‘கஸ்டடி’ விமர்சனம்

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், ஜீவா, ராம்கி,பிரேம்ஜி,சம்பத்ராஜ்,ஜெயபிரகாஷ் நடித்துள்ள படம்.இசை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா. எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட் பிரபு.

நாக சைதன்யாவின் அண்ணன் ஜீவா போலீசில் சேர்ந்து இன்ஸ்பெக்டராகும் கனவில் இருப்பவர். அவர் ஒரு திட்டமிட்ட குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகிறார் . அண்ணன் இறந்த பிறகு அந்த வேலைக்குச் செல்கிறார் தம்பி நாக சைதன்யா.

நாக சைதன்யா தனது இரவு ரோந்தின் போது தனது வாகனத்திலேயே விபத்தை ஏற்படுத்திய அரவிந்தசாமியையும் சம்பத்ராஜையும் கைது செய்து கஸ்டடியில் வைத்திருக்கிறார். கைது செய்து கஸ்டடியில் வைத்திருந்தபோது அரவிந்த சாமியைக் கொல்ல இன்னொரு டீம் வருவது அறிந்து, கஸ்டடியில் வைத்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு ஓடுகிறார் ஓடுகிறார்.

அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்குகிறார். தன் அண்ணன் இறப்பதற்குக் காரணமான அந்த நாச வேலை செய்தவர் அரவிந்தசாமி எனத்தெரிகிறது. ஆனால் அரவிந்தசாமி தன் அரசியலில் வன்முறை வேலைகளுக்குத் துணையாக இருப்பதால் நீதிமன்றத்தில் வாய் திறந்தால் உண்மை தெரிந்து விடும் என்பதால் தனக்குக் கீழே உள்ள உயர் போலீஸ் அதிகாரியான சரத்குமாரை வைத்து அரவிந்தசாமியைப் போட்டுத் தள்ள  உத்தரவிடுகிறார் முதலமைச்சர் பிரியாமணி.அரவிந்தசாமியைக் கொல்லும் முயற்சியில் சரத்குமார் தலைமையில் போலீஸ் படை  துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க வைத்து,நாக சைதன்யா கொண்டு செல்லும் அரவிந்தசாமி சுடப்படுகிறார்.அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டாரா? அந்தப் பணியில் சைதன்யா வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் ’கஸ்டடி’ படத்தின் கதை.

’கஸ்டடி’ யைப் பரபரப்பான திரில்லராக எடுக்க முயற்சி செய்துள்ளார் வெங்கட் பிரபு.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி தோன்றும்  காதல் காட்சிகள் அவர்களிடம் நடக்கும் குறும்புகள் ரசனையானவை.ஆனால் அவற்றை ரசிக்க முடியாத அளவிற்கு போலீஸ் பரபரப்பு துரத்தல் என்று நம்மைத் திரில்லர் திசை மாற்றி விடுகிறார் இயக்குநர்.நாக சைதன்யா ஆக்ஷனில் சென்டிமென்ட்டில் அசத்துகிறார்.கீர்த்தியோ அழகுத் தோற்றத்தில் வந்து அதை ஈடு செய்கிறார்.கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார்.

ராஜூ என்கிற பாத்திரத்தில் வில்லனாக வருகிற அரவிந்தசாமி எதற்கும் கலங்காத துணிவுள்ள தாதாவாக அனாயாசமான நடிப்பைக் காட்டி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை வாங்குகிறார்.

முதலமைச்சர் தாட்சாயினியாக வரும் பிரியாமணி சிறிது நேரம் வந்தாலும் அந்தப் பாத்திரத்தில் ஈர்க்கிறார்.அப்பாத்திரத்தில் அதிகாரத்திற்குரிய கம்பீரத்தைக் காட்டுகிறார். சரத்குமார் உயர் போலீஸ் அதிகாரியாக  எடுப்பான தோற்றத்தில் மிடுக்காக வருகிறார். அலட்டிக் கொள்ளாமலேயே ஆக்சன் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார். பிரேம்ஜி வழக்கம்போல தனது சேட்டைகள் மூலம் காமெடி செய்கிறார்.படத்தில் ராம்கி எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் வருகிறார். யாரும் எதிர்பாராத வேலையைச் செய்கிறார்.

கதை முழுக்க ஆந்திராவில் நடப்பது போல் அமைக்கப்பட்டு உள்ளது.படம் முழுக்க ஓடிக்கொண்டும் துரத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கிளைமாக்சுக்கு முந்தைய துரத்தல் காட்சிகள் நீளமானவையும் கூட.

வில்லனைச் சாகவிடாமல் காப்பாற்ற நினைக்கும் ஒரு கதாநாயகனின் கதை என்று வெங்கட் பிரபு சிந்தித்திருக்கும் ஒன்லைன் சுவாரஸ்யமானது. ஆனால் காட்சிகளில் வேறு படங்களில் பார்த்த சாயல் இருப்பது படத்தின்  பலவீனம். தந்தை நாகார்ஜுனா நடித்த ‘இதயத்தை திருடாதே’ படத்தில் வந்த ‘விடிய விடிய நடனம் சந்தோஷம்’ பாடலை ரீமிக்ஸ் செய்து மகன் நாக சைதன்யாவின் இப்படத்தில் பயன்படுத்தி இருப்பது வெங்கட் பிரபுவின் டச். இது இரு தலைமுறைகள் இணைந்த உணர்வைத் தருகிறது.

வெங்கட் பிரபு ஆக்சன் மசாலாவாக தெலுங்கு ரசிகர்களை முன்னிட்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் .தன் பாணியிலிருந்து மாறி வெளிப்பட்டுள்ளார்.

 ’கஸ்டடி’ ஒரு பரபரப்பான திரில்லர் முயற்சி அதில் ஆந்திர வாசனையுடன் வெங்கட் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.