‘அசுரகுரு’ விமர்சனம்


விக்ரம் பிரபு ,மஹிமா நம்பியார் ,யோகிபாபு, ஜெகன் ,சுப்புராஜ் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியுள்ளார் ராஜதீப். ஒளிப்பதிவு- ராமலிங்கம் . தயாரிப்பு – ஜெ.எஸ்.பி.சதீஷ்.

நாயகன் விக்ரம் பிரபு ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் . அவருக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு.

கணக்கில் காட்டாத  பணத்தைச் சேர்த்து வைக்கிற ஆட்களின்  கறுப்புப் பணம்தான்  இவரது குறி. அதைக் கொள்ளையடித்து தன்னுடைய  அறை முழுக்க நிரப்பி அழகு பார்க்கிற ஆள். அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வள்ளல் என்று பெயரெடுக்கும் ரகமும் இல்லை. படாடோபமாக அனுபவித்துப்  பணக்கார பளபளப்பை ரசிக்கிற ரகமும் இல்லை. பணத்தை அடுக்கி அழகு பார்ப்பது மட்டுமே அவரது குறிக்கோள்.

இதனால்  கொரியர் பாய் விக்ரம் பிரபுவின் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை. இந்த நாயகனுக்கு கையாள் ஜெகன். இவர் போலீஸ்  துறை நபர்.இவர் எப்படி நாயகனுக்குத் துணை? காரணம் வைத்திருக்கிறார்கள்!விக்ரம் பிரபுவின் காதலியாக பிரைவேட் டிடெக்டிவ் மகிமா . புகை ,குடி எல்லாம் உள்ளவர்.

படத்தில் வருகிற ஒரு பர பர காட்சி.ஓடுகிற ரயிலில் புத்திசாலித்தனமாக விக்ரம் பிரபு கொள்ளை அடிக்கிற காட்சி அடடே போட வைக்கும்.

பிரபலமான  யோகிபாபு  டீ கடை ஓனர்..

கொள்ளையடிக்கிறவனை கண்டு பிடிக்கிற துப்பு துலக்குகிற போலீஸ் அதிகாரியாக சுப்புராஜ்.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களே இவ்வளவுதான்.! இவர்களை வைத்துக்கொண்டு  இரண்டு மணிநேரம் படம் காட்டுவது என்பது சாதாரணம் இல்லை. இயக்குநர் ராஜ தீப்புக்கு அது சிறப்பாகவே  வந்திருக்கிறது.

விக்ரம் பிரபு பொருத்தமான ஹீரோவாக உருவெடுத்து  இருக்கிறார். தேர்ந்த நடிகராகி வருகிறார் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. கசக்கிப் பிழியாத காதல் காட்சிகளிலும் கூட பதிகிறார். ,

பார்க்கிற பார்வையில்  அந்த கேரக்டரின் தன்மையை கொண்டு வருவது வெகு சிலருக்கு மட்டுமே வரும். சவாலான கேரக்டர்களை விக்ரம் பிரபுவினால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப்படம் கொடுத்திருக்கிறது. நிச்சயமாக அவர் இந்தப் படத்தில் சில படிகள் மேலே ஏறியுள்ளார்.

மகிமா ,ஜெகன் ,யோகிபாபு ஆகியோரை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கேரக்டரின் வீரியத்தை குறையவிடாமல் பயன்படுத்தியதற்கு இயக்குநருக்கு  வாழ்த்துகள்.

எதிர்பாராத கிளைமாக்ஸ் பாராட்டுக்குரியது .