‘அஷ்டகர்மா ‘ விமர்சனம்

அறிமுக இயக்குநர் விஜய் தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அறிமுக நடிகர் சி. எஸ். கிஷன்,நந்தினி ராய் , ஸ்ரீதா சிவதாஸ்,பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர்.மிஸ்டரி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ளது.

இது பேய்ப் படங்களின் காலம்.ஏராளமான புகைப்படங்கள் வந்து பேய்களை காமெடியன்கள் ஆக்கிவிட்டன. சற்று இடைவெளிக்குப் பின் பில்லி சூனியம் தொடர்பான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

நாயகன் ஒரு மனநல மருத்துவர். அவருக்கு பேய் பிசாசுகள் மீது நம்பிக்கை கிடையாது.
ஒரு டிவி சேனலின் விவாத நிகழ்ச்சியில் ஒரு மந்திரவாதி ஒரு குறிப்பிட்ட வீட்டைக் கூறி அங்கே உங்களால் தங்க முடியுமா? என்று சவாலாகக் கேட்க நாயகனும் ஒப்புக்கொள்கிறார். அந்த வீட்டில் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த குடும்பம் நாயகனைத் தடுக்க அதனை கேட்காமல் வீட்டிற்குள் செல்லும் நாயகனுக்கு என்ன நடக்கிறது? உள்ளே சென்ற பேய், பிசாசு என எதன் மீது நம்பிக்கை இல்லாத மருத்துவர், வீட்டில் நடக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யத்தால் மனமாற்றம் அடைகிறார். பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.

அவர் முயற்சி எப்படிப்பட்டது? பில்லி சூனியம் வைத்தது யார்? என்பதைக் காட்சிகளாகக் காட்டும்போது பார்வையாளர்கள் மனதில் பீதியும் பரபரப்பும் ஏற்படும் வகையில் திரைப்படம் உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் அறிமுக நடிகர் என்றிருந்தாலும் எடுத்துக்கொண்ட படத்தை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி பயமுறுத்தி விடுகிறார்கள். பில்லி சூனியம் ஏவல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலையை இயக்குநர் நன்கு காட்சிப்படுத்தியுள்ளார். அதனால் ஏற்படும் விளைவுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

நம்பமுடியாத கதையை நம்பும் படியாகச் சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.