‘ஜவான்’ விமர்சனம்

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிப்பில், ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியா மணி , யோகி பாபு நடிப்பில் அட்லி இயக்கி இருக்கும் படம்.

நாட்டைக் காக்கும் ஜவான் ஷாருக்கான். ஒரு சம்பவத்தால் அவர் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். தாயின் தூண்டுதலின் படி அவரது மகன் வந்து தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்து நாட்டில் உள்ள அநியாயக்காரர்களை எப்படிப் பழி வாங்குகிறார் நாட்டுக்கு என்னென்ன நல்லவை செய்கிறார் என்பதுதான் கதை. அதற்கான பாதையில் பயணத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள், செய்யும் சாகசங்கள் பல.அதற்கு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் அதிரடி சரவெடிகள்.ஒரு தனி மனித பிரச்சினையில் எப்படிச் சமூக பிரச்சினை இணைந்துள்ளது என்பதை அழகாகக் கூறி பரபர ஆக்சன் மசாலாவாக ஜவானைத் தந்துள்ளார் அட்லி.

அப்பா விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான். எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்திலும் ஷாருக்கான் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
காவல் அதிகாரி  நயன்தாரா வருகிறார்.அவரும் ஆரம்பக் காட்சியிலே அமர்க்களப்படுத்தி, போகப்போக மாஸ் காட்டுகிறார்.ஷாருக்கான் போலவே இவருக்கும் ஆக்சன் காட்சிகள் உண்டு.
ஆயுத வியாபாரியாக வரும் விஜய் சேதுபதி தனது அநாயாசமான உடல் மொழியால் அதிகம் பேசாமலேயே கவருகிறார். பாலிவுட்டில் இவருக்கும் ஓர் இடம் கிடைக்கும்.

பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் தீபிகா படுகோன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கலங்க வைக்கிறார்.பிரியாமணி தன் பங்கைச் சரியாகச் செய்துள்ளார் .யோகி பாபு கொஞ்சூண்டு வருகிறார் அதிலும் பதிகிறார்.

அட்லியின் படங்கள் மீது வேறு படங்களின் சாயல் இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு ரசிப்பதற்கு ஜவான் படத்தில் ஏராளம் உள்ளன.

கற்பனை செய்வதைப் பிரம்மாண்ட காட்சிகளாகக் கண்முன் நிறுத்துவது என்பது பெரும் சவால் .அந்தப் பிரம்மாண்டத்தை அட்லி சாத்தியப்படுத்தி உள்ளார்.திரையரங்கு அனுபவத்தால் தான் அதை நாம் ரசிக்க முடியும். ஓர் தமிழ் இயக்குநர் அகில இந்தியப் படத்தை இயக்கியதிலும், தமிழ்க் கலைஞர்களை இந்தியப் படத்தில் கொண்டு சேர்த்ததற்காகவும் அட்லியைப் பாராட்டலாம்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர நடிப்புக் கலைஞர்களின் நடிப்பைப் போலவே படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் படத்தைப் பல படிகள் உயர்த்திக் காட்டுகின்றன.அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலம். திரையில் மேஜிக் செய்து காட்டும் ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவு இன்னொரு பலம் என்றால், கண்களை மிரள வைக்கும். அனல் அரசு உள்ளிட்டசண்டை இயக்குநர் குழு அமைத்த சண்டைக் காட்சிகள் வேறொரு பலம்.  படத்தில் துப்பாக்கியில் உள்ள தரத்தை ஜவான் மேலதிகாரிகளுக்கு நிரூபிக்கும் காட்சி அபாரம்.அதே போல தாய்க்கு ஏற்ற கணவனைச் சிறுமியான மகள் கேள்வி கேட்கும் காட்சி ரகளை. இது போல பல உள்ளன.விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனைகளின் தரம், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள், வாக்களிப்பு சார்ந்த விழிப்புணர்வு, நல்ல அரசியல் என ஷாருக்கானை வைத்து கருத்தையும் விதைத்துள்ளார் அட்லி. சமகால அரசியல் குறித்து மக்கள் மத்தியில் புகைந்து கொண்டிருக்கும் பல கேள்விகளை இப் படத்தில் காட்சிகளாக வைத்து பெரிய வணிக ரீதியிலான படத்தின் மூலம் மக்களிடம் அந்த மக்களின் குரலை மட்டுமல்ல  மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தையும் கொண்டு சேர்த்துள்ளார்.படத்தைப் பற்றிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் அதன் பிரம்மாண்டம் தகர்த்து விடுகிறது.அந்த பிரம்மாண்ட அனுபவத்திற்காகவே திரையரங்கிற்குச் செல்லலாம்.

ஜவான் படத்தின் முதல் பாதி பரபரப்பு எனவும் இரண்டாம் பாதி உணர்ச்சிகள் ,சண்டைகள் எனவும் உள்ளது. ஷாருக்கானின் நடிப்பைக் காணவும் ஆக்சன் காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கலாம்.