‘உடன்பால்’ விமர்சனம்

‘உடன்பால் ‘ என்கிற படம் ஆகா ஒரிஜினலில் வருகிறது. இப்படத்தில் லிங்கா, அபர்ணதி ,விவேக் பிரசன்னா, காயத்ரி, சார்லி, மயில்சாமி, தனம், தீனா மற்றும் மலர் நடித்துள்ளனர்.கார்த்திக் சீனிவாசன் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு மதன் கிறிஸ்டோபர், இசை சக்தி பாலாஜி,எடிட்டிங் ஜி மதன், தயாரிப்பு கே வி துரை.

போராடிக் கொண்டிருக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம் .அதன் குடும்பத்தலைவர் சார்லி. இரண்டு மகன்கள். ஒரு மகள்.அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது கஷ்ட திசையில் நிற்கிறது குடும்பம்.
மனைவி இறந்து விடவே, மூத்த மகனுடன் சார்லி இருக்கிறார். அவர்களுடன் சார்லியின் அக்காவும் இருக்கிறார். அவர் கொஞ்சம் மனப்பிறழ்வு கொண்டவர்.
அந்தப் பழைய வீட்டை விற்று தங்களுக்குரிய பாகங்களை கொடுத்து செட்டில் செய்தால் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்லாம் என்று மூத்த மகனும் மகளும் நினைக்கிறார்கள்.
சார்லி வீட்டை விற்க மறுக்கிறார் . இந்நிலையில் சார்லி அடிக்கடி செல்லும் வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் செல்கிறார். காம்ப்ளக்ஸ் திடீரென்று இடிந்து நொறுங்கி விழுந்து விடுகிறது. அதில் இறந்தவர்களுக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு என்று அரசு அறிவிக்கிறது. தன் தந்தை இறந்தால் நஷ்ட ஈடு பணத்தைப் பெற்றுப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று பிள்ளைகள் கனவு காண்கிறார்கள். ஆனால் திடீர் என்று சார்லி உயிருடன் வருகிறார். அத்துடன் இடைவேளை விடப்படுகிறது.

அவர் படித்து வந்ததில் மகிழ்ச்சி அடைய வேண்டிய பிள்ளைகள் அதிர்ச்சியடைகிறார்கள்.ஆனால் சார்லி சில மணி நேரங்களில் மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார். அவரது சடலத்தை எடுத்துக் கொண்டு போய் வள்ளலார் காம்ப்ளக்ஸ் கட்டட இடிபாடுகளில் வைத்து நஷ்ட ஈடு பெறத் திட்டமிடுகிறார்கள் மகன்கள். அதன்படி ஒரு வழியாக அரசு ஆம்புலன்ஸில் ஏற்றி பிணத்தோடு பிணமாகக் கலந்து விடுகிறார்கள்.

அதன் பிறகு அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைத்ததா அவர்களது தவறு வெளியே தெரிந்ததா என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் பாதியளவுக்கு ஒரே வீட்டுக்குள் நடப்பது மாதிரி காட்சிகளை வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சலிப்போ அலுப்போ ஏற்படாமல் சுவாரசியமான காட்சிகளால் நகர்த்தி உள்ளார்கள் .படத்தில் நடித்துள்ள லிங்கா , காயத்ரி,அபர்ணதி அனைவரும் நடிப்பில் ஒரே வீட்டுக்குள் நடக்கிற கதை என்கிற குறை தெரியாத அளவிற்கு திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.யாரும் குறை வைக்காமல் தங்கள் குணச்சித்திரங்களில் கரைந்து கலந்துள்ளார்கள்.
லிங்காவின் மகனாகவும் காயத்ரியின் மகளாகவும் நடித்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் மனதில் பதிகிறார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, தந்தை பாத்திரத்தில் நடித்துள்ள சார்லி உயிரற்ற பிணமாக இதில் நடித்துள்ளது அவரது அனுபவத்தை வெளிப்படுத்துகிறது சபாஷ்.

ஒரு தத்துவார்த்த ரீதியாக சொல்ல வேண்டிய கதையை நகைச்சுவை முலாம் பூசி அதே சமயம் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.

பணமா பாசமா என்ற கருத்துதான் என்றாலும் நவீன காலத்திற்கு ஏற்ற மாதிரி இதில் கதை அமைத்துள்ளார்கள்.குறிப்பாகச் சடலத்தை எடுத்துக் கொண்டு அப்புறப்படுத்த அவர்கள் போராடும் காட்சிகள் சரியான கலகலப்பு.
மனித மனம் ஆதாயத்தை தேடுவதும் பணத்துக்காக ஊசலாடுவதும் இதில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

புதிய களம் புதிய முயற்சி என்று இந்தப் படத்தைப் பாராட்டலாம் .

நிச்சயமாக படம் பார்க்க வருகிறவர்களுக்கு இந்த படம் ஏமாற்றாது.டக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.