‘ஒரு தோழன் ஒரு தோழி’ விமர்சனம்

Oru-Thozhan-oru-Thozhi-Movie-still-31திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்து உருவாக்கியுள்ள படம் ‘ஒரு தோழன் ஒரு தோழி’ மனோதீபன், அஸ்த்ரா, மீனேஷ் கிருஷ்ணா, அபிநிதா, ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர். பி.மோகன் இயக்கியுள்ளார்.

ராஜபாளையம் பகுதிக்கார்களான சுடலையும் வேல்முருகனும் நண்பர்கள். இருவரும் நூற்பாலையில் வேலை பார்க்கிறார்கள். சொற்ப சம்பளம் என்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை யாரோ பலவந்தப் படுத்த முயல ஓடிச்சென்று காப்பாற்றுகிறார்கள். அதன்பின் சுடலை அவளைப் பார்க்க முயல அவள் தவிர்க்க அவன் தொடர ஒரு கட்டத்தில் பரிவு அன்பாகி காதலாகிறது.அவள்தான் காதலி பூங்கொடி. கூடவே நண்பன் வேல்முருகனும் இருக்கிறான் அவனுக்கு முறைப் பெண் கலைச்செல்வி மீது ஆசை அது தனிக்கதை யாகத்தொடர்கிறது.

இருவேறு காதல்களும் வளர்கின்றன. முதலில் பூங்கொடி தன் காதலனின் நண்பன் வேல்முருகன் மீது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக வெறுப்பு காட்டுகிறாள். பிறகு அவனைப் புரிந்து கொண்டு அவனையும் தோழனாக ஏற்றுக் கொள்கிறாள். நண்பர்கள் இருவரது வாழ்க்கையும் இப்படித்தொடர நான்கு பேரும் ஒரு கட்டத்தில் நல்ல வாழ்க்கை தொடங்கும் கனவில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் பூங்கொடி தன் வீட்டில் பட்ட கடனுக்காக கந்துவட்டிக்கார சுருளி அவளை அடைய நினைக்கிறான். அவன் தொல்லை வேறு தொடர்கிறது.அவளைத் தேர்வு எழுத விடாத படி தடுக்கிறான் சுருளி. காதலன் சுடலை வந்து தடுத்து தேர்வு எழுதப்போக விடுகிறான். இதனால் சுருளிக்கும் சுடலைக்கும் பகை வளர்கிறது.

ஒருநாள் பூங்கொடியின் செல்போன் பழுதாகி விடுகிறது. பழுதுபார்க்க ஒரு கடையில் கொடுக்கிறார்கள்.ஒருசமயம் குழந்தைகள் விளையாடுவதை செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறாள். வீடியோ ரெக்கார்டிங்கை ஆப் செய்ய மறந்து விடடதால் அவள் அந்தரங்கமாக உடைமாற்றுவதை எடுத்து விடுகிறது மொபைல் கேமரா. அக்காட்சிகளைக் காதலனைக்கூட பார்க்கவிடவில்லை.அவனை வைத்தே டிலிட் செய்துவிடுகிறாள்.எல்லாம் அழித்து விட்டதாக நம்பினாள். ஆனால் பழுதுபார்க்க கொடுத்த கடையில் ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் மீண்டும்  மீட்டு எடுத்து அதைக் காட்டி அவளை அடைய மிரட்டுகிறார்கள். பயந்த பூங்கொடி விஷம் சாப்பிட்டு விடுகிறாள். இதனை அறிந்த சுடலையின் நண்பன் வேல்முருகன் அவள் சாகக் காரணமானவர்களை எல்லாரையும் கொன்று விடுகிறான் கலைச்செல்வியுடனான அவனது திருமணம் என்ன ஆனது சுடலை என்ன ஆனான் என்பதே முடிவு.

ராஜபாளையம் என்கிறஅந்த வறண்ட பிரதேசம் பச்சையே காணாத ஊர். அங்கு வசிக்கும் சாதாரண மனிதர்கள்,அவர்களின் வறுமை ,நட்பு காதல் பற்றிய கதைதான் இது. அந்த பின்னணியே புது நிறமாக இருக்கிறது.காய்ந்த பின்னணியில் உயிர்ப்புள்ள ஈரமான கதையைக் கூறியுள்ளார் இயக்குநர் மோகன்.  நாயகன் மனோதீபன் விஷ்ணுவிஷாலை நினைவூட்டும் முகம், துறுதுறுவென இருக்கிறார். அவர் பங்கை சரியாகச் செய்துள்ளார்.

நாயகி அஸ்த்ரா சினிமாவுக்கான முகமல்ல வறுமையும் வெறுமையும் காட்டும் முகம் .

இன்னொரு நாயகனும் சுடலையின் நண்பனாக வருபவருமான மீனேஷ் கிருஷ்ணா தாடி வைத்தமுகம் என்றாலும் யதார்த்த நடிப்பை தாடியை விட்டு வெளியே காட்டியுள்ளார்

இன்னொரு நாயகி அபிநிதா மூக்கும் முழியுமாக இருக்கிறார். கண்கள் பேசுகின்றன.  வம்புக்கு இழுத்து வதைப்படும் வேடத்தில் வரும் ஹலோ கந்த சாமி சிரிக்க வைக்கவில்லை அனுதாபத்தையே அள்ளுகிறார்.

ஒளிப்பதிவில் ராஜபாளைய வெம்மையை கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சிவன் குமார். ஜெய்கிரிஷின் இசையில் எல்லாப் பாடல்களும் இனிமை. பின்னணியிலும் நேர்த்தி.

யதார்த்தமான இடங்கள். மனிதர்கள் முகங்கள் , நடிப்பு என பாசாங்கு இல்லாமல் ஒப்பனை விலக்கி காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. வழக்கமான குத்தாட்டம் குடி ஆட்டம் கும்மாளங்கள் தவிர்த்து படம் உருவாக்கப் பட்டுள்ளது

நேர்மையான காதலையும் தூய்மையான நட்பையும் உயர்த்திப்பிடித்துள்ள கதை.