‘ஐ’ விமர்சனம்

iiiதன் உடல் திறன் காட்டும் கனவிலிருக்கிற நாயகனின் உடல் அழகை, உருக்குலைத்து சின்னா பின்னமாக்கும் ஒரு கும்பலை எப்படி அதே உருக்குலைந்த உடம்போடு திருப்பித்தாக்கி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை.

நடிப்பு அசுரன் விக்ரம், ஆங்கில அழகி எமி ஜாக்சன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான்,பி.சி. ஸ்ரீராம்  , மெகாபட்ஜெட் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என எதிர்பார்ப்புகளைக் கிளறும் கூட்டணிதான்.

தன் உடல் தோற்றம், புஜவலிமையே உலகம் என்றிருப்பவன் சென்னை குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாழும் லீஎன்கிற லிங்கேசன். உள்ளூர் அழகனான அவனுக்கு மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் தமிழ்நாடு மிஸ்டர் இந்தியா ஆவது அவனது கனவுப் படிக்கட்டுகள். அப்படி இருப்பவன் மாடல் அழகி தியாவின் மாசற்ற ரசிகன். தியா புகழ்பெற்ற மாடல். அவளுக்கு சக மாடல் நாயகனால் பாலியல் சீண்டல் தொடர்கிறது. ரசிகனாக சந்திக்கும் ‘லீ’ என்கிற லிங்கேசனைத் தியா, தன் ஜோடி மாடலாக்க, இந்த  ஜோடி காதல் ஜோடியாகி, வெற்றிஜோடியாகி புகழ் பெறுகிறது. இந்த மாற்றத்தால் முன்னாள் மாடல் நாயகன், தயாரிப்பாளர், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் தோற்றவன், ஒருதலையாய் காதலிக்கும் அரவாணி மேக்கப் வுமன், தியாவை ஒருதலையாய் காதலிக்கும் டாக்டர் எல்லாரும் வெறுப்படைந்து  சேர்ந்து லீக்கு ஐ வைரஸைச் செலுத்தி அவனது தோற்றத்தை நாசமாக்க.. கோரமனிதனாக மாறுகிறான் லீ.

தன் நிலைக்கு காரணமானவர்களை வரிசையாகப் பழிவாங்குகிறான்.இதுதான் ‘ ஐ’ படக்கதை.

படத்தின் ஆரம்பத்தில் எமிக்குத் திருமண ஏற்பாடு தடபுடலான காட்சிகளைக் காட்டுகிறார்கள் அப்போதே எமி கடத்தப்படப் போகிறார் என்று ஒரு சிறுவன் கூட யூகித்து விடுவான். அந்த அளவுக்கு ப்படங்களில் காட்டிக்காட்டி கெடுத்து வைத்துள்ளார்கள்.

i5எமியை கோரமுகமும்  கூன்விழுந்த  உருவமும் கொண்ட விக்ரம் தூக்கிச் செல்கிறார். ஏன் ஏதற்கு என்பதற்குப் பதிலாக முன் கதையாக  விரிகிறது படம்.

தானுண்டு தன் ஜிம்முண்டு என்று சென்னை குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாழும் விக்ரம்.. சம்பந்தப்பட்ட காட்சிகள் விக்ரமின் புஜபலம் காட்டும் காட்சிகள். கூடவே கிச்சு கிச்சு மூட்டும் நண்பனாக சந்தானம்.

மாடல் அழகியாக அரிதாரமுகத்தில் அழகுகாட்டும் எமி ஜாக்சன்.. சீண்டல்களில் முகம் சுழித்து விலகும்  போது, விக்ரமுக்கு நடிக்கச் சொல்லிக் கொடுக்கும் போது, காதலிப்பதுபோல் முகபாவம் காட்டும்.போது என பலவித பாவம் காட்ட வாய்ப்புகள் .எமியின் இந்திய சாயல் அழகு.

சென்னை வாலிபனாக முறுக் கேறும் உடம்புடன் மிரட்டுகிறார் விக்ரம்.தன்னை வம்புக்கு இழுக்கும் போட்டியால் பட்டினப்பாக்கம் ரவியை ரவுண்டுகட்டி அடிக்கும் போது எழுச்சி. உடல் விலிமை இருந்தாலும் எமியை மாடல் அழகியாக நேரில் காணும் போது வெட்கம், மிரட்சி காட்டுவது அழகு.

உயரத்திலிருக்கும் அவரை தொட்டுநடிக்க அஞ்சுவது.. தயங்குவது மிரள்வது.. யதார்த்தம். தன் உடல் உருமாறி அழகிழக்கும் போது அழுவது. பழிவாங்கத் துடிப்பது.. என தோற்றத்திலும் நடிப்பிலும் பலபடிகள் மேலே சென்றிருக்கிறார் விக்ரம். இந்த ஒப்பனைக்கு ஒத்துழைத்ததில் தன் அர்ப்பணிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார். வெல்டன் விக்ரம்.

படத்தில் பெரும்பகுதி விக்ரமின் விஸ்வருப தரிசனம்தான் என்றாலும் ராம்குமார், உபன் படேல், சுரேஷ்கோபி, மிஸ்டர் இந்தியா காமராஜ் ,ஓஜஸ்ரஜனி என எல்லாருமே பதிகிறார்கள்.

சீனாவின் கண் கொள்ளா இயற்கை அழகு பிரமாதம். பிரமாதப்படுத்தியுள்ளது பி.சி. ஸ்ரீராமின் கேமரா.

பாடல்களில் தன் பங்கை சரியாகச் செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். ஆனால் இயக்குநர் ஷங்கர் என்ன செய்திருக்கிறார்?கதைக்காக மெனக்கெடவில்லையே ஏன்? சீனா வரை போக மறக்காதவர்,பேனாவை வைத்து மெனக்கெடவில்லை .சாதாரண பழிவாங்கல் கதையைத்தான் இவ்வளவு பிரமாண்டமாக தந்திருக்கிறார். பிரதானமான கதையைப் புறந்தள்ளிவிட்டு பிரமாண்டத்தை நம்பியுள்ளார்  .அது தவறென்று பிறகு உணர்வார்.சந்தானத்தின் வெறுப்பேற்றும் பேச்சையெல்லாம் காமெடி என்று எண்ணும் இடத்திலா ஷங்கர் இருக்கிறார்?

அரவானிகளைக் கேலிப்பொருளாக்குகிற அளவுக்கு  ஷங்கர் பிற்போக்கானவராக இருப்பது சோகம்.திரைக்கதையில் தொய்வு ,காட்சிகளில் நீளம், பழகிய காட்சிகள்  போன்றவை பெரும் பின்னடைவுகள்.

நட்சத்திர ஒட்டலில் மெகா விருந்துதான்.ஆனால் உப்பில்லாமல் சாப்பிட்ட உணர்வு.,