எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘ மைலாஞ்சி’ படப்பிடிப்பு நிறைவு!

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது

இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்க பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான ‘மைலாஞ்சி’, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, “திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்றார்.

“மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையான இதை செய்துள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படபிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் உருவாகியுள்ளது,” என்று அஜயன் பாலா கூறினார்.

மேலும் பேசிய அவர், “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்,” என்று கூறினார்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரையரங்குகளில் வெளியாகிறது.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா (SIIMA) விருதை ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களை கொண்ட கூட்டணி இப்படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, இதில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்பட பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும் என்று இயக்குநர் கூறினார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மை படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக பங்காற்றுவது கூடுதல் சிறப்பு.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.

*

Popular Writer Ajayan Bala makes directorial debut with ‘Ajayan Balavin Mylanji’ bankrolled by Ajay Arjun Productions and presented by Dr. Arjun