் வருகிறது.அது நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.முடிவு என்ன என்பதுதான் அங்காரகன் படத்தின் கதை.

நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகன் இந்து தொன்மவியலின் படி நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக நம்பப்படுகிறது .அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இவர் ஒரு போர்க்கடவுள் மட்டுமல்ல பிரம்மச்சாரியும் கூட. இந்தப் படத்திற்கு ஏன் அங்காரகன் என்று பெயர் வைத்தார்கள் என்று நினைத்தால்,முன் கதையில் வரும் விடுதலை வீரன் தான் அங்காரகன் என்கிறார்கள்.

படத்தில் அதிவீரபாண்டியன் பாத்திரத்தில் வருகிற சத்யராஜ் அலட்டாமல் தனது டிரேட்மார்க் கேலி கிண்டல் பேச்சின் மூலம் நகைச்சுவையையும் கலந்து படத்தில் காட்சி இறுக்கத்திலும் சிரிப்பை வரவழைக்கிறார்.

படத்தில் ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. அதி வீரபாண்டியன்,குறிஞ்சி ஓட்டல் மேனேஜர் சிவா, இன்சார்ஜ் மணிகண்டன் , மிலிட்டரி மேன், எழுத்தாளர், தியா, ரோஹித், பூஜிதா ,ஆகாஷ். கிறிஸ்டி, பாவாடை சாமி,ஆங்கிலேய மகாராணி ரெனிட்டா,அங்காரகன் என ஏராளம் வருகின்றன.

காணாமல் போன பெண்களைத் தேடும் முயற்சியில் நடக்கும் விசாரணையில் ஆளாளுக்கு கதை சொல்லி நெளிய வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதையும் திணறுகிறது. இயக்குநரும் நம்மைத் திணற வைக்கிறார்.

விடுதியில் வந்து தங்கும் ஜோடிகள் சார்ந்த காட்சிகளில் இளமை மயம். அது மட்டுமல்ல படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலான பாத்திரங்களில் வருபவர்கள் முகவசீகரம் கொண்டவர்கள் எனவே காட்சிகள் சலிப்பூட்டினாலும் அவர்கள் முகங்கள் எரிச்சலூட்ட வில்லை.கதையின் பெரும் பகுதி இரவில் நடப்பதால் அந்தப் பகுதி காட்சிகளை நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

படத்தில் சத்யராஜின் தோற்றமும் அவர் அனாயாசமாகப் பேசும் வசனங்களும் சற்றே நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. இறுதியில் அவர் மீது எதிர்மறை நிழல் விழுவது ஒரு சின்ன ஆச்சரியம்.

படத்தில் போலீஸ் துப்பறிதலைப் பற்றி விரிவாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அல்லது பேய்க் கதை சார்ந்து, அதைப் பிரதானப்படுத்தி பயமுறுத்தி இருக்கலாம். அல்லது முன் கதையில் வரும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைக் விரிவாகக் காட்டிப் புது நிறம் காட்டி இருக்கலாம்.இது ஒரு தேச பக்தி சீசன் என்பதால் அதையும் செய்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து குழப்பி இருக்கிறார்கள்.