‘ஒயிட் ரோஸ் ‘விமர்சனம்

கயல் ஆனந்தி, ஆர் கே சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நட்சத்திரா, சசி லயா, ரித்திகா சக்கரவர்த்தி, ஹாஸின், தரணி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் கே. ராஜசேகர். ஒளிப்பதிவு வி இளையராஜா, இசை சுதர்சன், எடிட்டிங் கோபி கிருஷ்ணா, பாடல்கள் வைரமுத்து.
தயாரிப்பு என். ரஞ்சனி.

பெண்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்கிறான் ஒருவன்.முகத்தையும் அடையாளம் காண முடியாமல் சிதைத்து விடுகிறான். இப்படிப்பட்ட கொடூரமான கொலையாளி யார் என்று போலீஸ் தேடுகிறது.

திவ்யாவும் அஷ்ரப்பும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . தீவிரவாதிகளுக்கு எதிரான போலீஸ் தாக்குதல் ஒன்றில் திவ்யாவின் கண் எதிரிலேயே அவளது காதல் கணவன் அஷ்ரப் கொல்லப்படுகிறான். அவனையும் தீவிரவாதிகள் என்று நினைத்து விடுகிறார்கள்.

காதல் கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு திவ்யாவின் வாழ்க்கை சூன்யம் ஆகிறது. தனது ஒரே மகள் தியாவுடன் இருக்கும் அவள் தன் குடும்பத்தைக் காப்பாற்ற சிரமப்படுகிறாள்.
இவள் ஒரு பெண் புரோக்கரால் திலீப்பிடம் அனுப்பி வைக்கப்படுகிறாள் .பிறகு தான் தெரிகிறது அந்தக் கொடூர கொலைகளைச் செய்வதே திலீப் என்று. அவனிடம் இருந்து தப்பிக்க திவ்யா படாத பாடுபடுகிறாள். போலீஸ் துரத்தல் தாக்குதல் என்று விறுவிறுப்பு காட்டிச் செல்கிறது படம்.
திலீப் ஏன் அப்படியானான்? என்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் வருகிறது.அந்த திலீப் என்கிற பாத்திரம் இறந்த பெண்களுடன் உறவுகொள்கிற கொடூரமான மனப் பிறழ்வுக்கு ஆளானவன் .நெக்ரோபீலியா என்கிற அந்த மனநோய்க்கு ஆளாகி இந்தச் செயலைச் செய்கிறான் திலீப்.தாழ்வு ணர்ச்சியின் அழுத்தத்தால் எந்தவொரு எதிர்ப்பும் நிராகரிப்பும் இல்லாத பெண்களை அடைவதில் திருப்தி கொள்கிறான்.அதன் மூலம் அவன் மகிழ்ச்சி அடைகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் போலீஸ் அவனை என்ன செய்கிறது ?அவனிடம் சிக்கிய திவ்யாவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.


படத்தின் ஆரம்பத்தில் கயல் ஆனந்தின் காதல் கணவராக அஷ்ரப் வருகிறார்.
அதன் பிறகு படம் முழுக்க கயல் ஆனந்தி தான் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

ஆர் கே சுரேஷ் வழக்கம்போல வில்லனாக வந்து மிரட்டுகிறார்.கயல் ஆனந்தி படம் முழுக்க அழுதுகொண்டு துயரங்களைச் சுமந்த வண்ணம் இருக்கிறார் .அவர் கலகலப்பாக இருக்கும் காட்சிகள் மிகவும் குறைவாக உள்ளன.

போலீஸ் அதிகாரியாக வரும் ரூசோ ஸ்ரீதரன் அளவாக நடித்துள்ளார். அஷ்ரப்பாக நடித்துள்ள விஜித் சில காட்சிகள் மட்டும் வருகிறார். குழந்தை நட்சத்திரா,தியா பாத்திரத்தில் படம் முழுக்க வருகிறாள். சிறுவயது திலீப் பாக வரும் பரணி, சுவாதியாக வரும் ரித்திகா சக்கரவர்த்தி, காவியா ஆக வரும் நடிகை தரணி ரெட்டி ஆகியோரும் மனதில் பதிகிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நன்றாக உள்ளன.

திரைக்கதையில் அடுத்து நடக்கவுள்ள காட்சிகளை முன்பே யூகிக்க முடிவது பெரும் பலவீனம் .நகராட்சிகளை படமாக்கி இருக்கும் விதம் பழைய சாயலைக் கொண்டுள்ளது.படத்தில் இரண்டு நல்ல பாடல்கள் உள்ளன. வைரமுத்து எழுதியுள்ளார்.
பின்னணி இசை மிகச் சிறப்பாக உள்ளது.
காட்சிகளில் மேலும் புத்திசாலித்தனம் காட்டி இருந்தால் ஒயிட் ரோஸ் மேலும் வாசம் உள்ளதாக மாறி இருக்கும்.