‘ஒருநாள் இரவில்’ விமர்சனம்

oru-naal-iravilபாரின் ரிடர்ன் ஆசாமி சத்யராஜ் .பணம் சம்பாதித்தாலும் வீட்டில் யாரும் மதிக்கவில்லையே என்று அவரை வெறுமையும் விரக்தியும் வாட்டுகிiன்றன.

பொழுது போக்க  நண்பர்களுடன் பாட்டில் சகவாசம். இவரை அண்டி அவர்களும் ஜால்ரா போட்டு வருகிறார்கள். ஒரு நாள் அலுத்துப்போய் ஒரு சபலம் வருகிறது. அதற்கிணங்க சாலையில் நிற்கும் ஒரு விலைமாதுவை ஆட்டோக்கார பையன் அழைத்து வருகிறான். எங்கு சென்று ஜாலியாக இருப்பது?. ஓட்டல் போனால் அங்கும் தெரிந்த முகங்கள் எனப் பயம் . ஒருவழியாக காலியாக இருக்கும் தன் கடைக்கு அழைத்து வருகிறார். அவளுக்கு பரோட்டா வாங்கி வருகிறேன் என்று வெளியே செல்லும் ஆட்டோக்காரன் மது அருந்தி இருந்ததால் போலீஸிடம் பிடுபடுகிறான். விடியும்வரை போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப் படுகிறான்.

சத்யராஜும் அனுமோலும் தங்கியிருந்த அந்தக் கடை வீட்டுக்கருகேயே இருக்க பயம் பதற்றத்தில் உள்ளே ஒன்றுமே நடக்கவில்லை  . இரவு நெடுநேரம் வீடு திரும்பாத சத்யராஜைத் தேடி குடும்பம் பதற்றப்பட்டு, உறவினர் எல்லாம் வந்து சேர்வதை ஷட்டருக்குள் இருக்கும் சத்யராஜ் ஜன்னல் வழியே பார்த்து கலவரமாகிறார்.

குற்றவுணர்ச்சியில் பதறும் சத்யராஜைப் பார்த்து விலைமாது அனுமோல் ஏதோ விபரீதம் என்று உணர்ந்து தன்னை வெளியே விடுமாறு சண்டை போடுகிறார். பொழுதும் விடிகிறது  ஷட்டர் திறக்கப் படுகிறது. இதுதான் இடைவேளை.

இதற்குப்பின் என்ன ஆகிறது என்பது  விறுவறுப்பான மறுபாதிக்கதை. மலையாளத்தில் வந்து வெற்றிபெற்ற ‘ஷட்டர்’ படத்தின் தமிழ் வடிவம் தான் இந்தப்படம். பல படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றிய ஆண்டனி இதை இயக்கி உள்ளார். விலைமாதுடன் ஓர் இரவு தங்கியுள்ள கதாநாயகன், ஒரு ஷட்டருக்குள் நடக்கும் கதை காட்சிகள் என கதை ஆபாசமாகிவிடும் என்கிற அபாய சவால்கள் இருந்தாலும் நயமான விறுவிறுப்பான திரைக்கதையால் இருக்கை நுனிக்கு வர வைத்து விடுகிறார்  இயக்குநர். சத்யராஜின் நடிப்பைவிட அவரது பெரிய மனிதர் இமேஜே படத்துக்கு பாந்தமாக பொருந்துகிறது. விலை மகளாக அனுமோல் அனாயாசமாக பரிமளித்துள்ளார். ஆபாச நெடி இல்லாமலேயே பார்வை. உடல் மொழி யாலேயே அப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார். ஆட்டோகாரனாக வரும் வருண் இயல்பான நடிப்பு.

எப்போதும் விளையாட்டுத்தனமானவர் என்று கருதவைக்கும் யூகிசேது இதற்கு வசனம் எழுதியதுடன் வாய்ப்பு தேடும் சினிமா இயக்குநராகவும் வருகிறார்;  பதிகிறார்.

படத்தில் வருகிற கதைமாந்தர்கள் அனைவரும் அளவறிந்து அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

எம்.எஸ்.பிரபுவின் கேமராவும் நவீனின் இசையும் படத்துக்கு பலம். எடிட்டர் ஆண்டனி சினிமா மொழியை அறிந்து கதை சொல்லியிருக்கிறார்.  இயக்குநராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். சபாஷ்.

தயாரிப்பாளராக ஏஎல். விஜய்யின் திங்க்பிக் ஸ்டுடியோஸ் நம்பகத்தன்மை பெற்றுள்ளது.