‘இறைவன்’ விமர்சனம்

மனிதன் ஆபத்தான விலங்கு என்ற பொன்மொழி முதலில் வருகிறது. ‘என் பெயர் அர்ஜுன்.எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. நான் நல்லன்லாம் கிடையாது.தேவைப்படும்போது கெட்டவனா மாறிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டு ஜெயம் ரவி வரும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே பலரையும் பொட்டு வெடி போல சகட்டுமேனிக்கு பலரையும் துப்பாக்கியால் போட்டுத் தள்ளுகிறார்.அந்த அளவிற்கு அவர் மாறியதன் காரணம் என்ன என்று பிளாஷ்பேக் போல் படம் விரிகிறது.

ஜெயம் ரவி உதவி கமிஷனர். நேர்கொண்ட பார்வை கொண்டவர்.தன் காவல்துறை பணியைக் கண்ணாக நினைப்பதால் காதலை எல்லாம் உதறிவிட்டுச் செல்பவர். அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை.
அவருடன் பணிபுரியும் நண்பர் நரேன். சென்னைப் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள். ஸ்மைலி கில்லர் பிரம்மா என்பவன் இதைச் செய்வதாக நம்பப்படுகிறது. நெருங்கிப் பார்த்தால் அவனுக்குப் பின் யாரோ இருக்கிறார்கள் என்று தெரிகிறது.கொலைகள் அதிகரிக்கின்றன. கொலையாளிகளைப் பிடிக்க அர்ஜுன் ஆன ஜெயம் ரவியும் ஆண்ட்ருவான நரேனும் களத்தில் இறங்குகிறார்கள்.இந்தத் தேடுதலில் நரேன் கொல்லப்படுகிறார்.ஜெயம் ரவி அதிர்கிறார்.கொலையாளிகளைத் தேடும் பயணத்தில் ஜெயம் ரவிக்கு என்ன ஆனது?யார் உண்மையான கொலையாளி? கொலையாளிகளை அவர் பிடித்தாரா? என்பதுதான் ‘இறைவன்’ படத்தின் கதை.

பயம் அறியாத ஜெயம் ரவி தனது ஆத்திரத்தையும் கோபத்தையும் மன நெருக்கடியையும் காவல் துறை ரீதியான நெருக்குதல்களையும் முகத்தில் காட்டி விதவிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அவரைக் காதலிக்கும் ஒரு டெம்ப்ளேட் நாயகியாக நயன்தாரா வந்து போகிறார்.நரேன் வந்த சிறிது நேரத்திலேயே இறந்து போய்,கதையை விட்டு வெளியே சென்று விடுகிறார். சீரியல் கில்லர் வில்லனாக வரும் ராகுல் போஸ், அந்தப் பாத்திரத்தின் கொடூரத்தை நமக்குள் கடத்தி விடுகிறார் அப்படி ஒரு நடிப்பு.இன்னொரு பாத்திரத்தில் வரும் வினோத் கிஷனின் நடிப்பில் மிகையைக் கட்டுப் படுத்தியிருக்கலாம்.இவர்கள் தவிர ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, விஜயலட்சுமி எனப் பலர் படத்திலிருந்தாலும் சார்லியைத் தவிர யாரும் பதியவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசையில் எந்தப் பாடலும் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் சில வித்தியாசமான ஒலிகள் மூலம் புதுமைகாட்டியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த் தொடர் கொலைகளின் திகிலைத் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் காட்டியுள்ளார்.

இறந்த உடல்களைக் காட்சிப்படுத்துவது, போஸ்ட்மார்ட்டம் எனக் கலை இயக்குநர் ஜாக்கி தன் உழைப்பைக் காட்டியுள்ளார்.

படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் நீளத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். இரண்டாம் பாதி முடியும் என்ற நேரத்தில் மீண்டும் வளர்ந்து அலுப்பூட்டுகிறது.

13 கொலைகளைச் செய்துவிட்டு நகரையே கலக்கும் சீரியல் கொலைகாரனை அலட்சியமாக போலீஸ் தப்பிக்க விடுவது அபத்தம்.  குற்றம்சாட்டப்பட்டவனை விசாரணையில் வைத்திருக்கும் போது இணையத்தில் நடக்கும் ஹேஷ்டேக் பிரசாரத்தால் விடுதலை செய்யப்படுவது அறியாயம்.

படம் தொடங்கியதுமே இரத்த வாசனை வீச ஆரம்பித்து விடுகிறது .இளம் பெண்கள் நிர்வாணப்படுத்தி கொலை செய்தல், விழிகளைத் தோண்டுதல்,உடலை வாளால் அறுத்தல் என்று கொடூரங்களை அரங்கேற்ற ஆரம்பித்து விடுகிறார் இயக்குநர் ஐ.அஹமது.

சுவாரசியமான காட்சிகளை அமைக்காமல் கொடூரங்களை மட்டும் காட்டி கவர நினைத்துள்ளார். பலகாட்சிகள் இதுதான் நடக்கப்போகிறது என்கிற முன் அனுமானத்திற்கு இடம் கொடுத்துள்ளன.

இரண்டாம் பாதி முழு படம் போல் நீள்கிறது முடிந்து போய்விட்டது என்றால் மீண்டும் தொடங்குகிறது படம்.

கொடூரக்காரர்களிடம் விசாரணை இல்லை, பேச்சு இல்லை அவர்களைப் போட்டுத் தள்ளுவதுதான் பதில் என்று ஜெயம் ரவி நடித்த அர்ஜுன் பாத்திரத்தை வைத்து தொடங்கிய இடத்தில் படம் முடிகிறது. படத்தின் ஒரே ஆறுதல் ஜெயம் ரவியின் தோற்றமும் உடல் மொழியும் மீட்டர் விட்டு விலகாத அவரது நடிப்பும் தான்.