‘எமோஜி ‘ (EMOJI) இணைய தொடர் விமர்சனம்

காதல்கள் பலவகையுண்டு.தொழில் நுட்பங்களின் ஆட்டத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் சமகால காதல் கதை எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். ஆம் இரண்டாயிரம் ஆண்டு காதலைக் கூறும் உணர்ச்சிகரமான படைப்புதான் இந்த எமோஜி.மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி மற்றும் பல நடித்துள்ளனர். ஷென் எஸ்.ரெங்கசாமி இயக்கியுள்ளார் .ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரித்துள்ளார்.ஆஹா ஒரிஜினல் வெளியிடுகிறது.

காதல் போயின் சாதல் என்பது அந்தக் காலம்.
காதல் போயின் மீண்டும் இன்னொரு காதல் என்பதுதான் இந்தக் காலம். அப்படிப்பட்ட காதல் செல்லும் பாதை மற்றும் பயணம்தான் இந்த இணையத் தொடர்.இதை ஆஹா ஒரிஜினல் வெளியிடுகிறது.
சரி கதை தான் என்ன?

ஆதவ் பிரார்த்தனாவைக் காதலிக்கிறான். ரொமான்ஸ் பிரவாகமெடுக்கிறது. இருவருக்குள் இருக்கும் நேசத்தில் துளியும் பங்கம் இல்லை. ஆனால் பிரார்த்தனாவின் குடும்ப சூழ்நிலை காரணமாக மனம் கொள்ளாக்காதலுடன் ஆதவைப் பிரிய நேரிடுகிறது. அதே பிரார்த்தனாவின் பெண் பார்க்கும் படலத்தில் ஆதவும் இருந்து எந்த தீங்கும் செய்யாமல் வருத்தத்துடன் வாழ்த்தி விட்டு பிரிகிறான்.

இன்னொரு பக்கம் இன்னொரு ஜோடிக்கு இப்படி பிரேக் அப் ஆகிறது.காலத்தின் விளையாட்டு மூலம் இரண்டு ஜோடிகளில் பிரிந்த காதலனும் பிரிந்த காதலியும் ஒன்று சேர்கிறார்கள் . அவர்களாவது ஒழுங்காக சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லை. அவர்களுக்குள்ளும் புரிதல் இல்லாமல் விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

அதற்குப் பிறகு நடப்பது முடிவா? இன்னொரு காதலின் தொடக்கமா?

இப்படத்தில் இளமையின் அவசரங்களையும் அதன் வழி துயரங்களையும் பற்றிப் பேசப்படுகிறது.

இந்த படம் வயது வந்தவர்களுக்கான இளமைக் கதையாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் மனதில் நிறைகிறார் மகத். காட்சிகளில் சின்ன சின்ன உணர்ச்சிகளையும் முக பாவங்களைக் காட்டி தேவிகா, மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர் .இருவர் நடித்திருக்கும் கதாபாத்திரங்களும் எதிர்கொள்ளும் தருணங்களும் ஒரே மாதிரியானவை. சின்ன சின்ன பாவனைகளில் கூட மனதில் பதிகிறார்கள்.நடிப்பிலும் நெருக்கமான காட்சிகளிலும் தாராளம் காட்டியுள்ளார்கள்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் என்று கூறியே படத்தைத் தொடங்குகிறார்கள்.இது முழுக்க முழுக்க வயது
வந்தவர்களுக்கான படம் என்பதை, தெறிக்கும் சில அடல்ட் வசனங்களும் சில காட்சிகளும் உணர வைக்கின்றன.

படிப்பு வருமானம் சுதந்திரம் என்பதை இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் தொடர்.எவ்வளவு சீக்கிரம் ஆண் பெண் நட்பைக் காதலாக்கிக் கொள்வதற்கு அவசரப்படுகிறார்கள் என்பதையும் அவ்வளவு விரைவாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதையும் அழகாகக் காட்சிகளின் மூலம் காட்டியுள்ளார்கள்.உணர்ச்சியின் வேகத்திலும் இளமையின் துடிப்பிலும்
எடுக்கப்பட்ட எந்த முடிவும் அழுத்தமான முடிவாக இருக்காது என்பதை ஒவ்வொரு பாத்திரமும் நிரூபித்து காட்டுகிறது.அவர்களின் அவசரத்தைப் பற்றிய மூத்த தலைமுறையின் பதற்றமும் நீதிபதியின் ஆதங்கத்தின் மூலம் வெளிப்படுகிறது.

இந்த இணையத் தொடர் ஒரு திரைப்படத்துக்கு நிகரான தொழில் நுட்ப நேர்த்தியோடு உருவாகி உள்ளது சிறப்பு.பொதுவாக இணையத் தொடர்கள் தொலைக்காட்சி தொடர்களைப் போல் இருப்பது சகஜம். ஆனால் இது ஒரு திரைப்படத்தின் தரத்தோடு உருவாகியுள்ளது.

இதைக் குடும்பத்தோடு பார்க்க முடியாது.இது இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் அவர்களை நிச்சயம் கவரும். பார்க்கும் அனைவரது முகத்திலும் ஸ்மைலி வெளிப்படும்.